தமிழ்நாடு, கனடா, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர்களாகிய நாங்கள், இலங்கைத் தீவிலும், தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஒத்த சிந்தனையுடைய பலருடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பரவலாக உரையாடி விவாதித்தப் பின்னர், இப்பிரகடனத்தை வெளியிடுகிறோம். தமிழ் மக்கள் மீது அவர்களின் தாய்நிலமான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், உலக வல்லாதிக்க நாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசு, இனப்படுகொலை மற்றும் இன கட்டமைப்புப் படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இது தென்னாசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் ஒட்டுமொத்த உலகிற்கும் ஓர் அபாயகரமான முன்னோடியாகவும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்களின் நிரந்தர தேசிய சிக்கல் உரிய முறையில் அணுகப்படுவதற்கான வழி காண்பதே இப்பிரகடனத்தின் நோக்கம்.
தமிழீழம் எனும் சுதந்திரமான இறைமையுள்ள ஓர் அரசை உருவாக்குவதில் முடிவெடுக்கஇ இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ் மக்கள் ஆகியோரிடையே ஓரு பொது வாக்கெடுப்பை நடத்தவும் சரியான முறையில் அதனை கண்காணிக்கவும் ஓர் உலகளாவிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.
இப்பிரகடமானது, ஈழத் தமிழர்களின் வரலாற்று வழிவந்த இறைமை மற்றும் அவர்கள் போராடிப் பெற்ற இறைமை ஆகியவற்றுடன், அவர்களை அழிவிலிருந்து காக்க வழங்கப்பட வேண்டிய இறைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
வரலாற்று வழிவந்த இறைமை : இதுவரை கிடைத்துள்ள மிகப் பழமையான ஆவணச் சான்றுகளின் காலத்திலிருந்து ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் ஓரு தேசமாக இருக்கின்றனர். வரலாற்று வழியாகவும், புவியியல் அடிப்படையிலும் வரையறுக்கப்பட்ட தாய்நிலம், தனித்துவமான மொழி, பண்பாடு மற்றும் கூட்டுணர்வு ஆகியவற்றை கொண்டுள்ளனர். போர்ச்சுகீசியர்களின் காலனிய ஆதிக்கத்திடம் தங்கள் இறைமையை இழந்த வரலாறு அவர்களுக்கு உள்ளது. அதனைத் தொடர்ந்து டச்சுக்காரர்களிடமும், பிரிட்டிசாரிடமும் இழந்த அவர்கள், அய்ரோப்பிய காலனி ஆதிக்கம் முடிவுற்ற காலத்தில் அதனை திரும்பப் பெறாதவர்களாகவும் உள்ளனர். சிலோனின் விடுதலை தொடங்கி 30 ஆண்டு காலம், சிங்கள தேசியத்துடன் இறைமையை பகிர்ந்து கொள்ள ஜனநாயக வழியில் போராடி வந்த தொடர்ச்சியான வரலாறு அவர்களுக்கு உண்டு. அதன் தோல்வியின் விளைவே, 1976-இல் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர பிரகடனம் ஆகும். 1977 தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் இப்பிரகடனத்தை அங்கீகரித்தனர்.
போராடிப் பெற்ற இறைமை : ஜனநாயக வழிமுறைகள் தோல்வியுற்ற நிலையில், அரசின் ஒடுக்குமுறையின் தூண்டுதலால் மற்றுமொரு 30 ஆண்டுகள் இராணுவப் போராட்டத்தினை அவர்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக, நடைமுறை அரசு ஒன்றை நிறுவப்பட்டது. அதன் மூலம் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை போராடிப் பெற்றனர். 2002-இல் பன்னாட்டுத் துணையுடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தைகள் இந்த இறைமைக்கு மறைமுகமாக அளிக்கப்பட்ட அங்கீகாரமாகும். 2004-இல் நடைபெற்ற தேர்தலில், அந்த நடைமுறை அரசு அடையாளம் காட்டிய தமிழ் அரசியல் அமைப்பை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஈழத் தமிழர்கள், போராடிப் பெற்ற இறைமையின் மூலம் அமைக்கப்பட்ட நடைமுறை அரசை அங்கீகரித்தனர்.
அழிவிலிருந்த காக்க வழங்கப்பட வேண்டிய இறைமை : நடைமுறை அரசுக்கு எதிராக இரு தரப்பினருக்கு இடையிலான சமநிலை குலைக்கப்பட்டமையும், அது இனப்படுகொலையில் முடிந்ததையும் அய். நா. வல்லுநர் குழு அறிக்கையும், அமைதி நடவடிக்கைகள் குறித்த நார்வேயின் மதிப்பீட்டு அறிக்கையும், இனப் படுகொலை என்றச் சொல்லை பயன்படுத்தாத போதிலும் உறுதி செய்துள்ளன. இலங்கை அரசுடைய சிங்கள இன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சி, மக்கள் தொகை விகிதாசாரத்தை மாற்றுவதற்கான சிங்கள குடியேற்றங்கள் மற்றம் தமிழர் தேர்தல் தொகுதிகளின் எல்லை மாற்றங்கள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் தமிழர் தாய் நிலத்தில் நிகழ்த்தப்படும் சமூக-பொருளாதார மற்றும் பண்பாட்டு ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் மூலம் தமிழர்களின் தாய் நிலமான வடக்கும் கிழக்கும் வெளிப்படையான,தீவிரமான, திட்டமிடப்பட்ட மற்றும் அதிவிரைவான இனக் கட்டமைப்பு அழிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுஇ ஈழத் தமிழ் தேசத்தை அழித்தொழிப்பிலிருந்து பாதுகாக்கும் உரிமையை எழுப்பி, அந்த உரிமையை தவிர்க்க இயலாத ஒன்றாக ஆக்குகின்றது. இனப் படுகொலை மற்றும் இனக் கட்டமைப்பு அழிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கென, சுதந்திரம் கோரும் ஈழத் தமிழர்களுக்கு அழிவிலிருந்து காக்க வழங்கப்பட வேண்டிய இறைமைக்கான கோட்பாடு பொருந்துகிறது.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துவதை அனைத்து வெளி சக்திகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.
இலங்கைத் தீவின் சிக்கலுக்கு நீடித்த அமைதியும் நீதியும் கொண்டு வரவும் சிக்கலில் உள்ள இரு தேசங்களும் தத்தமது இறைமைக்குள் முழுமையான கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயைந்து வாழவும் பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் 'உள்நாட்டு"த் தீர்வுகள் குறித்த ஏமாற்றுத் திட்டங்களை கைவிட்டு இலங்கை - தமிழீழ சிக்கலை இரு தேசங்களுக்கு இடையிலான சிக்கலாக அணுகக் கூடிய வெளிப்படையான பன்னாட்டு செயற்திட்டம் ஒன்றில் முனைப்புடன் ஈடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது என்று நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.
ஈழத் தமிழர்களின் தேசியப் போராட்டத்தின் குறியீடுகளும் வெளிப்பாடுகளும் சிறுமைப்படுத்தப்படக் கூடாது என்றும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தங்கள் உயிரை அளித்த அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஓர் அரசியல் தீர்வை எட்டக்கூடிய ஒருங்கிணைந்த உலகளாவிய செயற்பாடுகளுக்கு உலகின் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்களிக்க வேண்டும் என்றும் நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.
---
பூங்குழலி நெடுமாறன்
தமிழ்நாடு, இந்தியா
கிருஸ்ணா சரவணமுத்து
ரொறன்ரோ, கனடா
ரஜீவ் சிறீதரன்
வாசிங்டன், அமெரிக்கா
லதன் சுந்தரலிங்கம்
லுசேர்ன், சுவிற்சர்லாந்து
நன்றி-கீற்று
0 கருத்துரைகள் :
Post a Comment