இவ்வார ராவய பத்திரிகையில் வெளியாகியிருந்த கார்ட்டூன் அதிகாரப்பலாக்கல் குறித்த உண்மைநிலையை தெளிவுபடுத்தி நிற்கின்றது. இந்த உண்மைநிலை குறித்து பல தடவைகள் இப்பத்தியில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
முள்ளிவாய்க்கால் போருடனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுடனும் தென்னிலங்கையில் பேசப்படும் அதிகாரப் பரவலாக்கல் என்பது பம்மாத்தாகவே இருக்கும் என்ற உண்மை தமிழ் மக்கள் அறியாத ஒன்றல்ல. அது மிகத் தெளிவாக நிதர்சனமாகியுள்ளது.
13வது அரசியல் சீர்திருத்தம் அதற்கு மேல் பிளஸ் என்றெல்லாம் கூறப்படுவது 21ம் நூற்றாண்டில் பெரும் நகைச்சுவைக் காட்சிகளாகும்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து எவ்வித இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் தொடர்ந்தும் 13, 13 பிளஸ் என்று பேசி வருகின்றது.
அண்மையில் இலங்கை வந்துசென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 13 பிளஸிற்கு ஜனாதிபதி இணங்கியதாக அறிவித்தார். இந்த இணக்கம் 13 உடன் அதற்கும் மேல் அதிகாரப்பரவலாக்கலின் எல்லை விரிவடையப் போகின்றது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் 13 பிளஸிற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதால் 13 வது திருத்தச் சட்டம் குறித்துப் பேசத் தேவையில்லை என்ற கருதுகோளின் அடிப்படையில் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
ஆனால் இப்பொழுது அந்த அறிவிப்புகள் அனைத்தும் வெறும் கண்துடைப்பாக உள்ளன என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.
13 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடங்கிய காணி, பொலிஸ் அதிகார விடயங்களில் காணி அதிகாரம் குறித்து பரிசீலிக்கத் தயாரென அரசாங்கம் அறிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரம் குறித்து அது இன்னும் பிரச்சினைக்குரியதாகவே இருக்கின்றது எனவும் அறிவித்துள்ளது.
அதேவேளையில் 13 பிளஸ் என்பது மேல்சபை அல்லது செனட் சபையின் அறிமுகமே தவிர வேறொன்றும் இல்லை.
இது குறித்து ஜனாதிபதி ஏற்கனவே இந்திய உயர்பீடத்திற்கு தெளிவுபடுத்தி இணக்கப்பாட்டையும் பெற்றுள்ளார் என்றும் அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றது. மொத்தத்தில் அதிகாரப்பரவலாக்கல் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை அரசாங்கம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு வலியுறுத்தி நிற்கின்றது.
இந்நிலையில் கடந்த ஒரு வருட பேச்சுவார்த்தையில் எந்தவொரு தீர்வு குறித்தும் இணக்கப்பாட்டுக்கு வராத அரசாங்கம் தெரிவுக்குழுவில் எதை சாதிக்கப் போகின்றது என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகும்.
அரசாங்கத்தில் ஒரு பகுதியினர் 13 வது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்தக் கூடாது என்ற கடுங் கோட்பாட்டில் உள்ளனர்.
இன்னொரு பகுதியினர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன குறித்த கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கை அல்ல, அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் எனக் கூறுகின்றனர்.
மொத்தத்தில் அரசாங்கத் தரப்பு பிரிந்து நின்று அதிகாரப் பரவலாக்கல் குறித்து பந்தாடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பந்தாட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் முடிவடையும் வரை அரங்கேற்றப்படும்.
வி.தேவராஜ்
0 கருத்துரைகள் :
Post a Comment