இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச மத்தியஸ்தம் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலங்கடந்தே உணர்ந்து கொண்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பில் அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த் தையை ஆரம்பிக்க இருந்தவேளை, அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற கருத்தை இதே பத்தியில் எழுதியிருந்தோம்.
தேவையாயின் அதனை ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்க முடியும் என்பதையும் இவ்விடத்தில் கூறித்தான் ஆகவேண்டும். இலங்கை அரசுடன் எந்தத் துணையும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றமை மகாதவறு. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதை நிரூபிப்பதை மட்டுமே அது கருத்தில் கொண்டது. சர்வதேச மத்தியஸ்தம் பற்றி தாம் ஏதும் கதைக்கப்போய் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இழக்க வேண்டியதாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்பட்டது.
முழுக்கமுழுக்க பாராளுமன்றக் கதிரை மீது கொண்ட ஆசை காரணமாக கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தால் இன்று நிலைமை மோசமாகி விட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலப் பகுதியில் சர்வதேசத்தின் போக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் வலிமை குறைவடைந்து செல்கிறது. இந்நிலையில், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு கிடைக்கக்கூடிய முடிபு சாதகமாக அமைவது சந்தேகத்திற்குரியதே.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் இத்த கையதொரு கோரிக்கையை விட்டிருந்தால் அதனை அரசும் சர்வதேச சமூகமும் சாதகமாகப் பரிசீலித்திருக்கும். அத்தகைய சூழமைவில் பேச்சுவார்த்தை ஒரு படிமுறையில் நகர்வதற்கான சாத்தியம் இருந்திருக்கும். ஆனால், கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கத் தவறியமைக்கு கூட்டமைப்பின் குறுகிய நோக்கமே காரணம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே, இப்போது கூட சர்வதேச மத்தியஸ்தத்தை கேட்கும் கூட்டமைப்பு அதற்காக காத்திரமான அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும். இதற்கு மேலாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதும் கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் வெறும் வார்த்தை வடிவில் கோரிக்கை இருக்குமாக இருந்தால், பாவம் தமிழ் மக்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவும் இருக்காது.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment