திருத்தலங்களின் பெருமையால் சிறப்புப் பெற்ற ஊர்கள் உண்டு. தெய்வீகத் தன்மையின் பெருமையை உணர்த்த அருளாளர்கள் கையாண்ட நுட்பங்கள் ஏராளம். அதில் திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று கூறினார்கள். இங்கு கூறப்பட்டவை சிவஸ்தலங்களின் பெருமையால் ஏற்பட்டவை. இவை ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணத்தவர்களின் அனுபவிப்புகள், பாடுகள் என்பவற்றை நோக்கும்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று எண்ணத் தோன்றும்.
யுத்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்தழிவு, அங்கவீனம், ஏழ்மை, தொழில் இன்மை என்ற துயரத்தோடு வாழ்க்கை கழிகின்றது. இதில் நாம் செய்த பாவத்தின் 50 வீதம் தொலைந்து போகும். மீதி ஐம்பது வீதப் பாவத்தை அனுபவிப்பது எங்ஙனம் என்றால்இஅதற்குத்தான் எங்களிடம் இருக்கக்கூடிய கிருமிநாசினி தெளித்த மரக்கறி வகைகள், போமலினால் அபிஷேகம் செய்யப் பட்ட பழவகைகள், வீதியில் புழுதிப் புயல் தோய்ந்து குன்று குழிகளில் விழுந்து எழுந்து செல்லும் பயணம், விடிந்தால் பனித் தொல்லை. செக்கலானால் நுளம்புத் தொல்லை. இருட்டானால் திருடர் தொல்லை. பகலா னால் பிழைப்புத் தொல்லை.
இத்தனைக்கும் மத்தியில் கோயில் வழக்கு, காணி எல்லை வழக்கு. கட்டியவன் கைவிட்ட வழக்கு, விவாகரத்து கேட்கும் வழக்கு. என்னே வாழ்க்கை. பெற்ற பிள்ளைக்கு பள்ளியில் அனுமதி கேட்டு அலையும் துயரம், ஆசிரியர் இட மாற்றத்தால் அலையும் பரிதாபம், இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல்வாதிகளின் நடிப்பு. இத்தனையையும் அனுபவித்து வாழ்கின்ற வடபுலத்து-யாழ்ப்பாணத்து மக்களுக்கு முக்தி கிடையாதா என்ன? அதனால்தான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தால் முக்தி என்று கூறினோம். புற்றுநோயில் நாங்களே முதலிடம். புழுதிப் புயலை சுவாசிப்பதிலும் எங்களுக்கே தனியிடம். டெங்கு நோயில் நாங்களே சாதனை. மதுபானம், சிகரெட், சோடா இவற்றின் நுகர்வில் எங்களுக்கு இணை எவரும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில் தொலைபேசி எங்கள் கலாசாரத்தையும் வருமானத்தையும் கருவறுத்துக் கொள்ள, வாகனங்கள் வெளியேற்றும் கரும் புகை, வெண்புகைப் படலந்தான் எங்கள் மூச்சு. இதுபோதும், இந்தப் பிறப்பில் இந்த அனுபவிப்பு. நிச்சயம் அடுத்த பிறப்பு யாழ்ப்பாணத்தாருக்கு அறவேயில்லை.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment