விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்திலும், அனைத்துலக ராஜதந்திரிகள் மத்தியிலும் எடுத்துரைக்கச் செய்யும் நோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தபோது, கிளிநொச்சியின் கட்டளைகளுடனேயே கூட்டமைப்பின் பயணம் நடைபெற்றது. அது கூட்டமைப்பின் தலைமைகளுக்கு உவப்பானதோ, கசப்பானதோ, அதுவே சாத்தியமானதாக இருந்தது. விடுதலைப் புலிகளது தமிழீழ இலட்சியத்தைத் தாண்டி ஒற்றை வார்த்தை கூட அவர்களிடமிருந்து வெளிப்பட்டது கிடையாது. அவர்கள் தேர்தலில் விடுதலைப் புலிகளால் வெற்றிபெற வைக்கப்பட்டு நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னர், மாவீரர்கள் முன்னிலையில் 'தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உண்மையாக உழைப்போம்' என்று சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்கள். அதன் காரணமாகவே, இப்போதும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வாக்களிப்பதற்கும், இன்னமும் அவர்களை நம்புவதற்கும் விடுதலைப் புலிகளே காரணமாக உள்ளார்கள்.
வட்டுக்கோட்டைப் பிரகடனம் முதல் முள்ளிவாய்க்கால் இறுதிநாள் வரை விடுதலைப் புலிகள் தமது தமிழீழ இலட்சியம் குறித்த எந்தச் சமரசத்திற்குள்ளும் தமிழீழ மக்களைப் புதைக்கவில்லை. இறுதிக் கணம்வரை அந்த இலட்சியத்திற்காகவே போராடி உயிரையும் அர்ப்பணித்தார்கள். அந்த மண்ணிலே வீழ்ந்த புலிகளும், அங்கிருந்து அடுத்த கட்ட நகர்வுகளுக்காகத் தப்பி வெளியேறிய புலிகளும், அவர்களது புலம்பெயர் தளங்களும் தமிழீழ இலட்சியத்தை யாருடனும் சமரசம் செய்துகொள்ள முயற்சிக்கவில்லை. அப்படி முயற்சிப்பவர்கள் விடுதலைப் புலிகளும் அல்ல. இறுதிப் போர் வரையும், அதன் பின்னரும் பெரும் அழிவுகளையும், அவலங்களையும் சுமந்த தாயகத்து மக்களும், அவர்களது சோகங்களையும், கோபங்களையும் நெஞ்சங்களில் ஏந்தியபடியே தம் உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களும் தமிழீழ விடுதலை என்ற தமது இலட்சியத்தைக் கைவிட்டுவிட்டதாக இன்றுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்காக மாகாண சபைக்குப் போராடுகின்றது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாக, தமிழீழக் கோரிக்கையில் சமரசம் செய்து கொள்வதானால் தமிழீழ மக்களிடமும், சிங்களக் கொடூரங்கள் காரணமாகப் புலம்பெயர்ந்து இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்து வாழும் தமிழர்களிடமும் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படியான ஜனநாயக முறைமையிலான மக்களாணையைப் பெறாத எந்தத் தீர்வும் நீடித்த சமாதானத்தை உருவாக்கப் போவதில்லை. அது இன்னொரு ஆயுதப் போராட்டத்தையே கருக்கொள்ள வைக்கும்.
தமிழ் மக்கள் அங்கீகரிக்காத மாகாண சிம்மாசனம் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சொர்க்க வாழ்வை வழங்கப் போவதில்லை. மாறாக, எப்போது விடுதலைப் புலிகள் உறக்கம் கலைவார்களோ? எப்போது எம்மீது பாய்வார்களோ? என்ற தூக்கமற்ற அச்சத்தையே வழங்கப் போகின்றது. தமிழீழ இலட்சியத்தை யாரும், யாருடனும் சமரசம் செய்துகொள்ள விடுதலைப் புலிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், இறுதித் தமிழன் உள்ளவரைக்கும் ஈழப்போர் தொடரும் என்பதில் இப்போதும் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் ஈழப் போரின் முடிவல்ல, சிங்கள இனவாத மேலாதிக்கத்தை எதிர்த்துத் தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழ் மக்கள் தம்மீது நடாத்தப்பட்ட இனப் படுகொலைக்கான நீதி கோரும் மௌன யுத்தத்தை நடாத்திக்கொண்டுள்ளார்கள். தமிழ் மக்களுக்கான நீதியை சர்வதேசங்களும் வழங்க மறுத்தால், மீண்டும் விடுதலைப் புலிகள் உறக்கம் களைவார்கள். அவர்களை உலகத் தமிழர்கள் தட்டி எழுப்புவார்கள்.
இந்த நியதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் யதார்த்தங்களை வென்று தமிழீழத்தை அடையும் போராட்டத்தில் உலகத் தமிழர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். நேற்றைய பொழுதுகள் எல்லாமே அப்படியே இருந்துவிடவில்லை. மாற்றம் ஒன்றைத் தவிர, அனைத்துமே மாறும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழம் நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
காந்திக்கு முன்னர் இந்திய விடுதலையும், கஸ்ரோவுக்கு முன்னர் கியூபா விடுதலையும், நெல்சன் மாண்டேலாவுக்கு முன்னரான தென்னாபிரிக்க மக்களது விடுதலையும் யதார்த்தத்துடன் சம்மந்தப்பட்டிருக்கவில்லை. உலக தார்த்தங்கள் இவர்களது போராட்டங்களைக் கட்டுப்படுத்தவில்லை. இவர்கள் அனைவருமே நீதியை நம்பினார்கள். நேர்மையாகப் போராடினார்கள். அதனால், அந்த நாடுகள் விடுதலை அடைந்தது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஒலு கறுப்பினத் தலைவர் அமெரிக்க அதிபராவார் என யாராவது சொல்லியிருந்தால், அது உலகின் மிகப் பெரிய நகைச்சுவையாகவே கருதப்பட்டிருக்கும். அமெரிக்க மண்ணில் அடிமைகளாக நடாத்தப்பட்ட ஆபிரிக்க இன மக்களது விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் கூட இந்த மாற்றத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் பிரமாண்டத்திற்கும், அச்சுறுத்தல்களுக்கும் பிடரல் காஸ்ரோ அச்சப்பட்டிருப்பாரேயானால், கியூபா அவரால் விடுவிக்கப்படாமலேயே போயிருக்கும். 27 வருட கால சிறை வாழ்வில், ஒரு சிறு சலனத்தால் தன் இலட்சியத்துடன் நெல்சன் மாண்டேலா சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், இன்று தென்னாபிரிக்க மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசித்திருக்கமாட்டார்கள்.
வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் துண்டு துண்டாகச் சிதறும் என்று யார் கனவு கண்டிருக்க முடியும்? பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கிவரும் இந்தியா அப்படியேதான் இருக்கும் என்று யாரால் உத்தரவாதம் வழங்க முடியும்?
மாற்றங்கள் வரும், நியாயங்கள் வெல்லும், தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை உறுதியோடு நாம்தான் போராட வேண்டும். இன்றைய யதார்த்தங்களுக்குள் நின்றுகொண்டு தமிழீழ இலட்சியத்திற்குச் சாவுமணி அடிக்க முடியாது. தமிழீழ விடுதலை என்ற கனவோடு தாயகத்தின் நிலம், நீர், கடல், ஆகாயம் எங்கும் வியாபித்து நிற்கும் மாவீரர்களது ஆத்மாக்கள் அதை அனுமதிக்காது.
நன்றி ஈழதேசம்
0 கருத்துரைகள் :
Post a Comment