"பார்த்தசாரதியில் தொடங்கி எஸ்.எம்.கிருஸ்ணா வரை" : உருவங்கள் தான் வெவ்வேறே தவிர, பெயர்களின் அர்த்தம் ஒன்று தான்......!

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய இந்தியா, அதன் மூலம் தீர்க்கப்படும் என்று கூறிய இனப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க முனையவில்லை. காலத்துக்குக் காலம் இந்தியாவின் அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து சென்றாலும், அவர்களால் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து காத்திரமான எந்த உதவியையும் வழங்க முடியவில்லை. பிராந்திய வல்லரசு- பூர்வீக ரீதியில் மோதல்களில் சம்பந்தப்பட்டோருடன் கொண்டுள்ள தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் இந்தியா அந்தப் பொறுப்பை நீதியாக- பக்கம் சாராமல் நின்று நிறைவேற்றவில்லை. முன்னர் இந்தியாவைச் சார்ந்திருந்தது இலங்கை. இப்போது இலங்கையைச் சார்ந்திருக்கிறது இந்தியா. இதுதான் இந்தியா இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காமல் இருப்பதற்கான காரணம். இந்தியாவும் சீனாவும் முட்டி மோதுகின்ற போதும், இலங்கை விவகாரத்தில் மட்டும் இந்த இரண்டு நாடுகளும் விட்டுக் கொடுத்துப் போகின்றன. பாதுகாப்பு ரீதியாக இலங்கையைச் சார்ந்திருப்பதால் தான், இந்தியா பல விடயங்களில் மௌனமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகாரப் பகிர்வு குறித்தோ 13வது திருத்தம் குறித்தோ எஸ்.எம்.கிருஸ்ணா வந்து அழுத்தம் கொடுத்து விட்டுப் போவார் என்று நம்புவதற்கில்லை. எத்தனையோ தடவைகள் கிருஸ்ணா வந்து போய் விட்டார். பார்த்தசாரதியில் தொடங்கியது இந்த வருகை. அப்போது ஜி.பார்த்தசாரதி இப்போது எஸ்.எம்.கிருஸ்ணாவாக வருகிறார். உருவங்கள் தான் வெவ்வேறே தவிர, பெயர்களின் அர்த்தம் ஒன்று தான்.


பார்த்தசாரதியில் தொடங்கிஎஸ்.எம்.கிருஸ்ணா வரை..!


இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அடுத்தவாரம் கொழும்பு வரப்போகிறார். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதுமே, “கிருஸ்ணா என்ன, ஒபாமாவே வந்தாலும் அதிகாரப்பகிர்வுக்கு சாத்தியமில்லை“ என்று முழங்கித் தள்ளியிருக்கிறார் கலாநிதி குணதாச அமரசேகர. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்று இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்ட கையோடு எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், முக்கியமாக அதிகாரப்பகிர்வு குறித்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது. வடக்கில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட முதலாவது தொகுதி வீடுகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வரும் எஸ்.எம். கிருஸ்ணா அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அவர் அதிகாரப்பகிர்வு பற்றி தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவ்வாறு தான் ஊடகங்களிலும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. 

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு அப்பாற்பட்ட தீர்வு நோக்கிச் செல்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் தான் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் எஸ்.எம்.கிருஸ்ணா இந்தியாவின் சார்பில் அழுத்தங்களைக் கொடுப்பாரா என்ற கேள்வி பலமாக இருக்கவே செய்கிறது. 

வடக்கு,கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்று மகிந்த கூறியிருந்த நிலையில், கடந்தவாரம் ஒரு குத்துக்கரணம் அடித்தது அரசாங்கம். வடக்கு, கிழக்கு இணைப்பு, காணி,பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசத் தயார் என்று அறிவித்தது. இந்தியாவின் அழுத்தத்தினால் தான் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக பரவலாக கதை உலாவியது. இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இந்தியா எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், அதேவேளை இந்தியா உள்ளிட்ட எந்த நாடுமே இலங்கைக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறியிருந்தார். 

ஆக, 

இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 13 வது திருத்தம் குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்தியா அவ்வாறு அழுத்தம் கொடுக்காது என்ற நம்பிக்கையில் இலங்கை அரசு இருக்கிறது. 

அண்மையில் 13வது திருத்தச் சட்டம் குறித்த கேள்வி எழுந்தபோது, “அதனை இந்தியா வழங்கவில்லை- இலங்கை அரசே உருவாக்கியது. 13வது திருத்தத்துக்கு அமைவான தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தாது“ என்று எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருந்தார். 

அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு- 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாது என்று சில மாதங்களுக்கு முன்னர் கூறிய அது எஸ்.எம்.கிருஸ்ணா, இப்போது கொழும்பு வரும் போது அந்த விவகாரம் பற்றிப் பேசுவாரா என்பது முக்கியமான கேள்வி.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களில் அதிகாரப்பகிர்வு குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ளன. காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வதும், வடக்கு கிழக்கு இணைப்பும் நடைமுறைச் சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. ஆனாலும் அதுபற்றிப் பேசலாம் என்கிறது. இந்தநிலையில் அதிகாரங்களைப் பகிரத் தயாராக இருக்கிறதா அல்லது வெறுமனே அதுபற்றிப் பேசிக் காலத்தைக் கழிக்க நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் இருதரப்பையும் சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அதிகாரப்பகிர்வு பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. 

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா தனக்குள்ள பொறுப்பை இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியாவிலேயே வலுப்பெற்று வருகிறது. 

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய இந்தியா, அதன் மூலம் தீர்க்கப்படும் என்று கூறிய இனப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க முனையவில்லை. காலத்துக்குக் காலம் இந்தியாவின் அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து சென்றாலும், அவர்களால் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து காத்திரமான எந்த உதவியையும் வழங்க முடியவில்லை. பிராந்திய வல்லரசு- பூர்வீக ரீதியில் மோதல்களில் சம்பந்தப்பட்டோருடன் கொண்டுள்ள தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் இந்தியா அந்தப் பொறுப்பை நீதியாக- பக்கம் சாராமல் நின்று நிறைவேற்றவில்லை. 

இதற்கான காரணம் என்ன? என்பதை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அண்மையில் ‘பிஸ்னஸ் ஸ்ரான்டட்‘ இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 

“பாதுகாப்பு ரீதியாக நாங்கள் இலங்கையைச் சார்ந்திருக்கிறோம். அங்கு பாதுகாப்பு பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இருநாடுகளையும் பாதிக்கக் கூடியவை. எவ்வாறாயினும் நாங்கள் இலங்கையை வலப்புறம் வைத்துப் பார்க்கவே விரும்புகிறோம்.“  என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

முன்னர் இந்தியாவைச் சார்ந்திருந்தது இலங்கை. இப்போது இலங்கையைச் சார்ந்திருக்கிறது இந்தியா. இதுதான் இந்தியா இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காமல் இருப்பதற்கான காரணம். இந்தியாவும் சீனாவும் முட்டி மோதுகின்ற போதும், இலங்கை விவகாரத்தில் மட்டும் இந்த இரண்டு நாடுகளும் விட்டுக் கொடுத்துப் போகின்றன. இருதரப்புக்கும் தாங்கள் வெளிப்படையாக இருப்பதால், ஒன்றின் உறவில் மற்றது சந்தேகம் கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், எஸ்.எம்.கிருஸ்ணாவின் கருத்து அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. சீனாவுடனான இலங்கையின் உறவு கவலையளிப்பதாகவே இருந்தாலும், அவர்கள் மீது தமது கருத்தைத் திணிக்க முடியாதுள்ளது என்ற ஆற்றாமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

பாதுகாப்பு ரீதியாக இலங்கையைச் சார்ந்திருப்பதால் தான், இந்தியா பல விடயங்களில் மௌனமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகாரப் பகிர்வு குறித்தோ 13வது திருத்தம் குறித்தோ எஸ்.எம்.கிருஸ்ணா வந்து அழுத்தம் கொடுத்து விட்டுப் போவார் என்று நம்புவதற்கில்லை. எத்தனையோ தடவைகள் கிருஸ்ணா வந்து போய் விட்டார். பார்த்தசாரதியில் தொடங்கியது இந்த வருகை. அப்போது ஜி.பார்த்தசாரதி இப்போது எஸ்.எம்.கிருஸ்ணாவாக வருகிறார். உருவங்கள் தான் வெவ்வேறே தவிர, பெயர்களின் அர்த்தம் ஒன்று தான். 

பார்த்தசாரதி, பண்டாரி,டிக்சிற் என்ற வரிசையில் இப்போது கிருஸ்ணா. அவர்களைப் போலவே இவரும் வந்து விட்டுப் போவார். இதற்கு மேல் பெரிதாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படி எதிர்பார்ப்பது தமிழர் தரப்பை பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாகி விடக் கூடும்.இந்தியாவின் கடந்தகால அணுகுமுறை கற்றுத்தந்த பாடம் இது. 

நன்றி கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment