சிறிலங்காவில் காணாமற்போவோர் பட்டியல்: முன்னர் தமிழர் - தற்போது சிங்களவர்களும்..


பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் முதலில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். ஆனால் தற்போது சிறிலங்காவில் தனியான இனங்களாகக் கருதப்படும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட குறிவைக்கப்படுகின்றனர். காணாமற் போன சிலர் கொல்லப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Economist சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரில் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் 2009ல் பெற்ற வெற்றியானது நாட்டில் அமைதியைக் கொண்டுவந்திருக்கலாம், ஆனால் இப்போது அது அவ்வளவு இலகான செயலாக தெரியவில்லை. ஏனெனல் தற்போது பலதரப்பட்டவர்களும் காணாமல் போகின்றனர். இதற்கான காரணத்தை எவரும் அறியவில்லை. ஆனால் சிலர் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றனர். 

சிறிலங்காவின் வடக்கில் டிசம்பர் 09 அன்று அரசியற் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமற் போன சம்பவமானது இங்கு வாழ்வோர் ஆபத்தில் இருப்பதையே குறிக்கின்றது. 

ஜனவரி 09 அன்று சிறிலங்காத் தலைநகரான கொழும்பில் நூற்றுக்கணக்கானோர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், காணாமற்போன அரசியற் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றும், வடக்கில் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், யுத்தம் இடம்பெற்ற வலயங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதற்கு எதிர்மாறான சம்பவங்களே இடம்பெறுகின்றன. 

போரால் காணாமற் போன பல நூறு தமிழர்கள் சார்பாக வீரராஜா மற்றும் முருகானந்தன் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாகப் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். காணாமற் போன தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இறுதிப் போரின் போது பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டவர்களாவர். சிறிலங்காவின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் வைத்துக் காணாமற் போன இவ்விரு ஆர்வலர்களும் உந்துருளியில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பின்னர் வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரே இக்கடத்தல் சம்பவத்திற்குப் பொறுப்பாளிகள் என பிறிதொரு முக்கிய செயற்பாட்டாளரான உடுல் பிறேமறட்ணா தெரிவித்துள்ளார். மாலைப் பொழுதில் இடம்பெற்ற இச்சம்பவத்தை பார்த்த சாட்சியங்கள் சில உள்ளபோதிலும், இவ்வழக்கை மேற்கொண்டு தொடர்வதற்கான போதியளவு சாட்சியங்கள் தம்மிடம் இல்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த முறைமை தற்போது பழக்கப்பட்ட விடயமாக உள்ளது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த டிசம்பரில் வெளியிட்ட தனது அறிக்கையில், 'கடத்தல்கள், பலவந்தமான காணாமற் போதல்கள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்கள்' போன்றன தொடர்பாக பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

புலிகளிற்கு எதிராக வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்தை தலைமைதாங்கிய அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட இவ்வாறானதொரு அமைப்பு விமர்சனங்களை மேற்கொள்வதென்பது அரிதான விடயமாகும். ஆனால் கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சிறிலங்காவில் உள்ள சட்ட நடைமுறை சிதைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றங்களை விசாரணை செய்து, சட்ட நடைமுறைகளை மீறுவோரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் மூலம் நீதியின் முன் நிறுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கோரியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் முதலில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். ஆனால் தற்போது சிறிலங்காவில் தனியான இனங்களாகக் கருதப்படும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட குறிவைக்கப்படுகின்றனர். காணாமற் போன சிலர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜனவரி 03 அன்று நள்ளிரவு சிங்கள இனத்தைச் சேர்ந்த 25 வயதுடைய டினேஸ் புத்திகா சரிற்றானந்தா  Dinesh Buddhika Charitananda  கடத்தப்பட்டார். இவர் கடத்தப்பட்ட மறுநாட் காலை கொழும்பு புறநகர்ப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டார். முஸ்லீம் சோதிடரான மொகமட் நியாஸ் என்பவர் கடந்த ஒக்ரோபரில் துப்பாக்கிதாரிகளால் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டார். மூன்று வாரங்களின் பின்னர் இவரது சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சிறிலங்கா காவற்துறையின் அறிவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்த வகையில் இவ்வாறான கடத்தல்கள் மற்றும் கொலைகள் இடம்பெறுவதாகவும், காவற்துறை அதிகாரிகளின் ஒப்புதல்கள் இதில் உள்ளதாகவும் பாங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற் போதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு துறைகளும் ஈடுபடவில்லை என சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இரு மொழிகளைத் தெரிந்து வைத்துள்ள சிங்கள - தமிழ் கலப்பினரான திரு.வீரராஜா முன்னர் இரு தடவைகள் இனந்தெரியாத நபர்களால் கூட்டிச் செல்லப்பட்டிருந்தார். இவர்கள் இராணுவ வீரர்கள் என இவரது நண்பர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இருதடவைகளும் இவர் விடுவிக்கப்பட்ட போதிலும் மூன்றாவது தடைவ இவர் அந்த நல்வாய்ப்பைப் பெறவில்லை.
கடத்தப்பட்ட இரு ஆர்வலர்களினதும் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பாக ஐ.நாவிற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். இந்த விண்ணப்பம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து காணாமற் போன சம்பவம் தொடர்பாக உரிய தீர்வை எட்ட முடியாததாலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் அனைத்துலக அமைப்பொன்றை நாடியுள்ளதாக திரு.பிறேமறத்னா குறிப்பிட்டுள்ளார். "என்னைப் பற்றிய தகவலையும் தயாராக வைத்திருங்கள்இ கடத்தப்படுபவர்களில் நான் அடுத்ததாக இருக்கலாம்" எனவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - புதினப்பலகை


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment