இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.
இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல.
போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும்.
களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் போக்குநிலையும் அது தரிக்க வேண்டிய ஆயுதமும் நிர்ணயிக்கப்படும். இது, 'ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்' என்ற எனது தொடர் கட்டுரையின் பாகம் இரண்டிற்காக மார்ச் 3ம் திகதி 2011ல் எழுதப்பட்ட வரி.
அரசியலானது எப்போதும் பொருளியலால் நிர்வகிக்கப்படுகின்ற சமகால உலகின் போக்கில், இலங்கைத்த தீவில் வாழும் தமிழ்மக்களின் புனர்வாழ்வுக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கேற்ப தனது பொருளாதாரக்கொள்கை குறித்து இந்தியா ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டத்திலுள்ளது என்று இந்தியாவின் முன்னால் இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி தென்னிந்திய பாரம்பரிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 'இலங்கைத் தீவுடனான தனிப்பட்ட தொடர்புகள் தொடர்பான நினைவுமீட்டல் மற்றும் அதற்கும் அப்பால்' என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஈழத்தமிழர்களுடைய இருப்பும், எதிர்காலமும் உரியமுறையில் உறுதிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும், சாத்தியப்பாடுகளையும் இன்னமும் கொண்டுள்ளன என்பதற்கான ஆதாரமான வாதங்கள் ஆகும். பூகோள அரசியலிலே அண்மைகாலம் தொடக்கம் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் இத்தகைய ஆதாரவாதங்களை மெய்ப்பிக்கின்றன. காலத்தின் தேவை கருதி அவற்றில் முக்கியமான சில விடயங்களை இப்பத்தியில் ஆய்வுக்குட்படுத்துகிறேன்.
அனைத்துலக உறவென்பது [International Relations] காலத்துக்கு காலம் மாற்றுநிலையாக்கம் [Transformation] அடையும். இதன் அடிப்படையிலலேயே அனைத்துலக ஒழுங்கும் [International Order] மாற்றமடைகிறது.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டம்
அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்ரகன் [Pentagon] கடந்த ஜனவரி 5ம் [2012] திகதி அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தமது பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டது. இந்த புதிய திட்டத்தில், பாதுகாப்பு செலவீனத்தை குறைப்பதில் கூடிய கரிசனை செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலத்தைப் போலல்லாமல், எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு இரு போர்முனைகளை ஓரே காலப்பகுதியில் திறப்பதை கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் திட்டங்களில் முக்கியமான விடயங்களில் ஒன்று.
உதாரணமாக, இரண்டாயிரங்களில் ஆப்கானிஸ்தான் [ஒக்டோபர் 2001] மற்றும் ஈராக் [மார்ச் 2003] களமுனைகளை திறந்தது போன்றதொரு நடவடிக்கை இனிவரும் பத்தாண்டுகளுக்கு நடப்பது மட்டுப்படுத்தப்படுகிறது. ஈராக்கிலிருந்து தமது படைகளை திருப்பியழைத்த அமெரிக்கா, எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு தமது பாதுகாப்பு செலவீனத்தை குறைப்பதில் உறுதியாகவுள்ளது. ஆனால், இக்கட்டுநிலையிலுள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், அதன் முக்கியத்துவம் கருதி தமது படைகளின் பிரசன்னத்தை வலுப்படுத்தவுள்ளோம் என அறுதியிட்டு கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா அவர்கள்.
சுமார் 487 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்வரும் பத்தாண்டுகளுக்குள் குறைப்பதற்கு பென்ரகன் திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் விமானப்படை அண்ணளவாக 200 விமானங்களை இழப்பதோடு, அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் இராணுவத்தால் குறைக்கப்படும்.
இத்தகைய ஒரு இறுக்கமான முடிவை எடுத்த அதிபர் ஓபாமாவும், பென்ரகனும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கான எத்தகைய விலையையும் கொடுக்க தயாராகவுள்ளனர். அந்த வகையிலேயே, அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியிலும், தேவையேற்படின் பிலிப்பைன்சிலும் அமெரிக்காவின் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியுள்ளன.
எதற்காக ஆசிய – பசுபிக் பிராந்தியம் இலக்கு வைக்கப்படுகிறது?
ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலேயே, ஆசியான் - தென்கிழக்கு ஆசியா நாடுகளிள் கூட்டமைப்பு [Association of Southeast Asian Nations –ASEAN] சார்க் - பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய கூட்டமைப்பு [South Asian Association for Regional Cooperation –SAARC] மற்றும் பசுபிக் தீவுகளின் பேரவை [Pacific Islands Forum – PIF] ஆகிய கூட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் ஜம்பது நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஜம்பது நாடுகளுக்குள்ளேயே, அமெரிக்காவின் கண்கள் ஆழமாக பதிந்துள்ள சீனா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வடகொரியா. பாகிஸ்தான், இந்தனோசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றன. அதேவேளை, வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரானின் ஏவுகணை மற்றும் அணுஆயுத பரிசோதனைத் திட்டம் போன்றவற்றால் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, அமெரிக்கா இரகசிய காய்நகர்த்தல்களையும் செய்யவேண்டிய தேவையெழுந்துள்ளது.
இதற்கான, சிறந்த தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியம் உள்ளது. அத்துடன், தனது தேசிய நலனை நிலைநிறுத்துவதற்காக, ஈரானிற்கு பக்கபலமாக சீனா விளங்கக்கூடும் என்ற கருத்துக்கள் உயர்வடைந்து வருகிறது. சீனாவை, தனது வழிக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, அமெரிக்கா சீனாவுடன் மறைமுக இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், கடந்த காலங்கள் போல், இம்முறை அது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான பொருளாதாரரீதியான உச்சக்கட்டப் போட்டி மிகதிருப்புமுனையான ஒரு கட்டத்துக்குள் அண்மைக்காலத்தில் நுழைந்துள்ளது. இந்த 'பனிப்போரின்' ஒரு அங்கமாகவே, ஈரானுடன் பெற்றோலிய வர்த்தகத்துடன் தொடர்புள்ள சீன நிறுவனமொன்றை அமெரிக்கா தடைசெய்யதுள்ளது.
மேலும், ஈரானின் எல்லை நாடுகளான, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் ஆசிய-பிராந்தியத்திலேயே உள்ளன. அத்துடன், உலக எண்ணெய் விநியோகத்தில், குறிப்பாக சீன எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் மிக்க இந்து சமுத்திரமும் இந்த ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலேயே உள்ளது. [இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் தொடர்பான எனது கட்டுரையை பின்வரும் இணைப்பினுடாக வாசிக்கலாம் http://bit.ly/wTB6IG.]
ஆகமொத்தத்தில், அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பொதுத் தளமாகவும், பிரதான தளமாகவும் ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. இவற்றின் அடிப்படையிலேயே, அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இலக்காகியுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள்
ஆசியாவிற்கான தனது பதிலாளர்களாக இந்தியாவையும், ஜப்பானையும் பயன்படுத்துவதை விட்டு, அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. இது, ஆசியபிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும், இங்கு எதிர்காலத்தில் மேலெழக்கூடிய தீவிரமான நெருக்கடி நிலைகளையுமே கட்டியங்கூறுகிறது. இதற்கு மிகச்சிறந்த அண்மைக்கால உதாரணமாக, அமெரிக்கா இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டனின் பர்மாவிற்கான (மியான்மார்) சுற்றுப்பயணத்தையும், அங்கு இடம்பெற்ற சம்பவங்களையம் குறிப்பிடலாம்.
சீனாவுடன் நெருக்கமான பிணைப்பை கொண்ட ஒரு இராணுவ ஆட்சியுடைய நாடாகவே பர்மா மிகஅண்மைக்காலம் வரை இருந்துவந்தது. ஆனால், ஆசியாவில் தனது புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்காக அமெரிக்கா புறப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக கிலாரி கிளிங்டன் அவர்களின் பர்மாவிற்கான சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இந்த பயணத்தின் ஊடாக, சீனாவின் பின்னணியுடன் பர்மாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணைக்கட்டுமானமொன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாநாயத்துக்காக போராடும், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற, ஆங்சாங்-சுகியுடன், கிலாரி அவர்கள் மேற்கொண்ட சந்திப்பும், அதனைத் தொடர்ந்து ஆங்சாங்-சுகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பர்மாவின் தற்போதைய ஆட்சியாளர்களால் காட்டப்பட்ட பச்சைக்கொடியும் குறிப்பித்தக்கவை.
மேலும், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமது இனத்தின் விடுதலைக்காக போராடிவரும் கச்சின் (Kachin) போராளிகளுடன் சமாதான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிப்பது போன்ற பர்மாவின் ஜனநாயகத்துக்கான பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பர்மாவின் ஆட்சிபீடம் இணங்கியுள்ளமை பர்மா-சீனா உறவில் உருவாகத் தொடங்கியுள்ள ஒரு இடைவெளியின் ஆரம்பப்புள்ளியாகவும், அமெரிக்காவுக்கும் பர்மாவிற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள உறவின் ஆரம்பமாகவும் பார்க்கலாம்.
1955 ம் ஆண்டு அமெரிக்காவின் இராஜாங்கா செயலாளர் ஜோன் போஸ்ரர் டலஸ் அவர்களின் [John Foster Dulles] சுற்றுப்பயணத்துக்குப் பின்னர், பர்மாவிற்கு பயணம் செய்த முதாலாவது இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளிங்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு சவால்விட்டுள்ள சீனாவுக்கு, அமெரிக்காவால் விடுக்கப்பட்டுள்ள ஒரு இறுக்கமான சமிஞ்சையும் மறைமுக எச்சரிக்கையும் ஆகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்களின் ஆசியாவுக்கான அண்மைய சுற்றுப்பயணமும், அவுஸ்ரேலியாவிலும் அதன் பின்னர் பென்ரகனில் அவர் ஆற்றிய உரையும் இதன் ஒரு அங்கமே.
ஆகவே, சீனாவை பலவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு மிகவிரைவாகவே தோன்றிவிட்டது என்பது கண்கூடு. அதன் பிரதான நகர்வாக, சிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே புகுவது போலவே, ஆசியாவிற்குள் புகுந்தே சீனாவுக்கான சாவலை விட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனை ஒரு சாணக்கிய இராஜதந்திரமாக பார்க்கலாம்.
இது, அமெரிக்காவின் எதிரிநாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் சீனா கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒரு பதிலடியாக அமைந்துள்ளதெனவும் கூறலாம். ஆகவே, இனிவரும் காலத்தில், சீனாவை பலவீனமாக்கும் நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்தில் கூர்மையடைப் போகின்றன. ஆதலால், ஆசியாவிலுள்ள முக்கியமான சிக்கல்கள், இனக்குழும போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சிகள் எல்லாம் வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக கருவியாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது.
அந்த வகையிலேயே, இலங்கைத் தீவின் முக்கியத்துத்துவம் அங்கு தன்னாட்சிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ்மக்களின் போராட்டமும் இன்னொரு கட்டத்துக்குள் நுழையப்போகின்றது.
இதனால், ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப்போகும் சாதக, பாதகங்கள் என்ன? இதனை எவ்வாறு ஈழத்தமிழர்கள் கையாள்வது, இத்தகைய சூழலுக்கு பொருத்தமான சில அனைத்துலக உதாரணங்கள், இவற்றின் அடிப்படையில் பிராந்திய அரசியலில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் போன்ற விடயங்களை அடுத்த பத்தியில் ஆராய்வோம்.
*ஊடகவியலாளரான நிர்மானுசன் பாலசுந்தரம் அனைத்துலக அளவிலான மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன், சமாதானம் மற்றும் மோதுகை மாற்றுநிலையாக்கம் தொடர்பான துறைகளிலான ஆய்வாளரும் ஆவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: bnirmanusan@gmail.com
0 கருத்துரைகள் :
Post a Comment