கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரையும்   விட கூடுதல் அதிகாரமும் முக்கியத்துவமும் உடைய ஒருவராக கருதப்படுவதாலேயாகும். காரணம் உத்தியோக பூர்வமான அழைப்புக்களின் பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்ற சந்திப்புக்களில் அவர்களுக்கு இணையாக சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்வதுண்டு.

அது மட்டுமன்றி வேறு சந்தர்ப்பங்களில் ஏனைய தலைவர்கள் அழைத்துச் செல்லப்படாது சுமந்திரன் அவர்களை  மட்டும் சந்திப்புக்களுக்கு சம்பந்தன் அவர்கள் அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக் குழுவின் உறுப்பினராகவும் சுமந்திரன் அவர்கள் உள்ளார். அந்த அடிப்படையிலேயே கனடாவில் அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த உரையின் ஆரம்பத்தில் தற்போது தாயகத்திலுள்ள களநிலைவரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். குறித்த உரையில் பல்வேறு கோணங்களில் மக்கள் அனுபவிக்கும் மனிதஉரிமை மீறலகள், துன்பங்கள், துயரங்கள், தாயகத்தில் சிறீலங்கா அரசு புரியும் சிங்கள மயப்படுத்தல், இராணுவமயப்படுத்தல் போன்ற அக்கிரமங்கள் அநியாயங்கள் அனைத்தையும் குறுகிய நேரத்தினுள் சுருக்கமாகவும் ஆனால் மிகத் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே சிறீலங்கா பாராளுமன்றத்தில் 2011 யூலை 7ம் திகதியும், 2011 அக்டோபர் 21 ம் திகதியும் சிறீலங்காவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் நிலவர அறிக்கை என்ற தலையங்கத்தில் இரண்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். அவரது இந்த முயற்சி ஏற்கனவே தமிழினத்திற்கு எதிராக தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்புச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துகின்ற வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், மனிதாபிமான அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அநியாயங்களை ஆவணப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள விபரங்களை நாம் வரவேற்பதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது பேச்சின் இரண்டாவது கட்டமாக மேற்சொன்ன பாதிப்புக்கள், அநியாயங்கள் இடைநிறுத்துவது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உரையாற்றினார். இந்த நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயங்கள் உரிய முறையில் இடம்பெறுவதற்கு, அதாவது நடைபெற்றதற்கும் நடைபெறுவதற்கும் மீள்நல்லிணக்கம் அவசியம் என்று கூறுகின்றார். இவற்றிற்கெல்லாம் இனப்பிரச்சினைக்குரிய அடிப்படையான காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும் என்றும் அதற்கு தீர்வும் காணப்படல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்துவதென்பது என்பது நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதி பெற்றுக் கொள்ளுதலும் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ளுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும்போதே உண்மையான மீள்நல்லிணக்கம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். தத்துவரீதியாக சுமந்திரன் அவர்கள் மேலே கூறியுள்ள விடயங்களுடன் முரண்பட முடியாது. ஆனால் அவர்கூறும் இன மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பதன் பிரதான இரு விடயங்களான, நீதி நியாயங்களை அடைந்து கொள்ளுவது தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்வது தொடர்பாகவும் அவர் முன்வைத்துள்ள ஆபத்தான அணுகுமுறைகள் பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

உலகின் ஏனைய இடங்களில் இனங்களுக்கிடையில் மீள்நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள இடங்களை எடுத்துப் பார்த்தால், அநியாயங்கள் செய்த ஆட்சி கவிழ்ந்து, அநியாயங்கள் செய்த ஆட்சியாளர்களது கொள்கையை நிராகரிக்கும் புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே அத்தகைய முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த விடயத்தை சுட்டிக்காட்டியவாறு தொடர்ந்து அவர்கூறும் விடயம் யாதெனில், இலங்கையை பொறுத்தவரை அநியாயங்கள் செய்த ஆட்சியே தற்போது அதிகாரத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் உங்களுக்கு (புலம்பெயர் தமிழர்களுக்கு) ஓர் விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த விடயத்தினை நீங்கள் ஆழமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கூறி பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும், ராஐபக்சவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இராணுவத் தளபதிகளுகு எதிராகவும், மேற்கொள்ளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும், ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளும், சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசாங்கத்தினதும், ராஐபக்கசவின்தும் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்கவே  செய்கின்றது என்றும் கூறியுள்ளார். இந்த விடயத்திற்கு நாம் ஓர் தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது  உரையூடாக அவர் கூற முற்படும் விடயம் நீதிநியாயம் பெறுவதற்கும் தீர்வு பெறுவதற்கும் முதற்கட்டமாக ஆட்சி மாற்றம் தேவை என்பதாகும். அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆட்சியிலுள்ள ராஐபக்சவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகள் ராஐபக்சவின் செல்வாக்கை வளர்ப்பதாகவே அமைக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு செயற்பட்டால் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி பெறும் நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கருத்துக்களை கூறுவது இது முதற் தடவையல்ல.

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலண்டன் கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது, போர்க் குற்ற விசாரணைகளை வலியுறுத்தும்போது புலம்பெயர் தமிழ் மகக்ள் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் போரில் ஈடுபட்டது இராணுவம் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர். சிறீலங்கா அரசுக்கு எதிராக மட்டும் விசாரணையை கோரமுடியாது புலிகளுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு நீங்கள் தயாரா? இல்லை என்றால் நீங்கள் அதனை வலியுறுத்துவதனை பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனை விடவும், ஏப்ரல் 2ம் திகதி, 2010 அன்று யாழ்ப்பாணம் டேவிட் றோட்டில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் சுமந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்று புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் அவர்கள், புலிகள் அழிக்கப்பட்டமை தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், தன்னைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் தவறு என்றும், ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமையை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போலவே அக்கருத்துக்கள் அமைந்திருந்தன.

அத்துடன், விக்கிலீக்ஸ்(Wikileaks) ஊடாக நாம் அறியக்கூடியது யாதெனில், சிறீலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் அவர்கள், திரு.சம்பந்தன் அவர்களுடனான சந்திப்பொன்றில் போர்க்குற்றம் தொடர்பாக எத்தகைய கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும் என மீண்டும், மீண்டும் வினாவியதற்கு, சம்பந்தன் அவர்கள் பதிலளிக்காது தொடர்ச்சியாக மௌனம் காத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தொகுத்துப் பார்க்கையில், போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்றும்,  நீதி நியாயங்கள் வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கூறிவருவது  போர்குற்றம் போன்ற விடயங்களில் தாம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது போன்று தமிழ் மக்களை ஏமாற்றி நம்பவைத்து பிறசக்திகளின்   நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றவுமே ஆகும்.  அத்துடன், நடைமுறை ரீதியில் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீனமான விசாரணையை இல்லாமல் செய்வதே கூட்டமைப்பினரின் இரகசிய நிகழ்ச்சி நிரல் என்பதும் தெளிவாகின்றது.

போர்க்குற்ற விசாரணையை கைவிடும் பாதையில் தாமும் செல்வதுடன், தமிழ் மக்களையும் விரும்பி கைவிடச் செய்யும் பாதையில், கொண்டு செல்வதே கூட்டமைப்பினரின் மறைமுக நோக்கம் என்பதனை எமது  மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  தமிழ் மக்களாக விரும்பி சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கைவிடச் செய்வதற்கு இன்னும் பலகாரணங்களை கூறிக் கொண்டு, கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் பல்வேறு கோணங்களில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு அவர் கூறும் இன்னுமொரு விடயம் யாதெனில்,  தமிழ் மக்கள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டுமாம். அதாவது நேரடியாக சிங்கள மக்களிடம் சென்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது, என்ன வேண்டும் ஏன் வேண்டுமென்ற நியாயங்களை தெளிவுபடுத்த வேண்டுமாம். தமிழ் மக்கள் நாட்டைப் பிரிப்பதற்கு முற்படுகின்றார்கள் என்று சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பொய்களை கூறி வருகின்றனர். அதனால் தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்;வைக்காண வேண்டும் என்பதாகும் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளோம்  என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவ்விடயங்களை நேரடியாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தானது சிங்கள மக்கள் முட்டாள்கள், அவர்களுக்கு தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்பதும், நடைபெறுகின்றதென்பதும், என்ன வேண்டும், என்பதும் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. அத்துடன், இது வரை காலமும் தலைமை வகித்த தமிழ் தலைவர்களுக்கு (தந்தை செல்வா உட்பட) சிங்கள மக்களுக்கு எமது பிரச்சினையை விளக்கும் எந்தகைய திறமையும்;, ஆற்றலும் இல்லை என்பது போலவும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள  உறுப்பினர்களை விட திறமையான சிங்கள அறிவும் அரசியல் அறிவும் இருக்கும் விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற நபர்களால் கூட புரிய வைக்க முடியாததை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கப்போகின்றார் என்ற தொனிப்படவே அவரது கருத்துக்கள் தென்படுகிறது. இக்கருத்தானது, தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். தமிழர்கள் தனிநாடு கேட்கின்றனர் என்றே சிங்கள மக்கள் கருதுகின்றனர் என்றும், தனிநாட்டுக்குப் பதிலாகவேறு தீர்வை ஏற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக உள்ளனர் என்பது சிங்கள மக்களுக்கு தெரியாது என்றும்  அதனை நாம்(த.தே.கூ) சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இக்கருத்து சுமந்திரன் அவர்களது தனிப்பட்ட கருத்து என்றால், அவரது அரசியல் அனுபவம் இன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இதுவே கூட்டமைப்பினரின் கருத்தாக இருந்தால் அது பாரதூரமான விடயமாகும். ஏனெனில், 1970 ஆம் ஆண்டு,  தேர்தலில் போட்டியிடும் தனிநாட்டை வலியுறுத்தும் நபர்களையும் கட்சிகளையும்  நிராகரிக்குமாறும் சமஸ்டியை வலியுறுத்தும் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரிக்குமாறும் தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி வெளிப்படையாக அதன் தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தி போட்டியிட்டு, வெற்றியும் பெற்றிருந்தது. இது சிங்கள மக்கள் அறியாத விடயமல்ல. சமஸ்டி தனிநாடு இல்லை என்பது சிங்கள மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அத்துடன் 70 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துபவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் சமஸ்டியை வலியுறுத்தும் தம்மை வெற்றிபெறச் செய்யுமாறும் கோரி போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வநாயகம் அவர்கள் பற்றி சிங்கள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தனிநாட்டுக்கு முற்றிலும் எதிரானவரும்  சமஸ்டியை கூட கொடுக்க தயாரில்லாதவருமான ரணில் விக்கரமசிங்க புலிகளுடன் ஒப்பந்தம் செய்தமைக்காக, அவர் சமஸ்டியை கொடுக்கப்போகிறார் என்று கருதிய சிங்கள மக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து, இன்றுவரை அவரை ஓரம் கட்டியுள்ளனர். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமைகள் மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்றும் தனிநாடு உருவாககுவதனை தான் விரும்பவில்லை என்றும் கூறிவரும் விக்கிரமபாகு கருணாரட்ண தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேற்கூறிய இரு சம்பவங்களுக்கும் காரணம் ஒன்றாகவே உள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம் சிங்கள மக்கள் தனிநாட்டை விரும்பவில்லை என்பது  மட்டுமல்ல. தமிழ் மக்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதனை அவர்கள் விரும்பவில்லை. இதற்குக் காரணம் இலங்கை ஓர் பௌத்த சிங்கள நாடு என்றும், அதிகாரங்கள் பௌத்த சிங்களவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டுமென்றும் சிங்கள மக்கள் விரும்புகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் இலங்கைத் தீவின் ஏதாவதொரு பகுதியிலாவது உரிமைகோர இடமளித்தால், பிராந்தியத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்கள் பிராந்தியத்தில் சிறுபான்மையாக உள்ள சிங்கள பௌத்தர்களை விழுங்கிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

நான் ஏற்கனவே எனது முந்தைய பத்திகளில் குறிப்பிட்டது போல, அதாவது சிங்களவர்களை பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் தமிழருக்கு உரிமையை எப்பொழுது அங்கீகரிக்கின்றார்களோ, அன்றய தினம் அவர்களது இனத்தின் இருப்பின் அழிவுக்கு முதற்படியாக அமையுமென அஞ்சுகின்றனர். ஆகவே, அவர்களை மாற்றுவதற்கான நிர்ப்பந்தத்தை உண்டாக்கினாலே தவிர, எந்த நியாயத்தை கூறினாலும் அவர்களாகவே விரும்பி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இந்த விடயத்தினை கூட்டமைப்பினர் புரிந்தும் புரியாதது போல செயற்படுவது மிகவும் ஆபத்தான விடயமாகும். தனது உரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்கள் தொடர்பாகவும், சிங்கள அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக  வெளிபடையாகவும், கடுமையாகவும் கூறுவதன் மூலம், தாம் தமிழ் மக்களது நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று தமிழ் மக்களை நம்பவைத்து, இவ்வாறு தம்மை  நம்பிய மக்களை ஏமாற்றி, தாம் பிறசக்திகளது நலன்களை நிறைவேற்றும் பாதையில் கொண்டு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஓராணியாக நின்று முயல்வது பற்றி தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மீள்நல்லிணக்தின் அடுத்த கட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்கான அணுகுமுறைகள் என அவரது உரையில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பாக அடுத்த பத்தியில் ஆராய்வோம்.

 - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment