இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் ஒத்துழைப்புடன் வன்னிப் போரில் வெற்றி அடைந்த இலங்கை அரசு போருக்குப் பின் தனக்கு உதவிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக சமயோசிதமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. வன்னிப் போரில் ஏற்பட்ட வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவு காத்திரமானதாக இருந்த தாயினும், போருக்குப் பின் இந்திய தேசம் தான் கூறுவதைக் கேட்கும் அளவுக்கு தன்னை கட்டுப்படுத்தும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு உணர்ந்து கொண்டது.
இதற்காக இலங்கை அரசு அவசர அவசரமாக இந்தியாவின் பகை நாடுகளான சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் உறவை ஏற்படுத்தியது. அதிலும் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதில் இலங்கை வெற்றியும் கண்டது. தன்னை மீறி இலங்கை அரசு சீனாவுடன் உறவை ஏற்படுத்தும் என இந்தியா ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இருந்தும் தனது நாட்டுக்குள் சீனாவுக்கு நுழைவு கொடுத்ததன் மூலம் தன் மீதான இந்தியாவின் அதிகார பலத்தை இலங்கை அடக்கிக் கொண்டது.
இப்போதுகூட, இனப்பிரச்சினைக்கான தீர்வில் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக இந்திய அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவிடம் தெரிவித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக் கூறியுள்ளார். சீனாவுடன் உறவை ஏற்படுத்தியதன் காரணமாக இந்தியாவுக்கு திட்டவட்டமாக கூறிவிடும் பலத்தை இலங்கை பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் கூறியபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா என்ன கூறியிருக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக! சீனாவுடன் உறவை வலுப்படுத்திக் கொண்ட இலங்கை அரசை கைவிட முடியாத அளவில் பின் தொடரும் கட்டத்தில் இந்தியாவின் தலைவிதி உள்ளது.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவை பற்றிப் பிடித்துக் கொண்டு இருப்பது அர்த்தமற்றது.எனவே, இந்தியாவுடனான உறவு அவசியம் என நினைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவுக்கு அப்பால் உலக அரங்கில் இருக்கக் கூடிய ஈழத்தமிழர்களுக்கான உதவு கரங்கள் பற்றி இம்மியும் சிந்திக்காமை வேதனைக்குரியது. சூழ்நிலைக்கேற்ப , நாமும் அரசியல் ராஜதந்திரங்களை - வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றைப் பிடித்தால் அதனை ஒருபோதும் கைவிடக்கூடாது என்ற நினைப்புத்தான் தமிழினத்தின் பின்னடைவுக்கான மூல காரணமாகும். எனவே இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார். அவர் இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவார் என்று கற்பனை செய்யாமல் வருகிறவர்கள்- அழைக்கிறவர்கள் எல்லாம் தத்தம் கருமங்களுக் காக இயங்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம். மாற்றம் என்பது மிகவும் அவசியம். இந்த மாற்றம் அரசியல், சமூகம், பொருளாதாரம் என விரிவு நிலைப்பட வேண்டும்.
இந்த மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மட்டுமல்ல.தமிழ் மக்களுக்கும் தேவையானது. இதுதான்.இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற எங்கள் நினைப்பும் எங்களை குட்டிச் சுவராக்கின என்பதை மாற்றத்தின் முதற்படியாகப் புரிந்து கொள்வோம்.
நன்றி வலம்புரி
கட்டாயமாக மாற்றம் வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDelete