ஏமாற்றும் இந்தியா, ஏமாறும் தமிழினம்

"........போர் முடிந்து மூன்றாண்டுகளாகப் போகின்ற நிலையில் இந்தியாவின் உதவிகள் மிகமெதுவாகவே நகர்கின்றன. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறது என்று உலகிற்குக் காட்டிவிட்டார் கிருஸ்ணா. ஆனால் அது தமிழர்களுக்கு எந்தளவுக்குப் பயன் நிறைந்தது என்ற கேள்விக்கான பதிலை வெளியே உள்ளவர்கள் எதிர்பார்க்கப் போவதில்லை. இந்தியாவின் அமைச்சர்கள், தூதுவர்கள் போன்று வழக்கம் போலவே, கிருஸ்ணாவும் வந்து போயுள்ளார்.அவரது பயணத்தினால் தமிழர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை அவர் இங்கிருக்கும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசு புறக்கணித்ததில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று அவர் கூறியதும், எப்போதுமே இந்தியா எங்கள் பக்கம் தான் என்று அதே செய்தியாளர் மாநாட்டில் பீரிஸ் குறிப்பிட்டதும், ஒரே கோட்டில் தான் இருநாடுகளும் நிற்கின்றன என்பதை உறுதி செய்கின்றது......."


வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் - கடந்த 14 மாதங்களில் இரண்டாவது தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கடந்தவாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் வரப்போகிறார் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்னரே வெளியாகி விட்டதால், கொழும்பிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் பரபரப்பான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

கொழும்பு இரண்டு விதங்களில் தயார்படுத்தல்களை மேற்கொண்டது. 

முதலாவது அதிக சிக்கலில்லாத விடயம்- இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடுவது பற்றியது. 

இரண்டாவது விவகாரம் தான் முக்கியமானது- அரசியல்ரீதியாக அவர் என்ன விடயங்களைக் கலந்துரையாடப் போகிறார் என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவாறு சமாளிப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொள்வது. 

இதற்காகவே கொழும்பு அதிக நேரத்தை செலவிட்டது. 

ஏனென்றால் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இரண்டு விடயங்கள் இலங்கை அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விதத்தில் அமைந்திருந்தன. 

அதில் முதலாவது, 

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவது. 

இரண்டாவது, 

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் விசாரணைகளை நடத்துவது. 

இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் இந்தியா எத்தகைய அழுத்தங்களைக் கொடுக்குமோ என்ற கலக்கம் இலங்கை அரசுக்கு இருந்தது. 

இத்தகைய பிரச்சினைகளை எஸ்.எம். கிருஸ்ணா எழுப்பினால், எவ்வாறு பதிலளிப்பது என்று ஏற்கனவே தாயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கடந்த 16ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் நேரடியாக அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே பொங்கல் பானையுடன் ஜனாதிபதி தொடக்கம் அனைவரும் அவருக்காக காத்திருந்தனர். அவர் வந்ததும் தைப்பொங்கல் விழா நடந்தது. பொங்கல் பானையில் அரிசியிட்டார். மாலை மரியாதைகள், பூஜைகள், கலைநிகழ்வு என்று வரவேற்பு கிருஸ்ணாவை நெகிழ்வுக்குள்ளாக்கி விட்டது. இதனை அவர் செய்தியாளர்களிடமும் கூறியிருந்தார். அதன் பின்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் சந்தித்துப் பேசினார். அதன்போது அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்த எஸ்.எம்.கிருஸ்ணா பெரிதாக கதையும் கதைக்கவோ, வாக்குறுதிகளைக் கொடுக்கவோ இல்லை. 

மறுநாள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசிய அவர், நல்லிணக்கத்துக்கான வாய்ப்பை பற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி பேசவுள்ளதாகக் கூறிய எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு, அதற்கு மேலாக நாம் போகப் போகிறோம் என்று கூறி வாயை அடைத்து விட்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 

ஆனால் 13வது திருத்தத்துக்கு மேலாக என்றால் 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை விடவும் கூடிய அதிகாரங்கள் என்று தான் அர்த்தம். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரங்களை விட்டுக் கொடுக்க அரசாங்கம் இன்னமும் சம்மதிக்கவில்லை. இப்படியிருக்கும் போது எப்படி அதற்கு மேல் சென்று கொடுப்பீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சங்கடப்படுத்தவில்லை எஸ்.எம்.கிருஸ்ணா. 

அதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி நல்லிணக்கத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளாரே தவிர, இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறியபடி குறிக்கப்பட்ட காலவரையறைக்குள் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. 

இந்த இரண்டு விடயங்களிலும் வெற்றி பெற்றிருப்பது அரசாங்கம் தான். 

கிருஸ்ணாவிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது போல அழுத்தங்கள் ஏதும் வராத்தும், அதனை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டதும் அரசுக்குப் பெரிய நிம்மதி. 

அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு அவசியம் என்று கூறிய எஸ்.எம்.கிருஸ்ணா, அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது என்றும், அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று அவர் கூறியதும், எப்போதுமே இந்தியா எங்கள் பக்கம் தான் என்று அதே செய்தியாளர் மாநாட்டில் பீரிஸ் குறிப்பிட்டதும், ஒரே கோட்டில் தான் இருநாடுகளும் நிற்கின்றன என்பதை உறுதி செய்கின்றது. 

கிருஸ்ணாவின் பயணம் அரசியல்தீர்வை துரிதப்படுத்தும் என்று சில தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்ட போதும், அது சாத்தியமாகப் போவதில்லை என்பது கிருஸ்ணாவின் கொழும்பு நகர்வுகளும் சந்திப்புகளும் உறுதி செய்து விட்டன. அவர் யாழ்ப்பாணத்திலும் கூட அதிகாரப் பங்கீடு அவசியம் என்று தான் கூறியுள்ளார். அதைவிட அங்கு சொல்வதற்கு வேறு எந்தச் செய்தியும் அவரிடத்தில் இல்லை. அத்துடன் இந்திய உதவித் திட்டத்தில் கட்டப்பட்ட 48 வீடுகளை அவர் கையளித்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 50 ஆயிரம் வீடுகளை வடக்கில் தமிழர்களுக்கு கட்டித் தருவதாக இந்தியா வாக்குறுதி கொடுத்தது. கடந்த 2010 நவம்பரில் இலங்கை வந்தபோது கிருஸ்ணா அடிக்கல் நாட்டி விட்டுப் போனார்.1000 முன்னோடி வீடுகளை அமைப்பதற்கு திட்டமிட்ட போதும் இதுவரை 48 வீடுகள் தான் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கே 14 மாதங்கள் சென்றுள்ளன. 

போர் முடிந்து மூன்றாண்டுகளாகப் போகின்ற நிலையில் இந்தியாவின் உதவிகள் மிகமெதுவாகவே நகர்கின்றன. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறது என்று உலகிற்குக் காட்டிவிட்டார் கிருஸ்ணா. ஆனால் அது தமிழர்களுக்கு எந்தளவுக்குப் பயன் நிறைந்தது என்ற கேள்விக்கான பதிலை வெளியே உள்ளவர்கள் எதிர்பார்க்கப் போவதில்லை. இந்தியாவின் அமைச்சர்கள், தூதுவர்கள் போன்று வழக்கம் போலவே, கிருஸ்ணாவும் வந்து போயுள்ளார்.அவரது பயணத்தினால் தமிழர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை அவர் இங்கிருக்கும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசு புறக்கணித்ததில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி இன்போ தமிழ் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment