தமிழருக்கு எதிரான சிங்களத்தின் போக்கு நீடித்தால், அத்தகையதொரு நிலைப்பாடு சர்வதேச அளவில் ஒருபோதும் தமிழருக்குப் பாதகமானதாக அமையாது

அரசதரப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுக்களின் அடிப்படை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்ப வைத்துள்ளது அரசாங்கம்.  அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான பேச்சுக்குழு உண்மையில், அரசின் சார்பில் பேசும் அதிகாரம் கொண்டதா என்பதே அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிபிசி சிங்களசேவைக்கு வழங்கிய பேட்டி தான். 

இந்தப் பேட்டியின் போது,

அதிகாரப்பகிர்வு குறித்து அரசுக்குள் நிலவும் எதிர்ப்புக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிமால் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான் என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதாவது அவரது கருத்தின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படுவது அரசின் சார்பிலான பேச்சுக்கள் அல்ல. 

எனவே, 
“அரசாங்கத்தில் அங்கம் 16 கட்சிகளும் இந்தப் பேச்சுக்களையோ, அதிகாரப்பகிர்வையோ ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாக் கட்சிகளினதும் உடன்பாட்டைப் பெறுவதற்காக தெரிவுக்குழு உருவாக்கப்படும். அதில் எட்டப்படும் இணக்கப்பாடு தான் இறுதியானது. “ 

இது தான் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியது. 

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு குழுவை நியமிக்கிறார். அந்தக் குழு சுமார் 20 தடவைகள் பேசி முடித்த பின்னர் தான், அதற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் சொல்கிறார். 

“இது அரசின் சார்பில் பேசும் குழு அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேசும் குழு.“ என்று. 

இது அரசியல்தீர்வும், அதிகாரப் பகிர்வும் எந்தளவுக்கு புரட்டுகள் நிறைந்த சூழலுக்குள் சிக்கியுள்ளன விடயங்களாகியுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால், பேச்சு நடத்துவதற்கு அமைச்சர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு பேச்சுக்களை நடத்தி வரும் நிலையில் இது அரசின் சார்பில் பேசும் குழு அல்ல என்று கடைசி நேரத்தில் கூறியுள்ளது போன்ற குத்துக்கரணம் வேறேதும் இருக்கமுடியாது. 

இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில் பேசும் குழுவே என்றால் கூட, அந்தக் கட்சியில் அங்கம் வகிக்காத – லிபரல் கட்சியின் தலைவரான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க அதில் எப்படி இடம் பிடித்தார்? அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுக்களை எந்தளவுக்கு- அர்த்தமற்றதாக்க முடியுமோ அந்தளவுக்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அரசாங்கத்தின் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கருத்துகளும் தெளிவாகவே புரிய வைக்கின்றன. அரசாங்கம் வகுத்த திட்டங்களுக்கமைய- அதன் வசதிக்கேற்ப பேச்சுக்கள் அமையாமல் போனதால், எப்படியாவது இந்தப் பேச்சுக்களை வலிமையற்றதாக்கி விட முடிவு செய்துள்ளது போலும். இதனால் தான் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகவும், ஒன்றுக்கொன்று முரணாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன.

அரசாங்கம் இப்படி குத்துக்கரணம் அடிப்பது இது தான் முதலாவது தடவையல்ல.

2010 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தன்னிடம் ஒரு அரசியல்தீர்வு உள்ளதாகவும், அதனை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் உறுதிபடக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இப்போது தன்னிடம் எதுவும் இல்லை, தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக் கொள்வேன் என்கிறார். அதுபோலத் தான், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லாக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழுவை அமைப்பது பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது. இதைவிட, வரிக்கு வரி நடைமுறைப்படுத்துவதற்கு ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றும் பைபிள் இல்லை, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. இப்படியே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொல்கின்றன. ஜனாதிபதி ஒன்றைச் சொல்கிறார். அமைச்சர்கள் இன்னொன்றைச் சொல்கிறார்கள். 

இவற்றில் யார் சொல்வது உண்மை? 

இந்தக் குழப்பத்துக்கு யாரிடம் விடை தேடுவதென்பது புதுக்குழப்பம் 

அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எந்தத் தெளிவோ அல்லது உறுதியான நிலைப்பாடோ இல்லை.எந்தவொரு அரசியல்தீர்வையும்- அதிகாரப்பகிர்வையும் நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற போதும் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. 

தன்னிடம் அதிகாரம் இல்லாதது போன்று காண்பித்து நழுவிக் கொள்ளப் பார்க்கிறார் ஜனாதிபதி.

மனமிருந்தால் தான் மார்க்கமுண்டு, ஆனால் அரசாங்கத்திடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அதனால் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறது. பேச்சுக்கள் குறித்த குழப்ப நிலையை உருவாக்க முனைகிறது.அமைச்சர்கள் எல்லாம் இப்போது உச்சக்கட்ட கோமாளித்தனமான கருத்துகளையே கூறி வருகின்றனர். ஒருவர் ஒன்றைச் சொல்கிறார். இன்னொருவர் இன்னொன்றைச் சொல்கிறார். ஒரு கருத்தைச் சொன்னவரே அதற்கு முரணாகப் பேசுகிறார். இவையெல்லாம் குழப்பத்தின் உச்சநிலை. இதைவிட, தெற்கில் உள்ள சிங்களத் தேசியவாத சக்திகள் மீண்டும் உசுப்பி விடப்பட்டுள்ளனர். 

ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றவர்களும், தேசப்பற்று தேசிய இயக்கத்தின் குணதாஸ அமரசேகர போன்றோரும் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களின் இந்த எதிர்ப்பு சுயமாக வருகிறதா அல்லது அரசின் துண்டுதலின் பேரில் வருகிறதா என்பது தெரியவில்லை. ஏனென்றால், எப்போதுமே தமிழருக்கு நியாயங்கள் கிடைப்பதை தடுப்பதற்கான கருவிகளாக இத்தகைய சிங்களத் தேசியவாதிகள் தான் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பேச்சுக்களின் போதாகட்டும், போர்நிறுத்தங்களின் போதாகட்டும் அவற்றைக் குழப்புவதற்கு இத்தகையவர்கள் தான் முக்கிய காரணிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இப்போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிகின்றனர். செல்வாக்குச் செலுத்துகின்றனர் 

எனவே பேச்சுக்களின் போக்கைத் திசை திருப்பும் கருவிகளாக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கு வலுவான காரணங்கள் உள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது அரசியல்தீர்வில் அரசாங்கம் கொண்டிருந்த நாட்டம், பேச்சுக்களைத் தொடங்கியபோது இருக்கவில்லை. பேச்சுக்களைத் தொடங்கிய போதிருந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இப்போது இல்லை. அரசியல் தீர்வின் மீதான அரசாங்கத்தின் பற்றுறுதி குறைந்து செல்கிறது. இதனால் தான் அரசின் சார்பில் தொடங்கப்பட்ட பேச்சுக்கள் இப்போது நாட்டின் பிரதான கட்சியின் சார்பிலானதாக குறுகிப் போயுள்ளது. இதேபோக்கு நீடித்தால், பேச்சுக்களின் மூலமாக நிலையான நியாயமான அரசியல்தீர்வு ஒன்றுக்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்ற முடிவை நோக்கித் தள்ளுவதாகவே அமையும். அத்தகையதொரு நிலைப்பாடு சர்வதேச அளவில் உருவாவது ஒருபோதும் தமிழருக்குப் பாதகமானதாக அமையாது.

நன்றி இன்போ தமிழ் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment