வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.
அரசின் இந்தத் திட்டமிட்ட அராஜகச் செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தாம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உதயனுக்குத் தெரிவித்தார்.
காங்கேசன்துறை, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிகளில் உள்ள எமது மக்களின் காணிகளை அபகரிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை இப்போது தெரியவந்துள்ளது. இந்தக் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த 12 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்வந்துள்ளனர். மேலும் பலர் எம்முடன் தொடர்புகொண்டுள்ளனர் என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்.
ஒரு புறத்தில் எம்முடன் பேசிக்கொண்டு மறுபுறத்தில் எமது மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அரசின் இந்தச் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் இந்தக் கபட நாடகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் முன் கொண்டுசென்று நீதிகோரும் எனவும் மாவை தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காங்கேசன் துறை, பலாலி, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வுள்ளது. வழக்குத் தாக்கல் செய்வதற்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்வந்துள்ளனர். எனவே விரைவாக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டுள்ளோம். இதற்கான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் கூட்டமைப்பிடம் வழங்க முன்வரவேண்டும். அத்துடன் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகியன அமைந்துள்ள வீடுகள், தனியார் கட்டடங்கள் என்பவற்றின் விவரங்களையும் மக்கள் எமக்கு வழங்க வேண்டும். அவற்றை விரைவாக வழங்கினால் அதனை வைத்து வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியும்.
அதேவேளை, இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிப் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
காணி அபகரிப்புக்கு எதிராகக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடமும் முறைப்பாடு செய்யவுள்ளது. பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் சர்வதேச சமுகத்திடமும் வழங்கப்படும்.
அரசின் இந்த அராஜகத்துக்கு எதிராகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார் மாவை சேனாதிராஜா.
நன்றி- உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment