தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை

மணிவாசகரின் திருவாசகப் பெருமை உணராதார் தமிழராய் இருத்தல் உகந்ததன்று. திருவாசகத்தின் பெருமை என்ற பொருளில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய சிறப்புரை திருவாசகத்தின் இனிமையை இதர சமயத்தவர்களும் பருகுதல் வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. மணிவாசகரின் திருவாசகத்தில் ஒரு வரி ‘தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’என்பதாகும். நமக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை. பிடித்தமைக்கு சிவன் மீது கொண்ட அளவு கடந்த அன்பு காரணமன்று.மாறாக மணிவாசகரின் அற்புதமான உளநிலைக் கருத்து என்பதால் அதன்மீது பற்று. உன்னைத் தந்து என்னைக் கொண்டாய். இதில் ஆர் சதுரர் என்பது மணிவாசகரின் கேள்வி. இந்தக் கேள்வியை நினைக்கும்போது இலங்கை-இந்திய அரசுகளின் நினைவு நம்மைத் தொட்டுக் கொள்ளும்.


வன்னிப் போரில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு தாராளமாக உதவியது. நீ எது செய்தாலும் நாம் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம்.ஆனால் கேள்வி கேட்பதுபோலவும் இலங்கைக்கு அவசரமாக வந்து போவது போலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியது போன்றும் நடித்துக் கொள்வோம் என்பது இந்தியாவின் உத்தரவாதம். அதற்கேற்றவாறு இலங்கை அரசும் ஆமாம் போட்டுக் கொண்டது. வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் நடந்த போதுஇ சர்வதேச தொண்டு நிறுவனங்களை அரசு வெளியேற்றிய போது, அமைதியாக இருந்த இந்தியா, முட்கம்பி வேலிக்குள் தமிழ் மக்களை முடக்கியபோதும் மெளனமாகவே இருந்தது.


இப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவை சந்தித்துப் பேசினார். 13ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு அரசு தயார் என ஜனாதிபதிஇ கிருஸ்ணாவிடம் தெரிவித்ததாகத் தகவல். ஐயா! இதைத்தானே அன்று முதல் இன்று வரை சொல்லிக் கொள்கிறீர்கள்-எப்போது இதைச் செய்வீர்கள்? இதற்கு ஒரு கால எல்லை இல்லையா? இப்படியே கூறிக்கொண்டு சென்றால்இ நிலைமை என்னவாவது? இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கால எல்லை எதுவென்பதை எனக்கு சொல்லியாகுங்கள்.


இப்படி எஸ்.எம்.கிருஸ்ணா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் இதுபற்றி எதுவுமே கேட்க வில்லை. மாறாக 13ஆவது திருத்தசட்டமூலத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படும் என்ற செய்திக்கு குட்...குட்.. வெரிக் குட் என்று சொல்லிவிட்டார். இங்குதான் மந்திரியாக இருந்த மணி வாசகரின் ‘தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’ என்ற வாசகம் நெருடிக் கொள்கிறது. அட, இலங்கை-இந்தியக் கூத்து. அந்த கூத்த பிரானின் கூத்தையும் விஞ்சிவிட்டது. அப்பாவித் தமிழ் ஆன்மாக்கள் நம்பியிருக் கிறார்கள். இந்தியா வெட்டி விழுத்துமென்று.


மணிவாசகா! தமிழனை அழித்ததில் இந்தியாவா? இலங்கையா? ஆர்கொலோ சதுரர்


நன்றி வலம்புரி
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment