வட தமிழீழத்தின் நகரான யாழ் குடாநாட்டில் அதிகரித்து வரும் சம்பவங்கள் மக்களை அச்சங்கொள்ள வைத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களில் யாழில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன. குடாநாட்டின் மூன்று பிராந்தியங்களில் இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் குடாநாட்டு மக்களை மீண்டும் அச்சத்திற்கும் பீதிக்குள்ளும் கொண்டு சென்றுள்ளன. வியாழக்கிழமை அதிகாலை வேளை (26..01.2012) பத்திரிகைகளைப் பர்த்த மக்கள் பேரதிர்ச்சியடைந்தனர். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி என்று மூன்று இடங்களில் மூன்று வேறு சம்பவங்களின்......... செய்திகளைப் பார்த்த மக்கள் மூர்ச்சையடைந்தனர். பிணங்களும் எலும்புக்கூடுகளும் மீடகப்படுகின்ற ஒரு பூமியாகவே இன்று யாழ்ப்பாணம் மாறியிருக்கின்றது என்ற வேதனையால் குடாநாடு மீண்டும் துடிக்கின்றது.
வடமராட்சியில் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவமானது குடாநாட்டுப் பெற்றோரின் மனதில், பெண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரின் மனதில் பெரும் இடியாக அமைந்துள்ளது. இரக்கமற்ற கொலை வெறியர்களின் செயலால் அப்பாவிச் சிறுமி ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதன் மேரி டிலக்சனா என்ற மாணவி (வயது – 17), அல்வாய் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பவர். கடந்த டிசம்பர் மாதம் நடைபெறற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அவர் பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றார். நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 6.45 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையிலிருந்த பெரியம்மா வீட்டுக்குச் சென்று விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் போது காணாமல் போனார்.
பெரியம்மா வீட்டில் மூன்று பிள்ளைகளும் ஆண்கள். பெரியம்மாவிற்கும் அடிக்கடி சுகவீனம். இதனால் அங்கு சென்று சில உதவிகளைச் செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த டிலக்ஸ்னா வழக்கம் போல அன்றைய தினமும் உதவி செய்து விட்டு நடந்து வந்து கொண்டிருக்கையிலேயே காணாமல் போயுள்ளார். வெளியே சென்றிருந்த வயதான தாயும் தந்தையும் வீட்டுக்கு வந்து டிலக்ஸ்னாவைத் தேடிய போது அவளைக் காணவில்லை. இரவு 7 மணிக்குப் பின்னர் அவளைத் தேடத் தொடங்கினார்.
வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் டிலக்சனாவின் வீடு அமைந்துள்ள சூழல் வித்தியாசமானது. சுற்றாடலில் அதிக குடும்பங்கள் இல்லை. பாழடைந்த கட்டடங்களும் பற்றைகளும் சூழ்ந்த பிரதேசம். சற்றுத் தூரத்திலே மயானம். சுற்றுப்புறச் சூழலைச் சாதமாகப் பயன்படுத்தியே கடத்தப்பட்ட டிலக்ஸனா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
டீலக்ஸனாவின் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய வீட்டிலிருந்து அவளின் சடலம் மீட்கப்பட்டிருக்கினற்து. வாயில் பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட நிiலியல், கழுத்தின் நடுவே கத்தரிக்கோலால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காணாமல் போய் ஒரு சில மணித்துளிகளில் கொல்லப்பட்டிருக்கின்றார்.
கொலைக்கான காரணம் எதுவும் தெரியவராத நிலையில் பருத்தித்துறைச் சேர்ந்த ஒரு இளைஞன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இளைஞன், தலை மறைவாகியுள்ளமை சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இளைஞன் டிலக்ஸனாவின் அக்காவைக் காதலித்திருக்கிறான். ஆனால் அவள் வெளிநாடொன்றுக்குச் சென்று விட்டதால் டிலக்ஸனாவைப் பழிவாங்கியிருக்கலாமென்றும் கூறப்படுகின்றது. குறித்த இளைஞன் புதன்கிழமை மதியம் பருத்தித்துறை நகரிலுள்ள கடையொன்றில் தனது நண்பர்களுக்கு விருந்தளித்ததாகவும் கூறப்படுகின்றது.
யாழ். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாக அமுல்ப்படுத்தப்படாத தன்மையினையே இந்தச் செயற்பாடு எடுத்துக் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் எல்லாமே நன்றாக நடக்கிறது என்று அரசாங்கம் சர்வதேசத்திற்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்ற நிலையில் யாழில் எவரும் எதுவும் செய்து விட்டு சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலே நிலவுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடாநாட்டில் யாரும் எதுவும் செய்ய முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் தற்செயலாக கைது செய்தால் கூட அவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய்களையும் மதுபானத்தையும் கொடுத்தால் அவர்கள் அடங்கிப்போகும் சூழ்நிலையயே காணப்படுகின்றது.
மேற்படி கொலைச் சம்பவத்திற்கு அப்பால் தனங்களப்பு- கேரதீவு வீதியில் மறவன்புலோவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரின் எலும்புக்கூடும் மீட்கப்பட்ட சம்பவமும் குடாநாட்டில் பேரதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. சுப்பிரமணியம் அற்புதமலர் என்ற 28 வயதுடைய மேறபடிப் பெண் கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சில தினங்களில் அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும் ஆண் ஒருவர் உரையாடியதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை தனங்கிளப்பு – கேரதீவு விதியில் கைவிடப்பட்ட காவலரனணுக்கு அருகில் மேற்படிப் பெண்ணின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. அவர் அணிந்து சென்ற ஆடைகளை வைத்து அது தமது மகளின் எலும்புக்கூடுதான் என்பதை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
மேலும் பண்டத்தரிப்பு- இளவாலை வீதியிலுள்ள கிணறொன்றிலிருந்தும் இரண்டு சடலங்களுக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இவற்றில், ஒரு மண்டையோட்டினுள் முற்றாகச் சிதைவடையாமல், அரைகுறையான மூளை இருந்தது இவற்றை வைத்து நோக்குகின்ற போது அண்மைக்காலத்திலேயே இவர்கள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாமென்று தெரியவருகின்றது. குறித்த சடலத்துடன் ஆண்களுக்குரிய உள்ளாடைகளும், இராணுவச்சீருடையை ஒத்த துணி ஒன்றும் மீட்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இராணுவத்தினரே இவர்களைக் கொலை செய்து கிணற்றில் விசியிருக்கலாமென்ற வலுவான சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
மேற்படி எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக காணாமற் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். கடத்தல்களும், காணாமற்போதல்களும் அதிகமாக இடம்பெற்ற யாழ். குடாநாட்டில் இன்று எலும்புக்கூடுகள் மீட்கப்படகின்ற சம்பவங்களானவை குடாநாட்டு மக்களின் மனங்களில் நிம்மதியற்ற தன்மையையே தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்களின் அமைதி என்பது மிக அருகில் இல்லை. அது வெகு தொலைவிலேயே உள்ளது என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றி நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment