பண்டாரநாயக்கவின் வழியில் காய் நகர்த்தும் அரசாங்கம்


மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதிர் நோக்கும் அரசியல் பொருளாதார ரீதியான வங்குரோத்துத் தன்மையானது மென்மேலும் தெளிவாகத் தெரிந்து வருகிறது. அதனை மூடி மறைப்பதற்கென அரச உயர் மட்டத்தினர் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவது கண்கூடு. 


முதலாவதாகப்பார்க்குமிடத்து  அண்மையில் பிரதம மந்திரி டீ.எம். ஜயரத்ன இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிற்ற என்னும் இடத்தில் இடம்பெற்ற  கூட்டமொன்றில் இனப் பூசலுக்கு சாபமிடும்  வகையில்  உரையாற்றியதைக் குறிப்பிடலாம். அதாவது சிங்கள இனம்  தேய்பிறையாகக் கொண்டு போகும் நிலையில் உள்ளதாகவும் அழிந்து போகும் நிலையைக் கூட எதிர் நோக்குவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தில் பிள்ளைகள் இருந்தனராயினும் தனக்கு 3 பிள்ளைகள் தான் உள்ளனர். அது போலவே பல குடும்பங்களில்  குறைந்த எண்ணிக்கையிலேயே பிள்ளைகள் உள்ளனர் எனவும் அவர்  கூறினார். துருவப் பகுதிகளில் வாழ்ந்து வரும் எஸ்கிமோக்களின்  நிலையில் இன்று   இலங்கையில் 13.3 மில்லியன் சிங்கள மக்கள் தான் வாழ்கின்றனர் என்று பிரதமர் ஜயரத்ன தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி  ராஜபக்ஷவின்  ஆப்த விசுவாசியாகிய ஜயரத்ன அவரது ஆட்சியைத் தக்கவைப்பதற்குக் கையாளும் யுத்ததியாகவே இது கருதப்பட வேண்டியுள்ளது. 

1956 இல் பதவியைக்  கைப்பற்றுவதற்கு சிங்களம வாக்கு வங்கியை குறிவைத்து பண்டாராநாயக்க எவ்வாறு சிங்களம் மட்டும் சட்டத்தை 24 மணித்தியாலயத்தில் கொண்டு வரப் போவதாக உறுதியளித்து நாட்டைப் பேரினவாத சகதிக்குள் தள்ளி விட்டாரோ அவ்வாறாகவே  இன்றும் காய்கள் நகர்த்தப்படுகின்றதைக் காணலாம். அன்று பாராளுமன்றத்தில்   சிங்களம் மட்டும் மசோதாவைச் சமர்ப்பித்து பண்டார நாயக்க ஆற்றிய உரையில் குறிவைத்த ஒருபகுதியைப் பார்ப்போம். 

அன்று அரச சபையில் ஆங்கில மொழிக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட வேண்டுமென்று ஜே.ஆர்.ஜயவர்தன ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார். பின்பு அப் பிரேரணையானது சிங்களமும் தமிழும் என்று திருத்தப்பட்டது. அது ஆட்சேபிக்கப்படவில்லை. பின்பு ஒரு கொந்தழிப்பு நிலைமை உருவாகியது.  சம அந்தஸ்துடைய (இரு) அரச கரும மொழிகள் என்பது தமக்கு ஆபத்து நிறைந்தது என்று தென்னிலங்கை மக்கள் அச்சமடைந்தனர்.  சிங்கள மொழியானது   தொடர்ச்சியாக வளர்ச்சியடைவதற்கு அது மிக மிகக் குந்தகமாயிருக்குமென அவர்கள் கலக்கமடைந்தனர். அது  சிங்கள மொழியை  ஒழித்து விடும்  என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர். வேறு பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் தமிழ்  மொழியைப் பேசுகின்றனர் என்றும் அம்மொழிக்கு பெரியளவிலான இலக்கியம் உண்டெனவும் தமிழ் மக்கள் தமது கலை, கலாசாரங்களைப் பரப்புவதற்கு அத்தனை வழிமுறைகளும் உள என்பதால் இந்த நாட்டில் ஒரு சில கோடி மக்கள் பேசும் சிங்கள மொழியை விட தமிழ் மொழிக்கு அதிகளவு நன்மை பயக்கி விடும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்  என்றெல்லாம் பண்டாரநாயக்க கூறினார். 

மேலும்  வடக்கு, கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதால் சிங்கள மாகாணங்களிலும் கூட இந்தியத் தமிழர் அடங்கலாக பெருவாரியான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதால் ஒருவேரேனும் என்பதற்கப்பால் பெரியளவிலும் கூட வியாபாரத் துறையிலும் தமிழ் மக்கள் ஈடுபட்டிருப்பதால் சிங்கள மொழிப் பிரயோகம் தானாகவே சுருங்கி காலக்கிரமத்தில் பெரும்பாலும்  அழிந்துவிடும் என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றனர் என்று   தனதுரையில்  குறிப்பிட்டிருந்தார்.


அநாகரிக தர்மபாலாவின் சிங்கள தேசியவாதம் பண்டாரநாயக்கவின் பேரினவாதம்


எனவே தான் அன்று முதல் இன்று வரை இந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் சிங்கள பேரினவாதத்தை தமது  அரசியல் கருவியாகக் கையாண்டு வந்துள்ளன. அன்று அந்நிய ஆட்சிக்கெதிராக  அநகரிக தர்மபால பரப்பிவந்த சிங்கள தேசிய வாதமானது பண்டாரநாயக்க யுகத்தில் இனவாதமாகவும் சிங்கள பேரினவாதமாகவும் பரிணமித்தது எனலாம். சிங்கள தமிழ்  இரு இனங்களும் போராடி 1948  இல் பெற்ற சுதந்திரமானது சிங்கள இனத்துக்குத் தான் உரியது என்று இரு பிரதான ஆளும் கட்சிகளினதும் சிந்தனை துளிர் வி ட்டதன் காரணமாகவே அன்று சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு இரு கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக காய்கள்  நகர்த்திய வரலாற்றினை யாரும்  கம்பளத்தின் கீழ் தள்ளிவிட முடியாது. 

அது மட்டுமல்லாமல் தமிழரின்  இனவிடுதலைப் போராட்டங்கள் சாத்வீகமாக நடத்தப்பட்டபோதெல்லாம். இருபெரும்பான்மைக் கட்சிகளுமே அவ்வப்போது பதவியிலிருந்தபோது நசுக்கி  வந்தன. அடுத்து தமிழர் தரப்பில் ஏறத்தாழ 3 தசாப்தங்களாக நடத்தப்பட்டு வந்த  ஆயுதப் போராட்டமும் 2009  மே மாதம்  முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு  2 1/2வருடங்கள் கழிந்த நிலையிலும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அடிப்படைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு உண்மையான அமைதி, சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்குத் தவறி விட்டது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது மீளக் கட்டியெழுப்பப்படுகிறது. இரண்டாவது ஆயுதப் போராட்டமாகி விடக் கூடிய பாரிய சவால் ஒன்றுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது  என்றெல்லாம்  பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பேசாத நாளில்லை என்பதை இன்று பலம் அறிவர் மரணித்து விட்ட புலி ஒன்றின்  உடைந்துள்ள எலும்புக் கூட்டினை நிறுத்தி வைத்த நிலையில் கோட் சூட் அணிந்து கையொன்று அதனை அச்சுறுத்தல்  என்று விரல் நீட்டிக்காட்டும் கேலிச்சித்திரம் ஆங்கிலம் இதழொன்றில் (டெயிலிமிரர்  13.01.2012) வெகு சுவாரஸ்யம் நிறைந்ததாக வரையப்பட்டிருந்தது. 

இதனிடையில் பாதுகாப்புச் செயலாளரின்  பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்தில் சென்ற வாரம் உரையாற்றிய  போது ஜே.வி.பி. எதிர் தரப்பினர்  மற்றும் விடுதலை  செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும்  இரண்டாவது ஆயுதப் போராட்டத்திற்  தயாராகுவதாக அனுபல்லவியை இசைத்தார். எதையும் மனம் போன போக்கில் அழுத்தியுரைப்பதில் திசாநாயக்க வல்லவர் தானே!  

பேராசிரியர் ஏணெஸ்ட் பெட்றி  வழங்கியுள்ள அறிவுரை  
ஸ்லொவீனய நாட்டு  அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் பேராசிரியர் ஏணெஸ்ட் பெட்றி வழங்கியுள்ள அறிவுரைகளை அவதானித்தேன். இவர் தனது நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகள் துறைக்கான பேராசிரியராகவும் அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ட்றியா ஆகிய நாடுகளுக்கான முன்னாள் தூதுவராகவும் பணியாற்றியவர். 

12.01.2012 ஆம் திகதி இவர் டெயிலி மிரர் ஆங்கில இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்துகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது நல்லதென்று கருதுகிறேன். அதாவது குறிப்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு செயற்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது ஒரு நல்ல முயற்சியென்று ஏணெஸ்ட் லெட்றி குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் கடந்த பல தசாப்தங்களாகப்  பெற்ற  அனுபவங்களின் படி பார்க்குமிடத்து வெளிநாட்டுத் தலையீடுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட பிரச்சினைகளை மோசமடையச் செய்த நிகழ்வுகள் பல என்பதைக் காணலாம். அதுவிடயமாக யாரும் மிக மிக அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அந்த வகையில்  இலங்கை அரசு தானாகவே தனது பொறுப்புக் கூறும் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

எந்தவொரு பிரச்சினையும் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படக் கூடியதாயிராது. அது ஒரு தொடர் முயற்சியாயிருக்க வேண்டிவரும்.  இலங்கை அரசாங்கம் இதனை ஆரம்பித்துள்ளது. காலப் போக்கில் இது தொடர்பாக வெளிநாட்டு உதவியையும் நாடுவதற்கு இலங்கை அரசு  சுயமாகவே தீர்மானிக்கக் கூடும் என்றும் பெட்றி கூறிய தோடு யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளதை ஒரு சாதனையாக ஸ்லொவீனியா கணிக்கிறது. இப்போது மக்கள் சமாதானத்தை அனுபவிக்க முடியும்  என்பது தான்  மிக மிக முக்கியமானதாகும். அதேநேரத்தில் நல்லிணக்க முயற்சியில் கருணை என்பது முக்கியமான உள்ளீடாகும். வெற்றிக் கொண்டாட்டம் குறைந்த அளவிலும் கருணை தான் கூடிய அளவிலாதனதாயிருக்க வேண்டும் என்றும் பெட்றி கூறியுள்ளார். 

அன்று ருவாண்டாவில் சர்வதேச சமூகம் தலையிடத் தவறியதையிட்டு தான் கவலையடைந்ததாகவும் சிறெபிறினீக்கா மற்றும் பொஸ்ணயாவில் நடத்தப்பட்ட பிரளயத்தைத் தவிர்ப்பதற்கான பங்களிப்பு செய்யப்படவில்லையென்றும் பெட்றி வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த அழிப்புகளை அவர் எவ்வாறு இனங்கண்டிருப்பாரோ என்று தெரியவில்லை. அடுத்து சர்வதேச வாழ்வியல் சட்டத்தை தான் அலாதியாக ஆதரிப்பதாகவும் குறிப்பாக பலம் குன்றிய  மக்களுக்கு அது   பெரிய  உதவித் தரமாயுள்ளது. பலம் வாய்ந்ததவர்கள் சிலவேளையில் சட்டத்தை மதிப்பதில்லை.  பலம்  குறைந்தவர்களுக்குத் தான் சட்டத்தின் பாதுகாப்பு அவசியமானதாகும் என்றும் ஏணெஸ்ட் பெட்றி கூறியள்ளது பெரிதும் வரவேற்புக்குரியதாகும். 

ஆனால் இலங்கையில் அரசியலமைப்பு நீதிமன்றம் என்று ஒன்று இல்லை என்பதையும் ஒட்டுமொத்தமான நீதித்துறை கூட சுயாதீனமின்றியுள்ளதைப் போராசிரியர் பெட்றி நிச்சயமாக அவதானித்திருப்பார். இலங்கையில் கடந்த பல வருடங்களாக நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டு சீர்கேடுகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளக் கொடி  வழக்கில் கடுமையான  தொனியிலான  எதிர்த்தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எம்.பீ.பி. வறவெவ, நீதிபதிகள் பதவி உயர்வுகள் சலுகைகள் மற்றும் சொகுசு வாகனங்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தீர்ப்புகள் வழங்கப்படக் கூடாது. நீதிபதிகள் பழிவாங்கும் நோக்கிலோ  வேறு சில தரப்பினரின் விருப்பு வெறுப்புக்கு எற்ற விதத்திலோ தீர்ப்புகள் வழங்கக் கூடாதென்று  சென்ற வாரம் மன்றில் கிஞ்சித்தும்  ஒளிவு மறைவின்றிக் கூறிவைத்ததைக் கூட பேராசிரியர் பெட்றி அவதானித்திருப்பார். 

எவ்வாறாயினும் ஒரு நீதிபதியென்ற வகையிலும் பழுத்த இராஜதந்திரி என்ற வகையிலும் அவர் அத்தகைய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட மாட்டார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கூட ஆங்கித்தில்  தியூறேற்ஸ் எக்  எனப்படும்  போல நல்லதும் கெட்டதும்  அடங்கியுள்ளதாயினும்  அவர் நல்லவற்றைப் பற்றிப்÷ பசியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும் அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டிய  சில அம்சங்களையும் அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார் என்பதையும் காணலாம்.

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment