தமிழ் மக்களின் உடனடித் தேவை அரசியல் தீர்வாகத் தான் இருக்கிறது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளோடு இலங்கை அராங்கம் பேசி தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இது யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களது எதிர்பார்ப்பு. யாழ். ஆயர் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டனைச் சந்தித்த பொழுது தெரிவித்த கருத்துகளே இவை.
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினர் உளச் சுத்தியுடன் பங்குபற்ற வேண்டும். ஆக்கபூர்வமான பெறுபேறுகளைக் காண வேண்டும் என்ற உண்மையான நோக்கம் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருக்க வேண்டும் என்று திருமலை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தும் தமிழ் சிவில் சமூகத்தைப் பொறுத்தும் முறையான அரசியல் தீர்வையே வலியுறுத்தி நிற்கின்றன.
தமிழ் மக்களையும் அவர்கள் சார்ந்த அமைப்புகளையும் பொறுத்து அனைவருமே ஒரு முகமாக அரசியல் தீர்வை நோக்கியவர்களாகவே இருக்கின்றனர்.
அரசாங்கத்தையும், தென்னிலங்கையையும் பொறுத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் புதைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினதும் தென்னிலங்கை மக்களினதும் கோட்பாடாக இருக்கிறது.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் வீழத்தி வெற்றி கொண்டு விட்ட மமதையிலேயே தீர்வு குறித்த கருத்துகள் தென்னிலங்கையில் இருந்து வெளிவருகின்றன.
தென்னிலங்கை சக்திகளில் அரசாங்கம் உட்பட பெரும்பாலான சக்திகள் இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இல்லையென்றும், அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கென விசேடமாக கொடுப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் மக்களின் மதிப்புக்குரியவர்களாக இருந்த ஒரு சில புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும் கூட, விதிவிலக்கில்லை என்ற நிலையில் பேரினவாத கருத்தியலுக்குள் மூழ்கிப் போயுள்ளமை விசித்திரமாகவுள்ளது.
தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவும், தமிழ் மக்களும் அவர்களின் தலைமைத்துவங்களும் வரலாற்றில் மேற்கொண்ட பிழையான முடிவுகளே அழிவுகளுக்கும், அனர்த்தங்களுக்கும் காரணமாகிவிட்டன என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர்.
சிங்கள ஆளும் தரப்புகளால் ஏமாற்றப்பட்ட வரலாற்றை சுமந்து நிற்கும் தமிழ் மக்களால் இன்றைய நிலையில் கூட ஒரு சிறு துளியேனும் நம்பிக்கை கொள்ள வைப்பதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் என்ன செய்தது என்பதற்கான விளக்கத்தை சிங்கள புத்திஜீவிகள் முன்வைப்பார்களா?
அல்லது தமிழ் மக்களின் சமவுரிமைக்காக சிங்கள மக்களிடையே இவர்கள் வீதியில் இறங்கிப் போராட முன்வருவார்களா?
எத்தனை பேச்சுவார்த்தைகளில் சிங்களத் தலைமைகள் ஏமாற்றத்தை அளித்தன என்பதையும் தமிழ்த் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த சம்பவங்களையும், கொடுத்த வாக்குறுதியை மீறிய சம்பவங்களையும் மீண்டும் மீண்டும் பட்டியலிட்டு நேரத்தை வீணாக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை.
ஏமாற்றுவதை இராஜதந்திரமாகவும் ஏமாறுவதை இயலாத்தன்மையின் வடிவமாக சிங்கள தலைமைத்துவங்களும், தென்னிலங்கை சக்திகளும் கருதியதினாலேயே அது ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது.
தென்னிலங்கையில் எழுந்த ஆயுதக் கிளர்ச்சிகளுடன் இணைந்திருந்தவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவது விசித்திரமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.
போரின்போது 13 ஐத் தருவோம், 13ற்கு மேலும் தருவோம் என்று கூறியவர்கள் இன்று 13ஐத் தரவே மறுப்பது பற்றி இந்த தென்னிலங்கை புத்திஜீவிகளும் பத்திகையாளர்களும் கூறப்போகும் பதில் என்ன?
அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டதையே தமிழ் மக்களுக்கு வழங்க மறுப்பவர்களிடம் தமிழ் மக்களால் எதைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதைப்பற்றி இவர்களால் கூற முடியுமா?
மேற்கூறிய கருத்துகளை முன்வைப்பவர்கள் தான் போரின் முடிவுடன் தமிழ் மக்களுக்கு மூச்சுவிட இடம் கிடைக்கும் என்று கூறினார்கள்.
ஆனால், தமிழ் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் இன்றைய இந்த வாழ்நிலை நாளை, தென்னிலங்கை மக்களுக்கு வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதம் இல்லை.
இவ்விடத்தில் சர்வமதப் பேரவையின் விண்ணப்பத்தை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.
இனப்பிரச்சினைக்கு அனைத்து மக்களும் உணரக்கூடிய, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும். நாட்டில் யுத்தம் முடிவடைந்துவிட்டாலும் யுத்தத்திற்கான காரணங்கள் இன்னும் உள்ளன. அவற்றுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று சமாதானப் பேரவை சுட்டிக்காட்டுபவைகள் அரசாங்கத்தினதும் தென்னிலங்கைச் சக்திகளினதும் கண்களைத் திறக்க வழிசமைக்கட்டும்.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மறுதலித்து வந்த அரசாங்கம் தற்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் குறித்து பேசத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி ��எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை'' தனது கணிப்பை இவ்வாறு தெரிவித்துள்ளது. முக்கியமான விடயத்தில் தனது நிலைப்பாட்டை தளர்த்தி மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது இப்போது பொருத்தமானதென இலங்கை அராங்கம் கருதியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இந்த மாத விஜயம் மார்ச்சில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வும் சில சமயம் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
'' காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக அரசு இருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அரச இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியின் போதே அமைச்சர் ரம்புக்வெல இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக நாங்கள் கவலை கொண்டிருக்கின்றோம். ஆயினும், குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பு அரசுடன் தொடர்ந்தும் பேச்வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் இந்தப்போக்கு தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தனது நிகழ்ச்சி நிரலை இலகுவாக நிறைவேற்றிசுக் கொள்ள இவ்வாறு நாடகமாடிய பல சம்பவங்களை தமிழ் மக்கள் நிறையவே பார்த்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் அரசாங்கம் தமிழ் மக்களை மென்மேலும் விரக்தியின் விளிம்புக்கே கொண்டு செல்லும் வேலைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
இந்தியா ஏதாவது செய்யும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கூட நிறைவேறுவதாகத் தெரியவில்லை. இதுகுறித்து இந்தியாவில் தங்கியுள்ள இந்தியாவை ஏற்றுக் கொண்ட முன்னாள் போராளி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ��அதிகாரப்பரவலாக்கல் குறித்து இந்தியா செல்கிறதே தவிர அழுத்தமாகப் பேசும் நிலையில் இந்தியா இல்லை'' என்று தெரிவித்தார்.
அரசியல் தீர்வு நோக்கி தமிழ் மக்கள் ஒருமுகமாக நின்ற பொழுதிலும் உதவுவது யார்? இந்தியாவா? அமெரிக்காவா? ஐ.நா.வா? அல்லது புலம்பெயர் தமிழர்களா? அல்லது தாமே பாதை வெட்டி பயணம் போகும் நிலையிலா?
எல்லாமே கேள்விகளாகவே நிற்கின்றன!
வி.தேவராஜ்
0 கருத்துரைகள் :
Post a Comment