"அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கமும் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். அமெரிக்கா விரும்புவது போன்று அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்ற எந்த முயற்சிகளும் எடுக்கப்படாது போனால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தீவிரமடையும். ஆனால் அது குறுகிய காலத்துக்குள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே வெள்ளை மாளிகை மனுவுக்கான பதிலில் இருந்து தெரிகிறது. இதனை வைத்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணைகள் குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டும் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் போர்க்குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகத் தீவிரமாகவே எடுத்துக் கொண்டுள்ளது என்றும் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது"
போர்க்குற்ற விசாரணையில்அமெரிக்கா தலையிடுமா?
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது போதுமானதாக இல்லை என்று கருத்து வெளியிட்ட அமெரிக்கா, அந்த அறிக்கை பற்றிய முழுமையான விமர்சனங்கள் எதையும் இன்னமும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ இந்த அறிக்கையில் உடன்பட்ட, உடன்படாத விடயங்கள் எவை எனச் சுட்டிக்காட்டவில்லை.
போர்க்குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்திய நாடுகளும் சரி, உள்நாட்டு விசாரணையே போதும் என்று அடித்துக் கூறிய நாடுகளும் சரி இந்த விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன. இந்தநிலையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்குமா என்ற கேள்வி நீண்டகாலமாவே இருந்து வருகிறது. ஏனைய நாடுகளில் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பை விட, அமெரிக்கா விடயத்தில் இந்த எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளது. அத்துடன் அமெரிக்கா நகர்த்தினால் தான் இந்தத் தேர் முன்னகரும் என்பதும் முக்கியமானது.
அடுத்து,
சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரி 5000 இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்ட மனுவொன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்ப்ப்பட்டிருந்தது.
கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஜிம் மக் டொனால்ட், அமெரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்களை அனுப்புவதற்காக வெள்ளை மாளிகையினால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில் இந்த மனுவை உருவாக்கினார். இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்காக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 5000 பேர் இந்த மனுவில் ஒப்பமிட்டால், அது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று அதிகாரிகால் கூறப்பட்டிருந்தது. அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஒரு மாதகால அவகாசத்துக்குள்ளாகவே 5000 இற்கும் அதிகமானோரின் ஒப்பங்கள் கிடைத்தன. மொத்தம் 5938 பேர் இதற்கு ஆதரவாக ஒப்பமிட்டிருந்தனர். இது ஒன்றும் ஒருமுறை கிளிக் செய்து வாக்களிக்கும் முறை அல்ல. இதற்கென வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் பெயர் விபரங்களைக் கொடுத்து விண்ணப்பித்து அங்கிருந்து வரும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இணைப்பில் சென்றே ஒப்பமிட முடியும். எனவே தில்லு முல்லுகளுக்கு இடமில்லை.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கக் கோரும் இத்தகைய மனுவொன்றுக்கும் இந்த இணையத்தில் ஆதரவு தேடப்படுகிறது. ஆனால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையிடுவது பற்றிய கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க 25 ஆயிரம் பேரின் ஒப்பங்களைக் கோரியுள்ளது வெள்ளை மாளிகை. இதைத் தவறாக புரிந்து கொண்ட சில ஊடகங்கள், 25 ஆயிரம் பேர் ஒப்பமிட்டால், சரத் பொன்சேகா விடயத்தில் அமெரிக்கா தலையிடும் என்று செய்தி வெளியிட்டன. ஆனால் உண்மை அதுவல்ல. 25ஆயிரம் பேர் ஒப்பமிட்டால் இந்தக் கோரிக்கையை வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் அவ்வளவு தான். சிலவேளைகளில் இந்தக் கோரிக்கை ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். இது ஒரு தனிநபர் சார்ந்த விவகாரம் என்பதால் அதிகளவு ஒப்பங்களை கோரியது வெள்ளை மாளிகை.
ஆனால்,
ஆயிரக்கணக்கானோரின் மனிதஉரிமைகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், போர்க்குற்ற விசாரணை பற்றிய மனுவுக்கு 5000 பேரின் ஒப்பங்கள் மட்டும் இருந்தால் போதும் என்றது. இந்த மனுவை வௌ்ளை மாளிகை பரிசீலித்த பின்னர், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து பதில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் எச்.போஸ்னர் இந்த பதிலை, இணையம் மூலம் ஒப்பமிட்டவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும், வௌ்ளை மாளிகையின் இணையப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மனிதஉரிமை மீறல்கள் விவகாரங்கள் விடயத்தில் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை அரசாங்கம் இந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு அனைத்துலக கட்டுப்பாடுகளுக்கு அமையப் பதிலளிக்கும் என்று நம்புவதாகவும், பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசைத் தொடர்ந்தும் தாம் வலியுறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படைப் பொறுப்பை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு அரசாங்கத்தினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தான் விவகாரம்.
அதாவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா ஆதரிக்குமா?
என்ற கேள்விக்கான பதில் இங்கேயே இடம் பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியாக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தத் தவறினால் அல்லது அதற்கு விரும்பாது போனால் மட்டுமே சர்வதேச போர்க்குற்ற விசாரணை சாத்தியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இன்னமும் முழுமையான எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் உள்ளது. அமெரிக்காவின் இந்த மௌனம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதை இலங்கை அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.
முன்னதாக அமெரிக்கா இந்த அறிக்கை வெளியானதும், பொறுப்புக் கூறுவதற்குப் போதுமானதல்ல என்ற கருத்தை கூறியதுடன் நின்று கொள்ளவில்லை. அதற்கு அப்பால் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசுடன் இராஜதந்திர வழிகளின் ஊடாகப் பேச்சுக்கள் நடத்தியதாகவும் தகவல்கள் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெளிவிவகார கொள்கை வகுப்புப் பிரிவைச் சேர்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் நால்வர் கொழும்பு வரவுள்ளனர். ஒரே மாதத்தின் கிட்டத்தட்ட சமமான நாட்களில் அமெரிக்கா இப்படி நான்கு அதிகாரிகளை தனித்தனியாக இலங்கைக்கு அனுப்பிய நிகழ்வு ஏதும் இதற்கு முன் நடந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் பொறுப்புக் கூறுதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தே அரசாங்கத்துடன் விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறினால் அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழலில் தான் சர்வதேச விசாரணை என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் எந்தக் காலவரையறையையும் அது முன்வைக்கவில்லை. ஆனால் இந்தியாவோ குறிப்பிட்ட காலவரையறைக்குள் அதனை செய்ய வேண்டும் என்கிறது. இதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் குறுகிய காலத்துக்குள் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கமும் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். அமெரிக்கா விரும்புவது போன்று அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்ற எந்த முயற்சிகளும் எடுக்கப்படாது போனால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தீவிரமடையும். ஆனால் அது குறுகிய காலத்துக்குள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே வெள்ளை மாளிகை மனுவுக்கான பதிலில் இருந்து தெரிகிறது. இதனை வைத்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணைகள் குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டும் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் போர்க்குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகத் தீவிரமாகவே எடுத்துக் கொண்டுள்ளது என்றும் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு வகையில் இலங்கை அரசுக்கான எச்சரிக்கை தான்.இது போல பல எச்சரிக்கைகளை அமெரிக்கா வழங்கி விட்டது. ஆனால் அவையெல்லாம் அரசின் காதுகளில் ஏறியதாகவே தெரியவில்லை.
நன்றி இன்போதமிழ்
0 கருத்துரைகள் :
Post a Comment