இன்றைய சிறிலங்கா அரசியலில் பிரதான பேசுபொருள்களாக இருக்கும் விடயங்களில் ஒன்று, தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரசின் பேச்சுவார்த்தை. இலங்கைத்தீவில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இரு இனங்களில் ஒன்றான தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கின்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சிறிலங்காவின் அரசியல் தலைமைகளிடமிருந்து பல்வேறு வகையான காட்டமான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஜனாதிபதி ராஜபக்ச தொடக்கம் அவரது அரசியல் சகபாடிகள் வரை தெரிவிக்கும் கருத்துக்கள், வழமையான சிங்களப் பேரினவாத சிந்தனையாகவும் சிங்கள மனோநிலையைக் கையாள்வதற்கான தந்திரோபாயமாகவும் பார்க்கப்பட்டாலும், அது தமிழ்மக்களின் அரசியல் மனப்போக்கிலும் குறிப்பிட்டளவு தாக்கங்களை செலுத்திவிடுமோ? என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது.
ஏனெனில், சிறிலங்கா அரசு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நடாத்தும் பேச்சுவார்த்தையில், கூட்டமைப்பு முன்வைக்கும் காணி, காவல்துறை அதிகாரங்கள் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்றன தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள், புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் முன்வைக்கின்றது எனவும், காவல்துறை அதிகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டால் தன்னை கைதுசெய்யும் அதிகாரம் தமிழ்மக்களுக்குக் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட, பாதுகாப்பு அமைச்சையும் தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதியின் இத்தகைய மிகைப்படுத்தல்களில் இருந்து ராஜபக்சவின் அரசியல் உள்நோக்கைப் புரிந்துகொள்ளலாம்.
மேலும், இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எதிரான சிங்களப் பேரினவாத மனப்போக்கைக் கிளறி, சிங்கள மக்களின் நலன்களுக்காக, விட்டுக்கொடுப்பின்றிச் செயற்படுவதாக காட்டமுனைகின்றார். இது சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகளின் வழமையான தந்திரோபாயம். மறுவளமாக, கூட்டமைப்பு புலிகளைப்போல தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்திப் பேசுகின்றது என்ற ஒரு நம்பிக்கையான கருத்தியலையும் தமிழ்மக்கள் மனங்களில் விதைத்துவிடப் போகின்றதா? என்ற ஜயம் எழாமலுமில்லை.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கருத்துப்படி, வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, காவல்துறை அதிகாரங்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வுபற்றிப் பேசுவதாகக் கூறிவருகின்றது. ஆனால், அதன் உள்ளார்ந்தமாக நோக்கினால், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13வது அரசியல் திருத்தச்சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளக்கோரும் பேச்சுவார்த்தையாகவும் கருதமுடியும்.
கூட்டமைப்பானது, ’சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தை ஏமாற்றுத்தன்மை வாய்ந்தது. எனவே பேச்சு வார்த்தையில் உறுதிமொழிகள் தராவிட்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடரமாட்டோம்’ என்பதும் பின்னர் தனது கூற்றை மறுதலித்துவிட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதுமான சூழ்நிலை அரசியல் நகர்வுப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது.
உயர்வான அரசியல் விடுதலைக்காகப் போராடிய இனத்தின் விடுதலை உளவியலின் வீச்சைக்குறைக்க ‘உள் இணக்க, வெளி முரண்பாடு’ என்ற நீண்டகால அரசியல் உத்தி இங்கு கையாளப்படுகின்றதா? இப்படியே தொடர்வதனூடாக ‘சரி இனி என்ன செய்வது இதாவது கிடைத்ததே பெரிய விடயம்’ என்ற மனநிலையை நோக்கி தமிழ்மக்களை கொண்டு செல்லும் நோக்கம் இதனுள் மறைந்திருக்கின்றதா?
குறிப்பாக, இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் உள்ளது என்றும் கூட்டமைப்பு இந்தியாவின் பின்புலத்தில் செயற்படுகின்றது என்றும் சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. மறுவளம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள தமிழ்மக்களிற்கு ஏதாவது ஒரு தீர்வு வழங்கவேண்டிய நிரப்;பந்தத்தில் சிறிலங்கா இருக்கின்றது. எனவே இவற்றின் ஒன்றிணைந்த போக்காக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது?.
இப்படியே கூட்டமைப்பின் அதிகாரக் கோரிக்கைகளும் அது தொடர்பான முரண்பாடுகளும் பேசுபொருளாகத் தொடர்ந்தால், தமிழ்மக்களின் அரசியல் அடிப்படைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கருத்தியல் தளத்திலிருந்து பலவீனப்பட்டு, அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதே பாரிய அரசியல் அடைவாக நினைக்குமளவிற்கு தமிழ்மக்களின் உளவியலை நகர்த்திக்கொண்டு சென்று, அரசியல் அபிலாசைகளின் சிந்தனைக்கனதியைக் குறைத்து, ஒரு குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வைக்கொடுக்கும் கபட நோக்கம் மறைந்துள்ளதா? என்பதை தமிழ்மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை கவனமாக உற்று நோக்க வேண்டும்.
அரசியல் விடுதலையின் கருத்தியல்சார் போக்குகள்
இந்த இடத்தில் கூட்டமைப்பைப்பற்றிய வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால், தமிழ்மக்கள் ஏன் ஒரு தெளிவான பாதையில், சரியான நிலைப்பாட்டில் பயணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. நாம் யூத இனத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கருதினாலும்
யூத இனத்தின் அடிப்படைப் பண்பியல்புகள் எம்மிடம் இருக்கின்றதா? அப்படியாயின் அதை வளர்த்துக் கொள்ள முனைகின்றோமா? என்றால், ஆம் என்று உறுதியாக கூறமுடியாது.
யூதர்கள் விடுதலைக்கான அடிப்படைகளான சமூக, பொருளாதார, அரசியல் தளத்தை புலம்பெயர் தேசத்தில் கட்டியெழுப்பி, மக்களை ஒருங்கிணைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தளத்தை உருவாக்கி உழைத்தார்கள். தெளிவான பாதையை, பல்வேறு தளங்களில், திசைகளில் வகுத்தார்கள். தனித்தனியாக இலக்கைநோக்கிப் பயணித்தார்கள். தன்னம்பிக்கையும் திடமும் இருந்தது. உறுதியாக நம்பி அதை முன்நகர்த்தி வெற்றி பெற்றார்கள்.
யூதர்களின் போராட்டத்திற்கான சர்வதேச, புவியியல் நிலைமைகள் வேறுவகையில் இருந்தன, ஈழத்தமிழர்களுக்கு அப்படியில்லை என்ற விவாதத்தை விடுத்து, இருக்கும் சூழலையும், தேவைப்படுமிடத்து உருவாக்க வேண்டிய சூழல்களையும் நாமே உருவாக்க உழைக்க வேண்டும். மாறாக வாய்ப்பான சூழல் வருமென்று காத்திருக்கலாம் என்பது ‘இலவு காத்த கிளி மாதிரி’ போய்விடும்.
சிங்களத்தின் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும், தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தும் தலைமைகளிடம் மற்றும் அரசியல் பற்றி பேசுபவர்களிடம் இருக்கும் மனப்போக்கின் தன்மையே தற்போதைய மீள் எழுகையின் தடைக்காரணிகளாக இருக்கின்றன. எவ்வகையான மனப்போக்கு, குறிப்பாக, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எப்படியிருக்கின்றது என நோக்குவோமாயின்,
• இணக்கநிலை மனப்பாங்கில் தமிழ்மக்களின் இனவிடுதலை பற்றிய சிங்களத்தின் சிந்தனையை தத்துவார்த்தமாக மறுவாசிப்பு செய்யும் மனப்போக்கு.
• ஒருமுனைப்படாமல் உள்முரண்பாடுகளில் அதிகமான வலுவையும் வளத்தையும் செலவழிக்கும் மனப்போக்கு.
• தோல்வி மனப்பான்மையில், சரணாகதி அடைந்து, சிங்களத்துடன் இணைத்து போய் தருவதை வாங்குவோம் என்ற கருத்தியல் அடித்தளத்தில் செயற்படும் மனப்போக்கு.
• தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையைத் தெளிவாகக் கொண்டிருந்தாலும் தெளிவான, பரந்தளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய மூலோபாயங்களை கொண்டிராத தன்மையும், ஒற்றுமையின்மையும் கொண்ட மனப்போக்கு.
• ’புலி எதிர்ப்பு’ என்ற ஒரே மனநிலையில், தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட்டத்தையும் அரசியல் முன்னெடுப்புகளையும் ‘குதர்க்கம்’ பண்ணும் மனப்போக்கு.
• விடுதலை நிகழ்வுகளும் சிறு சிறு அடைவுகளும் உணர்வு, கருத்தியல் ரீதியாக மக்களை ஒன்றாக்கி வைத்திருக்க மிக அவசியமானவை. ஆனால் அதை மட்டுமே பாரிய அரசியல் அடைவுகளாகக்கருதி திருப்தியடையும் மனப்போக்கு.
இவ்வாறான உளவியல்சார் நடத்தைகளே தொடர்ந்தும் வேகமாக நகரமுடியாத நிலையை மக்கள் மத்தியில் வைத்திருக்கின்றன.
சிங்களத்துடன் இருப்பவர்களையும் அவனது கொள்கைக்குச் சார்பாகத் தனது வாழ்வரசியலை நடாத்துகின்றவர்களையும் சிங்களத்துடன் சேர்த்தே கையாளலாம். ஆனால் ஈழத்தமிழ்மக்களுடன் இருந்து கொண்டு, தம்மை அரசியல் மேதாவிகள் போல நினைத்து, இணக்கநிலை அல்லது சரணாகதி அரசியல் மனநிலையில் நின்று செயற்படுபவர்கள், நம்புகின்றவர்களின் கருத்துக்கள் சாணக்கியமாகவும் புலமைசார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்துக்கள் மெல்ல மெல்ல நஞ்சூட்டுவது போன்று விடுதலைக்கு வீச்சுக் கொடுக்காது பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல ஈழத்தமிழர்களின் அரசியல் முனைப்புகளைச் சிதைத்துவிடும்.
இப்படியான பல முரண்பாடுகளின் விளைவு சிங்களத்தின் தந்திரோபாய வெற்றிக்கு வழியமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. விடுதலைக்கான செயற்பாடுகளில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஆளுமையின் அடிப்படையில், ஒவ்வொரு செயற்பாடு உண்டு. அவை பல்வேறு தளங்களில், திசைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதைத் தெளிவாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அர்த்தமற்ற முரண்பாடுகள் களையப்பட்டு தெளிவான இலக்கை நோக்கி நகர முடியும். சிங்கள மூலோபாயங்களைத் தந்திரமாக வெல்வதற்கான வழிகள் எமது செயற்பாட்டின் விரிவாக்கத்தில்தான் மறைந்திருக்கின்றன.
மாற்றமடையாத சிங்களத்தின் மனப்பாங்கை வெற்றி கொள்ளக்கூடியவகையில் தமிழ்மக்களின் மனப்பாங்கு மேம்படுத்தப்பட வேண்டும், ஒழுங்குபடுத்தப்படவேண்டும், குழப்பத்துடன் நம்பிக்கையற்றிருப்போருக்கு தமிழ்மக்களின் அடிப்படைப் பண்பியல் ஒளியைப்பாய்ச்சி, புதுப்பித்து, சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும். இதுவே தோல்வி, சரணாகதி மனநிலையில் இருந்தும் குதர்க்கவாத மனநிலையில் இருந்தும் விடுபட்டு, எதிர்நீச்சல் போடக்கூடிய மனவலிமையுடன் நகர்வதற்குரிய ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
எனது கட்டுரை ஒன்றுக்கான பின்னூட்டத்தில் ‘நாங்கள் யுதர்களைப் போல இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது சிங்களவர்கள் போல ஒற்றுமையாக இருந்தாலே அரசியல் விடுதலை சாத்தியம்’ என தெரிவிக்கப்பட்டிருந்ததுதான் நினைவிற்கு வருகின்றது. ஏனெனில் சிங்கள அரசியல் தலைமைகள் அரசியலில் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் சிங்களத் தேசியவாதம் அல்லது தமிழ்த்தேசியத்திற்கான எதிர்ப்பு என்று வரும்போது ஒன்றாகக் கைகோர்ப்பார்கள். சரி பிழை என்ற உள்விவாதங்களுக்கு அப்பால் சிங்களத்தேசியவாதச்சிந்தனையில் ஒன்றாக, உறுதியாக நிற்பார்கள். சுயவிமர்சனம் தேவை என்ற பெயரில் இனத்தை சிறுமைப்படுத்தும், அரசியல் முயற்சிகளைச் சீரழிக்கும் செயற்பாடுகளைச் செய்யமாட்டார்கள்.
எனவே, தமிழ்மக்களின் அரசியல் மனோபலத்தின் திடத்தன்மையை மழுங்கடிக்கும் செயற்பாடுகளைச் செய்யாமல், முடிந்தவரை உண்மையான, நேர்மையான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உண்மையான அரசியல் என்பதன் விளக்கம் உன்னதமான தியாகங்களின் உண்மைத்தன்மையையும் அவர்களின் சிந்தனைகளையும், விடுதலைப்போராட்டத்தின் அரசியல் வரலாற்றையும் மழுங்கடிக்காத, அவற்றை வலுப்படுத்தக்கூடியதாக இருப்பது அவசியமானது.
இறுதியாக, கொள்கையளவில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப்பற்றி பேசினாலும் தற்போது கூட்டமைப்பு பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தை, அரசியல் அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையாகக் கருத இயலாது. மாறாக இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அமைவாக சிறிலங்காப் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கான அதிகாரங்களை வழங்குமாறு கோரும் பேச்சுவார்த்தை என்றே கருதவேண்டும். எனவே இந்த பேச்சுவார்த்தையைப் பெரிதுபடுத்தித் தமிழ்மக்களுக்குத் திருப்தியைக் கொடுக்க முடியாது. வேண்டுமானால், சிறிலங்காப் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் திருத்தச்சட்டத்தைக் கூட சிறிலங்கா அரசு வழங்குவது தொடர்பில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதனூடாக, தமிழ்மக்களின் சிங்களத்தின் மீதான நம்பிக்கையற்ற போக்கின் அடிப்படைக் காரணத்தை மீண்டும் ஒருமுறை புரியவைப்பதற்காகப் பயன்படலாம்.
தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை சிங்களத்தலைமைகள் இலகுவாகத் தந்துவிடப்போவதில்லை. எனவே, இழுத்தடிப்புக்களின் மூலம் எமது தாயகக்கோட்பாட்டை வலுவிழக்கச் செய்யும் சிங்களத்தின் தந்திரோபாயங்களுக்குள் சிக்குண்டு போகாமல் இருப்பதற்கு பல்வேறு தளங்களில் விடுதலைக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தாயகத்தில் தமிழ்தேசிய அரசியல் தலைமைகளிடம், தமிழ் அரசியல் விடுதலைக்கான அடிப்படைக் கோட்பாடுகளைத் தக்கவைப்பதிலும், தாயகத்திற்கு வெளியே, அக்கோட்பாடுகளைப் பலமடையச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலும் மனப்போக்கில் மாற்றங்கள் நிகழவேண்டும். அதன் திரட்சிதான் விடுதலைப்போராட்டத்தின் வெற்றிக்கான அடித்தளமாக அமையும்.
எனவே, பதவிகளின் தக்கவைப்பு என்பதை விடுத்து, உண்மையான கௌரவமான அரசியல் முன்னெடுப்பிற்காகத் துறவறம் புணக்கூடிய மனோநிலையில் தாயகத்தில் தேசியத்தை பேசும்; அரசியல் தலைமைகள் தங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பார்களா? கூட்டமைப்பின் அரசியல் நகர்வு மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் கருத்திற் கொண்டு, ஒரு திறந்த விவாதத்தை நடாத்தி மக்களுக்கு விளக்கமளிப்பார்களா? தமிழ்மக்களின் அரசியல் அடிப்படைகளின் அடித்தளத்தில் தமது அரசியல் நகர்வுகளைச் செய்வார்களா? என்பதுதான் சராசரி தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஒலிவடிவம்
ஒலிவடிவம்
அபிஷேகா
Your sayings might be correct. But you must consider the ground situation in Sri Lanka.
ReplyDeleteIt seems the TNA is trying to go step-by-step. They are trying to reach the FIRST STEP. They have still not come to the starting point.
So let us wait and see.