இலங்கை அரசபடையைக் காப்பாற்றிய அறிக்கை


வன்னியில் நடந்த இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு தவறிவிட்டது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம் செய்துள்ளது. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவோ பொறுப்புக்கூறவோ இலங்கை அரசு தவறியுள்ளது. மாறாகப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
 இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நிலைமைகள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.
90 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து 676 பக்கங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது: ஊடக அச்சுறுத்தல் தொடர்கிறது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது. மேலும், ஊடகங்கள் மற்றும் குடியியல் சமூகக்குழுக்கள் மீதான அச்றுத்தல்கள் தொடர்கின்றன.
வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிப்பு மற்றும் பாதுகாப்பின்மை பற்றி எழுப்பப்பட்ட பெருமளவு முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தை காப்பற்றியது ஆணைக்குழுவின் அறிக்கை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பரில் வெளியிடப்பட்டபோதும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை இராணுவத்தை அது விடுவித்துள்ளது.

2011இல் பொறுப்புக்கூறுதல் மிகமுக்கிய பிரச்சினையாக இருந்ததுடன் ஊடகங்கள் மீதான தணிக்கை அதிகரித்தது, நீண்டகாலமாக இருந்து வந்த குறைகள் எவற்றுக்கும் தீவிரமாகப் பதிலளிக்கப்படவில்லை.
நீதியற்ற, பலவீன ஆட்சி

நீதியற்ற, பலவீனமாக சட்ட ஆட்சியை, நில அபகரிப்பை, ஊடகத் தணிக்கையை இலங்கையர்கள், ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டனர். இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போர் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து அரச படைகளை விடுவித்துள்ளதுடன், மேலதிக பொறுப்புக் கூறுதல் பற்றிய எந்த உறுதியான அடியையும் எடுத்து வைக்கவில்லை.

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையில் இலங்கை அரசபடைகளின் மீறல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த அறிக்கையில் எதையும் காணவில்லை. சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுவோர் மீதான தாக்குதல்கள் 2011 இலும் தொடர்ந்தன.
உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல் தீவிரவாதச்செயல்

உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டது, நெதர்லாந்து வானொலி ஊடகவியலாளர்கள் இலங்கைப் பொலிஸாரால் துன்புறுத்தப்பட்ட பின்னர் வெள்ளை வானில் வந்தோரால் தாக்கப்பட்டது, அவர்களின் பொருள்கள் கொள்ளையிடப்பட்டது, மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் யாழ்ப்பாணத்தில் காணாமற்போனது என்பனவற்றை தீவிரவாத செயல்களாகவே மனித உரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிடப்படுகிறது.

கருத்து சுதந்திர அடக்குமுறை
இணையத்தளங்களை பதிவு செய்ய இலங்கை அரசு விடுத்த உத்தரவை கருத்து சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாக இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்துக்கான அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் சிறியளவிலேயே உள்ளன எனவும் நல்லிணக்க முயற்சிகள் முடிவடைந்த வரையில் தாமதப்படுத்தப்படுகின்றன எனவும் அது கூறியுள்ளது.
1000 முன்னாள் போராளிகள் நிலைமை என்ன?

பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 1000 முன்னாள் போராளிகளின் நிலைமை என்னவென்று தெரியாத நிலை உள்ளது எனவும், தடுப்பிலுள்ளோர் சித்திரவதை செய்யப்படுவது, மற்றும் தவறாக நடத்தப்படுவது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. 

நன்றி உதயன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment