அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II


சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும்.  கடந்த பத்தியிலே, பூகோள அரசியலில் பொருளாதாரத்தின் முக்கியத்துவம், அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தின் சுருக்கமான முக்கிய உள்ளடக்கங்கள், எதற்காக ஆசிய – பசுபிக் பிராந்தியம் அமெரிக்காவால் இலக்கு வைக்கப்படுகிறது? இலக்காகியுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள்  போன்றவிடங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். (அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்)

இந்தப்பத்தி, அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தினை மையப்படுத்தி தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளுக்கான தயார்படுத்தல் மற்றும் அதற்கு ஆதரவான அனைத்துலக அளவிலான உதாரணங்களையும் ஆராய்கிறது.  

தமிழர்களின் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிந்தனைப் புரட்சியும், மாற்றங்களின் ஆரம்பமும். 

தமிழர்களின் துயர்படிந்த நெருக்கடி மிகுந்த இன்றைய சூழல் என்பது, எதிர்மறையான சிந்தனைப் பரப்புக்குள்ளேயே தமிழர்களை வைத்திருக்கத் தூண்டும். ஆகவே, எந்தப் புரட்சிக்கும் முன்னர், தமிழர்களுடைய மனங்களிலே ஆக்கபூர்வமான எதிர்காலத்தை நோக்கிய சிந்தனைப் புரட்சி உண்டாகவேண்டும். 

அத்துடன், தமிழர்கள் நலன்களை முன்வைத்து நகர்வது போல காட்டிக்கொள்ளும் நபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளின் இரகசிய நிகழ்ச்சி நிரலை புரிந்துகொண்டு, அதனைத் எதிர்கொண்டபடி அடுத்த கட்டத்தை உரியமுறையில் எட்டுவதற்கான உத்திகளும், உபாயங்களும் வகுக்கப்பட வேண்டும். ஏனெனில், இத்தகைய சக்திகளே, தமிழர்களை  எதிர்மறையான சிந்தனை தளத்திற்குள்ளேயே முடக்கி, தமிழ்த் தேசியத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

உலகிலேயே விடுதலைப் போராட்டங்களுக்கு முதன்மையாகத் திகழ்ந்த தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டம், தமிழ் மக்கள் மட்டுமன்றி, உலகின் பல்வேறு சக்திகளும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கும் கூட அதிர்ச்சியளிக்கக் கூடிய முறையில் முடிவுக்கு வந்தது. 

அதேபோல், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உண்டான ஆரம்பப் புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் மேற்குலகின் புலனாய்வு அமைப்புகள் தொடக்கம் யாருமே எதிர்பார்த்திராத ஒன்றே. 

கடந்த காலங்களிலே தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகள் கூட எதிர்வுகூறல்கள் இன்றி இடம்பெற்ற சம்பவங்களே ஆகும். போராட்டகரமான அரசியல் வாழ்விலே, புரட்சிகரமான மாற்றங்கள் எக்கணத்திலும் நிகழலாம். புரட்சிகள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், சாதகமாகவும், பாதகமாகவும் அமையக்கூடும். ஆனால், புரட்சிகள் எப்போது, என்ன வடிவத்தில் இடம்பெறலாம் எனக் கூறமுடியாது. 

சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும். 

ஆகவே, தமிழர்களின் சமகால நிலையை கவனத்திற்கொண்டு சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட வேண்டும். மாறாக, இன்றைய சவால்களை காரணமாகக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை மீளமுடியாத வகையில் அடமானம் வைக்கமுடியாது. 

தமிழர்கள் பூகோள அரசியலில் சக்திமிக்க நாடுகளின் தேசிய நலன்களை கவனத்திற்கொண்டு, தமது தேசநலன்களுக்கான காய்களை அரசியல் சாணக்கியத்துடன் நகர்த்த வேண்டும். இது, சக்திமிக்க நாடுகளுடனான பொதுப்புள்ளி சந்திப்பின் ஆரம்பமாக அமையக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். அதிலிருந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். 

எந்த சக்தியுமே, தமிழினம் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டு நிற்கிறது, நீண்டகாலமாக அவலங்களை சுமந்துகொண்டு வாழ்கின்றனர் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க முன்வரப்போவதில்லை. ஆனால், தமிழர்களுடனான உறவு தமது தேசியநலனுக்கு சாதகமாக அமையும் என எண்ணினால், அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்துவார்கள். 

தமிழர்கள் மனநிலை ரீதியான பலவீனமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த பலவீனமான மனநிலையைப் பயன்படுத்தி தமது தேசியநலன்களை அடைவதற்கான கருவிகளாக தமிழர்களை பயன்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாக, தமிழர்களது நலன் புறக்கணிக்கப்படக்கூடிய சூழலுக்கான சாத்தியப்பாடுள்ளது. 

ஆகவே, தமிழர்கள் தாம் பலவீனமானவர்கள் என்ற மனநிலையை முதலில் உதறித் தள்ளவேண்டும். சவால்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் கனிந்திருக்கின்றன. அவற்றை சரிவர இனம் கண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும். 

யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் தன்மையும், சுயவிமர்சனமும் இருக்க வேண்டும். ஆனால், அவை ஒரு தேசத்தையோ, அமைப்பையோ, இனத்தையோ அல்லது தனிமனிதர்களையோ நகரமுடியாத சகதிக்குள் அமிழ்த்தி பின்னோக்கி நகர்த்துவதாக அல்லாமல், குறிப்பிட்டவற்றை உயர்ந்த நோக்கத்திற்காக முன் நோக்கி நகர்த்த வேண்டும். எதை எண்ணுகிறாயோ, அதுவே ஆகிவிடுகிறாய் என்ற கூற்றை நினைவிற்கொள்ளல் நன்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்ற கருத்தை புலிகள் களத்திலே இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கத் தொடங்கியிருப்போருக்கும், புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட காரணத்தால், தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வெற்றிபெறுவது கேள்விக்குறியே எனக் கருதுவோருக்கும் பொதுவானதும், பொருத்தமானதுமான கருத்தொன்றை இப்பத்தியிலே பதிவுசெய்வது அவசியம் எனக் கருதுகிறேன். 

மேற்கூறிய இரு சாரருக்குமான பதில் அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி என்ற பகுதிக்குள்ளும் பரவி நிற்கின்றது.

முதலாவதாக, பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் புலிகள் சரிவர புரிந்துகொள்ளாததால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களில் பலர், நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை புலிகளின் இராணுவத் திறனில் நம்பிக்கை வைத்திருந்ததோடு, அதற்கேற்ற வகையிலேயே தமது கருத்துக்களையும் பதிவுசெய்து வந்தனர். அதற்கு முன்னர், அத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக அறிய முடியவில்லை. அத்தகையவர்கள், இராணுவ பலம் இல்லாத ஒரு காரணத்தினை முன்வைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாதென வாதிட்டு வருகின்றனர். 

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான முகவரியாக, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக ஆயுதப் போராட்டம் விளங்கியது. ஆனால், அதன் அழிவோடு, தமிழ்த் தேசியப் போராட்டமும் அழிந்து விட்டதாகவோ அல்லது இனி அது சாத்தியப்பாடான விடயம் இல்லையென்றோ கூறமுடியாது. 

உண்மையிலேயே,பலகோணங்களிலும், ஆழமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் நடந்த விடயங்களைப் பார்ப்போமானால், அங்கு இடம்பெற்ற செயற்பாடுகள் ஊடாகவே அடுத்த கட்ட போராட்டத்திற்கான சேதி சொல்லப்பட்டுவிட்டது. 

ஒரு போராட்டத்தில் சில ஆனால் முக்கியமான விடயங்கள் எழுத்திலும், உரையிலும் சொல்லப்படுபவையல்ல. மாறாக, குறித்த செயல்கள் ஊடாக புரியப்பட வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. இது ஈழப்போராட்டத்தில் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கிறது. 

முன்னைய காலங்களின் செயல்கள், பின்னர் உரைகளாக, ஆவணங்களாக வெளிவந்தது. ஆனால், முள்ளிவாய்காலில் அடுத்த கட்ட போராட்டத்துக்காக இடப்பட்ட அத்திபாராம் மௌனத்தின் ஊடாக சொல்லி செல்லப்பட்டுள்ளது. 

புரிந்தவர்களால், உலக அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். புரியமுடியாதவர்கள், புரிந்துள்ளவர்களை அல்லது புரிய முற்படுபவர்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தி தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழிப்தற்கு முற்படுவார்கள்.

போராட்டத்தின் தளங்கள், களங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் அதன் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால், பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் மனஉறுதியும், ஆத்மபலமும் தளர்வடையக்கூடாது. நாளை என்பது, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த நாளைக்கான மாற்றத்திற்கான ஆரம்பத்தை அறிவியல் ரீதியாக சிந்திப்பதால் உண்டாகும் சிந்தனைப் புரட்சியால் உண்டாக்க முடியும். இந்த சிந்தனைப் புரட்சியில் முற்போக்கு சிந்தனையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் முன்னணி வகிக்க வேண்டும். 

அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி

எதிர்கால போர்க்களங்கள், ஆட்பல எண்ணிக்கையால் வெல்லப்படக் கூடியவையல்ல. மாறாக, தொழில்நுட்ப ஆளுமையே இனி போர்க்களங்களில் மேலாண்மை செலுத்தப் போகிறது. இதன் அடிப்படையிலேயே, அமெரிக்காவின் அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்பு திட்டத்த்தின்படி, அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் நூறாயிரம் இராணுவத்தால் குறைக்கப்படவிருக்கிறது. அதுமட்டுமன்றி, அண்மையில் லிபியா மீது மேற்கொண்ட தாக்குதல் வரை, அமெரிக்காவின் படைப்பல ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவர்களின் வான்படை இருந்து வந்தது. 

சேர்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான தாக்குதல்களில் எல்லாம் அமெரிக்கா வான்படையின் பங்கு முக்கியமானது. அத்தகைய வான்படையின் சுமார் இருநூறு வானூர்திகளையும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் திட்டம் குறைத்துள்ளது. இந்த இருவிடயங்களும், எதிர்கால போர்களங்களில் அதிநவீன இராணுவத் தொழில்நுட்பம் மேலாண்மை செலுத்த போவதையே கட்டியங்கூறுகின்றன. 

அதேவேளை, உலக சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகள் என அடையாளாப்படுத்தப்படும் சில நாடுகளில், அனைத்துலக ரீதியான இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக மக்கள் புரட்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளும் மும்முரமடைகின்றன. 

இவையெல்லாம், ஆளணி வளத்தாலும், சாதாரண மற்றும் குறிப்பிடத்தக்க நவீனரக ஆயுதங்களாலும் எதிர்காலப் போர் அரங்குகளில் செல்வாக்கு செலுத்தமுடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆகவே, தொழில்நுட்ப நிபுணத்துவமும், விரல் நுனி தகவல்களுமே இனிவரும் கால போர்களங்களின் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை எடுத்துக் கூறுகின்றன.  

வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை

அனைத்துலக உறவுகள் காலத்திற்கு காலம் மாற்றமடைபவை என்பதை கடந்த பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். இது, வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான சில அனைத்துலக உதாரணங்களைப் பார்ப்போம். 

பொஸ்னியாவின் செர்பனிக்காவில் 1995ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையையோஇ அல்லது பொஸ்னியாவில் 1992 தொடக்கம் 1995 வரை நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களையோ மேற்குலகு தடுத்து நிறுத்தவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் பரவலாகவுள்ளன. 

இத்தனைக்கும், பொஸ்னியா ஐரோப்பாவிற்கான நுழைவாசல்களில் ஒன்று. அத்துடன், அமெரிக்காவுக்கு சவால் விடும் ரஸ்யாவும் இதே பிராந்தியத்திலேயே உள்ளது. அப்படியிருந்தும், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற சக்திமிக்க மேற்குநாடுகள் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதனை தடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டினை மேல்குலக ஆய்வாளர்களே முன்வைத்துள்ளனர். 

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில், அமெரிக்காவின் தலையீட்டை வலியுறுத்தி அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜக் சிராக்  [Jacques Chirac] அவர்கள் அழுத்தத்தை காட்டிய போது கூட, அமெரிக்கா தயக்கத்துடனயே சம்மதம் தெரிவித்ததாக ஆய்வுகள் ஊடாக அறியமுடிகிறது. 

பாரிய மனித அழிவுகளுக்கு பின்னர், பொஸ்னியாவிலிருந்த இனக்குழும மோதுகைக்கு முடிவுகட்டி சமாதானத்தை உருவாக்கும் முகமாக 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகால் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், சேர்பிய அதிபர் சுலோபோடன் மிலோசோவிக்  [Slobodan Milošević],  குறோசிய அதிபர் பிரான்ஜோ ருட்மன்  [Franjo Tuđman], பொஸ்னிய அதிபர் அலியா செற்போவிக்  [Alija Izetbegović]  மற்றும் பொஸ்னிய வெளிவிவகார அமைச்சர் முகமட் சசிர்வெ  [Muhamed Sacirbey]  ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இந்த உடன்படிக்கையானது அமெரிக்காவின் டேற்றன் பிராந்தியத்தில் கைச்சாத்திடப்பட்டதால், டேற்றன் உடன்படிக்கை  [Dayton Agreement]  என பரவலாக அறியப்படுகிறது. இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் பொஸ்னியா போரில் தலையிடுவது தமது தேசிய நலனுக்கு பெருமளவில் உகந்தது அல்ல என்பதால், அதில் தலையிடுவதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய மேற்குலகு, பின்னர் டேற்றன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முக்கியமானவர்களில் ஒருவரான சுலோபோடன் மிலோசோவிக்குக்கு அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக மரண தண்டனை பெற்றுக்கொடுத்தமைக்கு பின்னணியிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லிபியாவின் அதிபர் கடாபி ஒரு காலத்தில் மேற்குலகோடு விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்தார். பின்னர், மேற்குலகுக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் அந்நியோன்யம் மிக்கதாக மாற்றமடைந்தது. இறுதியில், கடாபி அந்நியோன்யத்தோடு பழகிய நாடுகளின் துணையுடனே கொல்லப்பட்டார்.  

மேற்குறித்த உதாரணங்கள், பூகோள அரசியலிலே எதுவும், எக்கணமும் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அடுத்த பத்தியிலே, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.

நன்றி -புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment