கண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள். தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்துபோன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போதுதான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும். சிங்கள ஊடகவியலாளரான சஞ்ஜீவ லொக்குலியன வன்னிக்கான தனது பயண அனுபவத்தைக் கட்டுரையாக்கி இருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு மொழியாக்கம்.
இன்றைய நாள்களில் தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலையில் உங்களால் மின்னல் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கும். கொட்டாவ என்ற இடத்திலிருந்து காலி வரையான இந்த நெடுஞ்சாலைப் பயணத்துக்கு ஒரு மணிநேரமே போதும். ஆனால், கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியிலுள்ள உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரையிலான 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க எமக்கு 3 மணி நேரம் தேவைப்பட்டது.
தென்பகுதி வீதிப் பயணம் இத்தனை அதிவேகமாக அமையும் போது வடபகுதி வீதிப் பயணம் மந்தகதியில்கூட அமைவதாகக் காணோம். அத்தனை சிரமம் மிக்க வீதிப் பயணம் அது.
"வடக்கின் வசந்தம்" திட்டம் மூலம் வழங்க முயன்ற வீதி அபிவிருத்தி அண்மையில் பெய்த மழையை அடுத்து சேற்றுப் பாதைகளாக மாறியுள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் தார்பூசி மெழுகப்பட்ட வீதிகள் யாவும் மழை நீரில் அள்ளுண்டு போனபின்னர் வீதிகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன.
வன்னியில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் இடம் பெயர்ந்தமைக்கு ஒப்பானதாக இது இருக்கிறது.
வன்னியில் பார்த்த இடமெல்லாம் போரின் கோர வடுவைக் காணக்கூடியதாக உள்ளது. சகல குடும்பங்களிலும் ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினராவது உயிரிழந்தோ, காணாமற்போயோ இருக்கிறார்கள். இது பொய்யல்ல; நேரில் பார்த்த நிஜம்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தோ காணாமற்போயோ இல்லாதிருந்தால் நிச்சயம் ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்.
எது எப்படியோ வன்னியில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள், அதற்கு முன்னர் இருந்த தமது உறுப்பினர்களில் ஒருவரைத்தானும் இழக்காமல் இல்லை.
முகமலர்ச்சி அற்றுப்போய், எதிர்ப்பார்ப்புக்கள் சிதைந்த நிலையில், நடைப்பிணங்கள் போல் வாழும் இன்றைய வன்னிப் பொதுமக்கள் இப்போதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பின் மத்தியிலேயே வாழ்கின்றனர். தமது இன்றைய அவல வாழ்க்கை நிலை குறித்து வாய் திறந்து சொல்லக்கூட இயலாத நிலையிலுள்ள அந்தப் பகுதிப் பொதுமக்களது குடிசைக் குடியிருப்புக்களைக் கடந்து எமது வாகனம் அந்தத் தெருவில் முக்கி முனங்கியவாறே ஊர்ந்து சென்றது. சில இடங்களில் கால் நடையாகச் செல்லத்தக்க வேகத்தில்கூட வாகனத்தைச் செலுத்த முடியவில்லை.
இரண்டு மணிநேரப் பயணத்தின் பின்னர் நாம் தர்மபுரம் பகுதியில் ஒரு குடியிருப்பின் அருகில் சிறிது நேரம் தரித்து நிற்க வேண்டியிருந்தது. குடியிருப்பு எனக் குறிப்பிட்டதைத் தவறென நினைக்க வேண்டாம். அதனை ஒரு வீடு என எந்த வகையிலும் அடையாளப்படுத்த இயலாது; அதனால்தான் அப்படிச் சொன்னேன். அது வெறுமனே சில தகரங்களை இணைத்து 10 X 12 அடி நீள அகலத்தில் அமைக்கப்பட்ட குடிசை அல்லது கொட்டில். கிடுகுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழங்கியிருந்த தறப்பாள் என்பன அதன் கூரையாகவும் சுவர்களாகவும் அமைந்திருந்தன. அந்தக் குடிசையில் வசிப்போருக்கு கழிப்பறை வசதி என்று தனியாக எதுவும் கிடையாது. ஆண், பெண் பேதமின்றி தமது இயற்கைக் கடன்களுக்கு வெற்றுக் காணியில் உள்ள பற்றைகளைத்தான் அவர்கள் நாடவேண்டியவர்களாக உள்ளனர். இதுதான் அரசின் மீள்குடியமர்த்தும் திட்டத்தின் இலட்சணம்.
அந்தக் குடிசை வீட்டில் அன்று திவசம் இடம் பெறுவதாகக் கூறினார்கள். போரில் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவாக அதனை அவர்கள் செய்தார்கள். குடும்பத்தின் தலைவியான பெண்மணி கோவிந்தன் நாகம்மா, தென்னிலங்கையின் மாத்தறையில் பிறந்து வளர்ந்தவர். 1958ஆம் ஆண்டின் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து தருமபுரத்தில் வாழ்ந்து வருகிறார்.
1958இன் பின்னர் தாம் தேடிவைத்த சொத்துக்கள் அனைத்தையும் வன்னிப் போரில் அந்தக் குடும்பம் இழந்துள்ளது. அவர்கள் தமது வாழ்க்கையில் தேடிய சொத்துக்களை இழந்த இரண்டாவது சம்பவம் இது.
நாகம்மாவின் எட்டுப் பிள்ளைகளில் ஒரு மகனைப் போர் காவு கொண்டுவிட்டது. அவருக்குப் பாடசாலை செல்லும் இரு மகன்கள் இன்னும் இருக்கிறார்கள். இடையிடையே கிட்டும் கூலி வேலையைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். அது தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது.
2009 மே மாதத்தில் போர் முடிந்து விட்டாலும் 2010 ஓகஸ்ட் மாதத்தில்தான் அவர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடிந்திருக்கிறது. இடம் பெயர்ந்திருந்த போது 5,000 ரூபாவும் மீளக்குடியமர்ந்த பின்னர் 18,000 ரூபாவும் மட்டுமே அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காணி உறுதியோ வீடமைப்பதற்கான நிதி உதவியோ வழங்கப்படவில்லை.
போர் முடிவுக்கு வந்து இப்போது இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட போதும் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றம்தானும் ஏற்படவில்லை. தர்மபுரம், விசுவமடு, குமரபுரம், புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு, செல்வபுரம் ஆகிய ஊர்களில் இருக்கும் அனைவருமே நாகம்மாவின் நிலையில்தான் இருக்கிறார்கள். அங்கெல்லாம் தகரங்களும் தறப்பாள்களும் கொண்டமைக்கப்பட்ட குடில்களைத்தான் காணமுடிகிறது.
அந்தப் பகுதி மக்களிடம் போருக்குப் பின்னர் பல கதைகள் இருந்தபோதும் அவை யாவும் ஒரே மாதிரியானவையே. கதாபாத்திரங்கள் மட்டுமே வேறானவை. சில சம்பவங்களும் வேறானவையாக இருக்கலாம். ஆனால், பொதுவில் எல்லோர் கதைகளும் ஒன்றே.
அபிவிருத்தி என்ற பெயரில் பல வேலைத் திட்டங்களுக்காகப் பல கட்டடப் பொருள்கள் வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பினும் இப்போது கூட வன்னித் தமிழ் மக்களின் தலைக்கு மேலே வானமும் காலுக்குக் கீழே தமது பிள்ளைகளின் இரத்த ஆறு ஓடிய நிலமுமே மிஞ்சிக் கிடக்கிறது.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment