மீனைக் கொடுக்காதே. மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது சீனப் பழமொழி. மீனைக் கொடுத்தால் அதைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்படியானால்இ மீனைப் பெற்றுக் கொள்பவன் யாரோ ஒருவரை நம்பியிருக்க வேண்டிய - மற்றவரில் தங்கி வாழ வேண்டிய நிலையேற்படும். இதன் காரணமாக மீனைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுத்தால், அவன் தன் சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தைப் பெற்றுக் கொள்வான். இத்தத்துவத்தை எடுத்தியம்பும் சீனப் பழ மொழியை எங்கள் மண்ணிலும் அமுல்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இது விடயத்தில் இலங்கை அரசு வழங்கக் கூடிய தொழிற்பயிற்சிகள் என்பன போதுமானதாக, தரம் வாய்ந்ததாக இல்லை என்பது பொதுவான கருத்து.
அதேநேரம் எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தொழிற்பயிற்சியோ அன்றி வேலைவாய்ப்போ இல்லாமல் வெறுமை நிலையில் உள்ளனர். எனவே தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இந்திய அரசு தொழிற் பயிற்சிகளை -தொழில் நுட்பப் பயிற்சிகளை வழங்க வேண்டும். இப்பயிற்சிகளை தமிழ்நாட்டிலோ அன்றி இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலோ வழங்க முடியும் என்பதற்கப்பால்இ இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பயிற்சிகளை ஏற்படுத்துவது பொருத்துடையதாகும்.
உலக அரங்கில் இந்திய தேசம் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ் உள்ளிட்ட தயாரிப்பில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அதேநேரம் இலங்கையிலும் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல். எனவே இந்திய உற்பத்தி நிறுவனங்களை இங்கு அமைக்கும்போது தமிழ் இளைஞர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கும் ஏற்பாட்டை இந்தியா செய்து தரவேண்டும். ‘ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா சில குறிப்பிட்ட உதவிகளை செய்ய முன்வந்தமைக்கு நாம் நன்றி கூறலாம். அதேநேரம் ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவிடம் எதிர்பார்த்த உதவி இதுவல்ல.அது வேறாக இருந்தது.
பரவாயில்லை.எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதற்காக எதனையும் வேண்டாம் என்று சொல்லும் தகைமைப்பாட்டிலும் தமிழ் மக்கள் தற்போது இல்லை. இப்போது யாழ்ப்பாணத்தில் கலாசார மண் டபம் ஒன்றை அமைத்துக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. யுத்தத்தால் எங்கள் கலாசாரத்தை தொலைத்து விட்டு ஏங்கி இடிவிழுந்த நிலையில் இருக்கும் எங்களுக்கு இனிமேல் தான் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டு எங்கள் கலாசாரம் காப்பாற்றப்படப் போகின்றது. உண்மையில் கலாசார மண்டபம் கட்டி அதில் கலாசார நிகழ்வை நடத்தும்போது அதன் சுற்றுப் புறத்தில் கலாசாரக் கலைப்பு நடக்கும் என்பது திண்ணம்.
கறந்தபால் முலைபுகா எனும் தத்துவத்தில் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு இந்திய தேசம் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி புரிய நினைத்தால் அதனை இரண்டு வழியில் செய்ய வேண்டும். அதில் ஒன்று உரிமையைப் பெற்றுக் கொடுத்தல். மற்றையது இந்திய தொழில்நுட்பப் பயிற்சிகளை எங்கள் இளைஞர்களுக்கு வழங்குதல். இவை இரண்டையும் செய்தால் கலாசார மண்டபமே தேவை யில்லை. எங்களை நாங்களே தற்காத்துக் கொள்வோம். இது சத்தியம்.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment