மீட்சிக்கான சமூக விழிப்புக் குழுக்களின் தேவை

யுத்தத்தின் பின்பான வாழ்வியல் என்பது சிக்கல் நிறைந்துள்ளதாக இருந்துள்ளதை உலக வரலாற்றில் இருந்து அறிய முடியும். இந்த வரலாற்று உண்மைகள் எங்கள் மண்ணுக்கும் பொருத்துடையதாக இருப்பதை மறுப்ப தற்கில்லை. யுத்தத்தின் பின்பான வாழ்வியல் சிக்கல் நிறைந்ததாக, இடர்பாடு மிகுந்ததாக இருக்கின்ற வேளையில், அதில் இருந்தான மீட்சி என்பதைப் பொறுத்தே அபிவிருத்தி என்பதன் நிலைபேறு தங்கியுள்ளது. உலக யுத்தத்தில் மிகப்பெரும் அழிவைச் சந்தித்த ஜப்பானின் எழுச்சி என்பது, அங்கு நடந்த ஒழுங்குபடுத்தலும் மக்களின் மனவுறுதியும் இணைந்த வலிமையில் ஏற்பட்டதாகும்.

அதேபோன்றுதான் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து எழுச்சி பெற்ற நாடுகளின் நிலைமையும் உள்ளது. எனவே எங்கள் வடபுலத்திலும் யுத்த நிலைமைகள் ஏற்படுத்திய அழிவுகள், இழப்புகளின் மத்தியில் தொடர்கின்ற கலாசார பிறழ்வுகள், குடும்ப முறிவுகள், தங்கி வாழ்வோரின் பரிதாப நிலைமைகள், தலைவனைப் பறிகொடுத்த குடும்பங்களின் துயரங்கள் என்பன எங்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இங்குதான் பொறுப்புடன் கூடிய சமூக சிந்தனை தேவைப்படுகின்றது. சமூக சிந்தனை என்பது அரச அமைப்புக்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், சனசமூக நிலையங்கள் எனப் பட்டிதொட்டியெங்கும் பரவி எழவேண்டும். அப்போதுதான் போருக்குப் பின்பான அபிவிருத்தி, இனத்துவ எழுச்சி, அறிவு பிரவாகம் என்பன சாத்தியமாகும். எனினும் துரதிர்ஷ்டவசமாக போருக்குப் பின்பான எங்கள் வாழ்வியல் இழப்புகள் குறித்து நாம் அக்கறையற்றவர்களாக இருந்துவிட்டோம் என்றே கூறவேண்டும். வீதியைத் திருத்த வேண்டும், பாலத்தைக் கட்டவேண்டும், புகையிரதப் பாதையை மீள அமைக்க வேண்டும் என்ற கீழ் கட்டுமானம் பற்றி சிந்தித்த அளவிற்கு சமூக குடும்ப உறவு,  கலாசாரப் பேணுகை,  கூட்டுக் குடும்பத்தின் அவசியம், பண்டிகைகளின் அனுஷ்டிப்பு,  பெரியவர்களைக் கனம் பண்ணும் பண்பு என்பது தொடர்பில் நாம் அக்கறையற்றவர்களாக இருந்துள்ளோம்-இருக்கின்றோம் என்ற செய்தி வேதனைக்குரியதே.

இன்று எமது சமூகத்தில் நடக்கக்கூடிய கடத்தல்கள், பழிவாங்கல் படலங்கள், காழ்ப்புணர்வுகள்,  நன்றி மறப்புகள் என்பன தலைவிரித்தாடுவதற்கும் குடும்ப அமைப்புகள் குலைவுற்றுப் போவதற்கும் சமூக விழிப்புணர்வு இன்மையே அடிப்படைக் காரணமாகும்.  ஆகவே, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் மீட்சியும் எழுச்சியும் பெறவேண்டுமாயின், மக்கள் மத்தியில் நம்பிக்கையும் அறிவுத் தேடலுக்கான வழிகாட்டல்களும், சமூக நெருக்கங்களையும் கட்டி வளர்ப்பதற்கான முயற்சிகளும் தேவை.

அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகள், பிள்ளைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்புகள் என்பன கவனத்தில் கொள்ளப்படுவது கட்டாயமானதாகும். இது தொடர்பில் சமூக விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். அதிலும் இளைஞர்கள் அடங்கிய குழுமங்கள் உருவாகும்போது அவர்களின் வழிகாட்டல்கள் நேர்மையானதாகவும் யதார்த்தத்துடன் பொருந்துவதாகவும்,  தூய சிந்தனை கொண்டதாகவும் இருக்கும். எனவே, போருக்குப் பின்பான எமது அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிப்பதற்கு தேவையான வழிகாட்டல்களை ஏற்படுத்துவது  மிகவும் அவசியமானதாகும்.

நன்றி வலம்புரி
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment