மற்றொரு புதிய ஆண்டுக்குள் உலகம் பிரவேசித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டினதும் பிறப்பும் புதிய நம்பிக்கையோடு வரவேற்கப்படுவது வழக்கம். அதுபோலத் தான் இந்த 2012ம் ஆண்டும் நம்பிக்கையோடும் புத்துணர்வோடும் வரவேற்கப்படுகிறது. ஆனால், இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் இது சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இது ஒன்றும் ஜோதிடக்கணிப்பு அல்ல.
நாம் சொல்ல வரும் விடயமும் அதுவல்ல.
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் எப்படியோ முழுமையாக இரண்டு ஆண்டுகளைக் கடந்து சென்று விட்டது. போருக்குப் பின்னர் நிரந்தர அமைதியைக் கொண்டு வருவதற்கான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதாக சர்வதேச சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும்-போரின் போது இடம்பெற்ற மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமலும் இந்த இரண்டு முழு ஆண்டுகளையும் அரசாங்கம் வெற்றிகரமாகக் கடந்து விட்டது.
2009 போர் முடித்து வைக்கப்பட்ட ஆண்டு. அந்த ஆண்டு முழுவதும் போரின் அழிவுகள் மற்றும் முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட மக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியே உலகம் கரிசனை கொண்டிருந்தது.
அதையடுத்து வந்த 2010ம் ஆண்டில் அரசாங்கம் சிறியளவில் சர்வதேச நெருக்கடிகளைச் சந்தித்த போதும், மிகச்சுலபமாகவே அதனைத் தாண்டிச் சென்றது.2011ம் ஆண்டு முற்றிலும் பல்வேறு சோதனைகளைத் தாண்டியாக வேண்டிய நிலை இருந்து வந்தது.
அவ்வப்போது விடுக்கப்பட்ட சர்வதேச விசாரணை அழைப்புகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களும், முக்கியமான சர்வதேச நிகழ்வுகளில் எதிர்கொள்ளப்பட்ட நெருக்குதல்களும், இலங்கை அரசுக்கு கடந்த ஆண்டை போதும் போதும் என்றாக்கி விட்டது.
எத்தகைய நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட போதும், சென்ற ஆண்டை வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்கு அரசுக்கு உதவியது நல்லிணக்க ஆணைக்குழு தான். அதனைக் காண்பித்தே அரசாங்கம் எந்தவொரு பொறிக்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் தப்பிவிட்டது.
இப்படி ஒவ்வொரு ஆண்டாக கடந்து வந்த அரசாங்கத்துக்கு இந்த ஆண்டைக் கடந்து செல்வது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது. ஏனென்றால் இரண்டு முக்கியமான பிரச்சினைகளை இந்த ஆண்டில் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
முதலாவது பிரச்சினை- போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைகளை நடத்துவதும், அதில் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிப்பதற்குமான நடவடிக்கை.
இரண்டாவது பிரச்சினை – மூன்று தசாப்தகாலம் நீண்ட போருக்கு அடிப்படைக் காரணியாக இருந்த இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காண்பது. 2010ம் ஆண்டின் அரைப் பகுதியையும், 2011ம் ஆண்டின் முழுப்பகுதியையும் அரசாங்கம் அதிக சிக்கலின்றிக் கடந்து செல்வதற்கு உதவிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துவிட்ட நிலையில், எந்த வழியிலேனும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்றுக்குள் செல்ல வேண்டிய நிலை இந்த ஆண்டில் உருவாகியுள்ளது. இந்த விசாரணைகளை அரசாங்கம் செய்கிறதோ அல்லது சர்வதேச சமூகம் செய்கிறதோ, எதுவாயினும் இந்த ஆண்டில் இது ஒரு நெருப்பாற்று நீச்சலாகத் தான் இருக்கும். போர்க்குற்றங்கள் ஒன்றும் நடக்கவேயில்லை என்று தட்டிக்கழிக்கவும் முடியாது.
அதேவேளை போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே என்று ஒத்துக் கொள்ளவும் முடியாது. இப்படி இருதலைக்கொள்ளி நிலையில் அரசாங்கம் சிக்கப் போகிறது.
இன்னொரு பக்கத்தில் அரசியல்தீர்வு என்ற மற்றொரு ஆபத்தான கத்தியும் அரசின் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் எப்படியாவது நிரந்தரமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண அரசுக்கு அழுத்தங்கள் அதிகம் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
ஏற்கனவே சர்வதேச அழுத்தங்கள் பல வந்தபோதும், அவற்றையெல்லாம் ஏதேதோ காரணங்களைக் காட்டிச் சமாளித்து விட்டது அரசாங்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. எந்த அதிகாரங்களையும் பகிரத் தயாரில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் இப்போது வந்துள்ள நிலையில், அரசியல்தீர்வு என்ற பாரியதொரு இலக்கை எவ்வாறு அடையப் போகிறது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதிகாரங்களின் பகிர்வு இல்லாமல் அரசியல்தீர்வு ஒன்றுக்கு வாய்ப்பேதும் இல்லை என்றாகி விட்டது. ஆனால் அரசாங்கமோ அதிகாரங்களின் பகிர்வுக்கு இணங்க முடியாது என்று அடம்பிடிக்கிறது. இந்தக் கட்டத்தில் 2012ம் ஆண்டை எதிர்கொள்வது மிகச்சிக்கலானது.
2011இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இருபது தடவைகளுக்கும் மேல் பேச்சுக்களை நடத்தி விட்டபோதும் எந்தவொரு இணக்கமும் உருவாகவில்லை. இந்தநிலையில் 2012ம் ஆண்டில் அரசியல்தீர்வு குறித்த இணக்கப்பாடு ஒன்று உருவாகும் என்று எவராலும் கற்பனை கூடச் செய்ய முடியாது. அதேவேளை, அரசாங்கம் போர் முடிந்து மூன்றாண்டுகளை, அரசியல் தீர்வு எதையும் வழங்காமலே கடந்து சென்று விட்டது போல, இந்த ஆண்டையும் வெற்றிகரமாகக் கடந்து செல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு குறித்த சர்வதேச அழுத்தங்கள் அரசுக்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவே இதுபற்றிச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இழுத்தடிப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் முன்வைக்க முடியாத நிலை அரசுக்கு உள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று தான், அரசிடம் இப்போது இழுத்தடிப்பதற்கு உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. அதுவும் செல்லாக்காசாகி விட்டால் அரசாங்கம் எந்த வழியிலேனும் அரசியல்தீர்வு ஒன்றுக்கு வந்து சேர வேண்டியது கட்டாயமாகி விடும்.
அடுத்து, இந்த ஆண்டில் அரசாங்கம் சந்திக்க வேண்டிய மற்றொரு சவால், வடக்கு மாகாணசபைக்கு நடத்த வேண்டிய தேர்தல். வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவது அரசின் கனவாக இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சவாலை எதிர்கொண்டு அதனைச் சாதிப்பது சுலபமானதல்ல. வடக்கு மாகாணசபையின் ஆட்சியைப் பிடிக்கின்ற கனவு இருந்தாலும், அது சாத்தியமானது என்று அரசாங்கம் நம்பவேயில்லை.
“டெக்கன் குரோனிக்கல்“ செய்தியாளர் பகவான் சிங்கிற்கு கடந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அளித்த பேட்டியொன்றில்,
“பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்து விட்டு, அவர்கள் என்னைக் கைது செய்து கொண்டு போவதை விரும்புகிறீர்களா?“ பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வி, தனியே பொலிஸ் அதிகாரப் பகிர்வை நிராகரிப்பதற்கானது மட்டுமல்ல. தமது சார்பு அரசு ஒன்று வடக்கில் உருவாகாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் கூட.
கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஆதரவு, ஜனாதிபதிக்கு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. இப்படியாக அரசாங்கம் பல சிக்கல்களைத் தாண்ட வேண்டிய ஆண்டாகவே, 2012 பிறந்துள்ளது.இவை மட்டும் தான் இந்த ஆண்டில் அரசாங்கம் எதிர்கொள்ளப் போகின்ற நெருக்கடிகளோ சவால்களோ அல்ல. இதற்கும் அப்பால் பல மோசமான அரசியல், பொருளாதார நெருக்குவாரங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றைக் கடந்தால் தான், இந்த ஆண்டு அரசுக்கு வெற்றிகரமானதாக அமையும்.
2011ம் ஆண்டைக் காலம் கடத்தும் ஆண்டாகப் பயன்படுத்திக் கொண்டது போன்று, 2012ம் ஆண்டையும் கடத்தி விடலாம் என்று கண்க்குப் போட்டுவிட முடியாது.அப்படிக் கணக்குப் போடப்படுமானால் அது நிச்சயம் தப்புக் கணக்காகி விடும். |
0 கருத்துரைகள் :
Post a Comment