இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் சிறிலங்காவுக்கான பயணம் பெருவெற்றி என்பதெல்லாம் வெற்றுப்பேச்சு. இலங்கைத் தமிழர்கள் இன்னும் தூரப்படுத்தபபட்டுவிட்டார்கள் என்பது தான் உண்மை. இந்திய அரசைத் தம் விரல்நுனியில் கையாளக்கற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அரசு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது என்பது செய்தி அவ்வளவு தான்.
இவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் விவேகானந்த நிறுவனத்தில் சிறப்பு ஆராய்சியாளராகவும் இருக்கின்ற சதிஷ் சந்திரா அவர்கள் Rediff ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணாவின் இலங்கை பயணம் ஒரு அரசியல் வெற்றியாகக் கருதமுடியாதது ஏன்? என தலைப்பிட்டு வரையப்பட்டுள்ள சதிஷ் சந்திரா அவர்களின் கட்டுரையின் முழுவடிவம்.
கிருஷ்ணாவின் இலங்கை பயணம் ஒரு அரசியல் வெற்றியாகக் கருதமுடியாதது ஏன்?
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ‘ஆஹா, ஓஹோ’ என்று கிருஷ்ணா புகழ்ந்து தள்ளியதானது, ஏற்கெனவே இந்தியா மீது காழ்ப்புணர்வு அதிகரித்துக்கொண்டே வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அவரை ஒரு நேர்மையான அரசியற்தரகர் என்று எண்ண முடியாதபடியும் செய்துவிடும்.
வழமை போல் இந்தியாவின் அரசியல் வட்டாரங்கள் கிருஷ்ணாவின் 16-19 திகதிகளுக்கு இடையிலான இலங்கை பயணத்தை ஒரு அரசியல் வெற்றியாகப் புழுகித்தள்ள ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. ஆனாலும் இங்கே வெற்றி-தோல்வி முடிவு செய்யப்படவேண்டியது அங்கே என்ன நிகழ்ந்தது என்பதிலும், இந்தியாவின் அரசியல் தேவைப்பாடுகளுக்கு அங்கே உண்மையில் இடமளிக்கப்பட்டதா என்பதிலும் தான் என்பது கவனிக்கப்படவேண்டியதொன்று!
இலங்கை பயணத்தின்போது, கிருஷ்ணா அவர்கள், பேராசிரியர் பீரிசுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடாத்தியதுடன்,அரசுத் தலைவர் மகிந்தவையும், தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் சந்தித்திருக்கின்றார்.
கொழும்பு தவிரவும், காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, போன்ற இடங்களுக்கும் பயணம் செய்து, முறையே
1) இந்தியாவினால் அமைக்கப்பட்ட 19 கிலொமீற்றர் இருப்புப் பாதை
2)அகதிகளுக்கானவீடுகள், மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் என்பவற்றையும் வழங்கினார்.
மேலும் ஐந்து புதிய ஒப்பந்தங்கள்
1) இடம் பெயர்ந்தோர்க்காகப் புதிதாக 5000 வீடுகளைக்கட்டிமுடிப்பது
2)வடக்கு நோக்கிய இருப்புப்பாதக்கான திட்டங்களுக்காக 20 பில்லியன்இந்திய ரூபாய்களைக் கடனாக அளிப்பது.
3) டம்புல்ல மாநகர நீர் வினியோகத்திட்டத்துக்குக் கடனாக 3 பில்லியன் ரூபாய்களை அளிப்பது
4) விவசாயத்துறையில் ஒத்துழைப்பு
5) தொலைதொடர்புத் துறையில் ஒத்துழைப்பு
ஆகியன தொடர்பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இவற்றுடன், வெளிநாட்டமைச்சர் மேற்கொண்டது ஒரு நீண்ட பயணம் என்பதையும் பிணைத்துப் பார்த்தால், இது நல்ல விடயம்தான் என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும், துரதிட்டவசமாகப் பல்வேறு விடயங்களிலும் இப்பயணம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
முதலாவதாக, ஐ நா. செயலாளர்நாயகத்தின் மதிவல்லுநர் குழுவினால் சுயாதீனம்இ சுதந்திரமான செயற்பாடு என்கின்ற விடயங்களில் அனைத்துலக நியமங்களுக்குக் கட்டுப்படாததொன்றென விவரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை யாருமே கேட்காமலேயே, புகழ்ந்து தள்ளுமாறு யாருமே அவரை வற்புறுத்தியதாகத் தெரியவில்லை.
இந்த அறிக்கையானது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்ததொன்றான ’இராணுவத்தின் கொடுமை’களிலிருந்து அரசை விடுவித்துள்ள தோடமையாது பல்வேறு அரசு சாராதமைந்த அனைத்துலக அமைப்புக்களினாலும் ஐ நா அறிக்கையாலும்உறுதிப்படுத்தப்பட்டுள்ள தமிழர் தரப்பு முறைப்பாடுகளைப் புறக்கணித்துமுள்ளது.
இந்தவகையில் ஆணைக்குழு அறிக்கையானது உண்மையான நல்லிணக்கமொன்றைப் பரிந்துரைக்க முடியாதெதொன்றாகவும், இரு தரப்பினருக்குமிடையிலான விரிசல்களைப் பெரிதுபடுத்த உதவும் ஒன்றாகவுமே இருக்கின்றதுஇ அதிகாரப்பகிர்வுக்கான அதன் பரிந்துரைப்பு எதுவிதமான விவரங்களையும் உள்ளடக்கி இல்லை.
த.தே.கூட்டமைப்பானது இந்த அறிக்கையைத் தூக்கி வீசிவிட்டதில் இங்கே வியப்பொன்றும் இல்லை. கிருஷ்ணாவின் பரிந்துரைப்பு இந்தவகையில் தான் இலங்கைத் தமிழர் பார்வையில் எம்மை ஒரு உண்மையான நம்பகமான ஒரு அரசியல்தரகராக ஏற்றுக்கொள்ளமுடியாமல் தடுத்துள்ளது.
அவர்களுக்கு எம்மீதுள்ள கசப்புணர்வுதான் நாளாந்தம் கூடிக்கொண்டுவருமென்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. ஏற்கெனவே புகழ்ந்து தள்ளிவிட்டதால், இனி ஒரு தடவை ஆணைக்குழு விடயத்தில் எதிர்காலத்தில் நாம்அவர்களை வற்புறுத்தவோ, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகச் சட்டநடவடிக்கை எடுக்கவோ எமக்கு முடியாமல் இருக்கும்.
இரண்டாவதாக 13வது யாப்புத் திருத்தத்தை ஏற்பதுடன் அதன் நடைமுறைப்படுத்தலிலும் தாராண்மையைக் கையாள்வதென மகிந்த ராஜபக்ச தனக்கு உறுதி தந்துள்ளதாகக் கிருஷ்ணா புழுகித்தள்ளியிருப்பது உண்மையில் சரியானதல்ல.
இங்கே எழுந்துள்ள பெரிய பிணக்கானது இந்த மாதிரியான உறுதிமொழிகள் முன்னரும் தரப்பட்டிருக்கின்றன என்பது பற்றியதல்ல. இம்முறை ‘அணுகுமுறை’ என்ற சொற்பிரயோகம் இடம்பெற்றிருப்பது, அதன் மூலம் அரசானது தகிடுதித்தங்களிலிருந்துதான் தப்பிக்கொள்ள இடம் வகுத்துள்ளதென்பதே இங்குள்ள பெரிய செய்தியாகும்.
காணி, மற்றும் காவல்துறை என்பன பற்றிய அதிகாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை இப்போது நன்கு தெளிவு. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், ராஜபக்சவுக்கு நாட்டில் இருக்கும் வெகுத்த ஆதரவு துணையாக இருந்தும், அவருக்குஅதிகாரப்பகிர்வு செய்ய முடியாமலுள்ள என்பதுடன் இந்திய அரசினாலும் அவரை வற்புறுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
மனித உறிமை மீறல்கள், மற்றும் அதிகாரப்பரம்பல் ஆகிய விடயங்களில் தீர்வு காணப்படாத வரையில் நல்லிணக்கம் என்றபேச்சுக்கே இடமில்லை என்பதும் இந்தவகையில் காலத்தை இப்படி விரயம் செய்வெதென்பது மீண்டும் விடுதலைப்புலிகள் வேறொரு பெயரில் தலை தூக்குவதனையே நிச்சயப்படுத்தப்போகின்றது என்பதும் தெளிவு.
அரசு இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை இடையில் முடித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்வுக்குழு ஒன்றன் மூலம் தீர்வுக்கான விடயங்களை ஆராயலாம் என்கிறது. தமிழர் தரப்போ முக்கியமான விவரங்களில்இணக்கம் எட்டாத வரையில் வேறெந்த மார்க்கத்துக்கும் புறப்பட்டு வரத் தயாராகவில்லை என்கிறது.
இங்கே கிருஷ்ணாவினால் தகராற்றுச் சமநிலையை உடைத்து இருதரப்புச் சமரசம் என்ற புதுநிலையை உருவாக்க எதுவுமே செய்ய முடியாமற் போய்விட்டது. இது அரசினால் மேற்கொள்ளப்படும் இன்னொரு முடக்கு நடவடிக்கை என்று த.தே.கூட்டமைப்பினர் கருதுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கிருஷ்ணாவோ இங்கே அரசுடன் சார்ந்து நின்று பாராளுமன்றத் தேர்வுக்குழு ஒன்றின் மூலம் தீர்வு காண்பதென்ற கருத்திலே சிறப்பைக் காண்பது ஒற்றுமைக்கு வழி கோலாது.
மற்றுமொரு முக்கிய விடயம், இந்திய மீனவரின் சங்கடங்கள் பற்றிக்கூட இங்கே தீர்வெதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதாகும். இருதரப்பினரும் இணந்து இதுபற்றிய செயற்பாட்டுக் குழுவொன்றை நிறுவமுடிந்தமை பற்றி மார்தட்டுவதைத் தவிர வேறெந்தவித முன்னெற்றத்தையும் அவர்களால் நிறுவமுடியவில்லை. இந்த மாதிரியான உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய விடயமொன்றில் அவரால் விரைவாகத் திட்டவட்டமான தீர்வுப்பாதை ஒன்றை முன்மொழிய வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த முடியவில்லை என்பது எமது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் எதிரானது.
இறுதியாக அனைத்துச் செயற்பாட்டையும் உள்ளடக்கிய ‘இருதரப்புப் பொருண்மியப் பங்காளர்களின் ஏற்பாடுகள்’ என்று இலங்கை – இந்திய வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தச் சில காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாமை வியப்பைத் தருகிறது. பன்னெடுங்காலமாகஇ இலங்கையுடன் இருதரப்புக்கும் பயன்தரும் வகையில் தாராளவர்த்தக ஏற்பாடு ஒன்று நிலவியிருந்துங்கூட அரசினால் இதனைமுன்னெடுக்க முடியாமல் போய்விட்டது துர்ப்பாக்கியமே!.
இவற்றையெல்லாம் நாம் இங்கே தொகுத்துச் சொல்வதானால், கிருஷ்ணாவின் பயணம் பெருவெற்றி என்பதெல்லாம் வெற்றுப்பேச்சுத்தான், இலங்கைத் தமிழர்கள் இன்னும் தூரப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை;. இந்திய அரசைத் தம் விரல்நுனியில் கையாளக் கற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது என்பது செய்தி; அவ்வளவு தான்.
http://www.rediff.com/news/column/why-krishnas-visit-to-lanka-cant-be-termed-successful/20120124.htm
நன்றி - நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment