ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுக்கு தமிழ் மக்கள் மீதான பகைமை இன்னமும் தீரவில்லை என்பதை உணரமுடிகின்றது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டது, அந்தப் போரால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது, அவர்கள் இன்னமும் இழப்புகளில் இருந்து மீட்சிபெற முடியாமல் தவிப்பது, இப்படியான இடுங்கண்களை தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வேளையிலும் அவர்கள் மீதான ஆத்திரமும் கோபமும் ஜனாதிபதியிடம் தணியவில்லை என்பதை உணர முடிகின்றது.
உண்மையில் வன்னியில் நடந்தது போன்ற போரை வேறொருவர் நடத்தியிருப்பாராயின் அந்தப் போரில் வன்னியில் நடந்த மிகக் கொடூரமான மனிதப் பேரழிவுகள் ஏற்பட்டிருக்குமாயின் போரை நடத்தியவர், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என எண்ணியிருப்பார். அதுவே மனித இயல்பும் கூட. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ மேலும் மேலும் தமிழ் மக்கள் மீது கடும் கோபம் அடைபவராக இருக்கின்றார். இதனை நினைக்கும்போது ‘பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கென்ன இலாபம்’ என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன. இந்த நாட்டின் ஜனாதிபதி என்பவர் எல்லா மக்களையும் சம கண் கொண்டு பார்ப்பவராக இருக்க வேண்டும்.
அவரிடம் இனம், மதம், மொழி என்ற பிரி பாடல் இம்மியும் இருத்தல் ஆகாது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இன மத மொழி அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இதன் காரணமாக இந்த நாட்டில் இனத்துவ ஒற்றுமை என்பது விரிசல் அடைவதாகவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பகைமை உணர்வுக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்து காரணமா? என்ற வாதப் பிரதிவாதங்களின் மத்தியில், இந்த நாட்டில் சிங்கள மக்கள் ஆளப் பிறந்தவர்கள், தமிழ் மக்கள் வந்தேறு குடிகள். எனவே உண்மையான பெளத்த சிங்களவர் ஒருபோதும் தமிழ் மக்களை உரிமையுடையவர்களாகப் பார்க்க மாட்டார்கள்.அவர்களுக்கு உரிமை கொடுப்பதையும் விரும்ப மாட்டார்கள்.
மேலும் இலங்கையின் ஆட்சியாளர் சிங்கள மக்களின் முழுமையான ஆதரவைப் பெறவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களை அதிஉச்ச பட்சமாக நசுக்குபவராக இருக்க வேண்டும் என்ற கோட்பாடும் நடைமுறையில் உண்டு. எதுவாயினும் இலங்கை என்ற இந்த நாடு அனைத்து வழியிலும் அபிவிருத்தியடைய வேண்டுமாயின்,எதிர்காலத்தில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின், வன்னிப் போர் போன்று இன்னோர் போர் இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின் இலங்கைத் தீவில் இருந்து பேரினவாதப் பேய் துரத்தப்பட வேண்டும். பெளத்த சிங்களப் பேரினவாதப்பேய் ஆட்சியாளர்களிடமும், சிங்கள மக்களிடமும் இருக்குமாயின், கெளதம புத்த பிரான் வந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது சர்வ நிச்சயம். ஆக, பகையும் தீராத கோபமும் அழிவைத் தருமேயன்றி ஒருபோதும் அவை ஆக்கத்திற்கு உதவுபவை அல்ல என்பது உணர்தற்குரியது.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment