தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கருத்துகளைக் கொண்ட கூட்டுக் கதம்பமாக இருக்கின்றது என்று கடந்த வாரம் இப் பத்தி கூறியதை மெய்ப்பிப்பது போலக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இப்போது ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். அரசாங்கம் ஏமாற்றுகின்றது என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சில் ஈடுபடுகின்றது என்றும் அரசாங்கத்தின் தந்திரத்தை அம்பலப்படுத்திவிட்டுப் பேச்சிலிருந்து விலகி அடுத்த கட்ட நடவடிக்கைக்குக் கட்சி செல்லும் என்றும் அண்மையில் அவர் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறுவதைப் பார்த்தால், இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கிய நகர்வாகக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அரசாங்கத்தை அம்பலப்படுத்தும் தந்திரோபாயகமாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது. ஆனால், சம்பந்தன், சுமந்திரன் போன்ற தலைவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் வேறு விதமாக இருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுஞுஞூ என்ற விசுவாசமான நோக்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இப்படியான முரண்பாடான கருத்துகளைத் தவிர்த்து திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் கூட்டமைப்புக்குள் இரண்டு விதமான நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இப்போதும் தனிநாடு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வேயொழியத் தனிநாடு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தவர்களும் உள்ளனர். இந்த நிலையையே சென்ற வாரம் இப்பத்தி கூட்டுக் கதம்பம் எனக் கூறியது. இந்த விடயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது மாத்திரமன்றி அதை வெளிப்படையாக மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்று பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் எதைக் கூறுகின்றாரோ தெரியாது. மக்களை அணிதிரட்டி ஒரு போராட்டத்தை நடத்துவது என்று பொதுவாகக் கூறலாம். அது எப்படியான போராட்டம்? ஆயுதப் போராட்டமா? அகிம்சைப் போராட்டமா? ஆயுதப் போராட்டம் வெற்றியளிக்கும் என்று இப்போது யாராவது நினைத்தால் நிச்சயமாக அவர்கள் கனவில் மிதப்பவர்களே. அகிம்சைப் போராட்டம் போராட்டமாக முடியுமேயொழிய வெற்றியளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. எந்த விடயத்திலும் கொள்கையும் அணுகுமுறையும் யதார்த்தத்துக்கு ஒட்டியனவாகவே இருக்க வேண்டும். யதார்த்தத்துக்கு முரணாக இருப்பது அழிவுகளைத் தருமேயொழிய பலனளிக்காது.
இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பதே இன்றைய யதார்த்தம் என்பதை இப் பத்தி பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அதேபோல, அரசியல் தீர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசியல் தீர்வின் ஒவ்வொரு கட்டமும் அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர வேண்டும். நாடளாவிய ரீதியில் நடைபெறும் சர்வசன வாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாது வெற்றியீட்டுவது சாத்தியமில்லை. எனவே அரசாங்கத்துடன் பேசுவது மாத்திரம் போதாது. சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான வழிவகைகள் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம்.
அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவது அரசாங்கத்தின் வேலை என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இது ஒரு பிழையான கருத்து. இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கும் பொறுப்பு உண்டெனினும் தமிழ்த் தலைமைகளுக்குக் கூடுதலான பொறுப்பு அரசியல் தீர்வு முயற்சியில் தடங்கல் ஏற்படுவதால் ஆளுங்கட்சிகளைத் தெரிவு செய்த சிங்கள மக்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. ஆனால், தமிழ்த் தலைமைகளைத் தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு நேரடியான பாதிப்பு உண்டு. எனவே இவ்விடயத்தில் தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு அரசாங்கத்தின் பொறுப்பிலும் பார்க்கக்கூடுதலானது.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைப் பெரும்பாலான சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை உருவாகியதற்குத் தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளே பிரதான காரணமாக உள்ளன. பிரசித்தி பெற்ற சத்தியாக்கிரகத்தின் போது தமிழீழ தபால் சேவையை ஆரம்பித்ததும் சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையிலிருந்து திடீரெனப் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதும் அரசியல் தீர்வுக் கோரிக்கைக்குப் பின்னால் தனிநாட்டு நோக்கம் இருக்கின்றது என்ற சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தன. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களின் பிரசாரம் இச் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
எனவே, சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் தப்பபிப்பிராயத்தைப் போக்க வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்தது. அரசியல் தீர்வுக்கான கொள்கையைத் திட்டவட்டமாக வெளிப்படுத்துவது இப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான வழிகளுள் ஒன்று. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதைச் செய்ய வேண்டும். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு சந்தர்ப்பம். தமிழ்த் தலைவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற வடிவில் இப்போது இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இதையாவது இவர்கள் சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
நன்றி தினக்குரல்
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment