தென்னாபிரிக்காவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் உலகத் தமிழர் பேரவையும்


தற்போது தென்னாபிரிக்காவை ஆட்சி செய்யும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில்  கலந்து கொள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலகத் தமிழர் பேரவையும் சென்றிருக்கின்றன. வருகிற பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர்  நடைபெறவிருக்கும் நிலையில், இவர்களின் தென்னாபிரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இந்த நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவளித்த  அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.இதில் ஏறத்தாழ 120,000   பேர் பங்குபற்றுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர்  இரா. சம்பந்தன்,  சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நியமன எம்.பி. சுமந்திரனும் அங்கு சென்றுள்ளார்கள்.

புலம்பெயர் நாட்டில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையின் சார்பாக அதன் தலைவர் இமானுவேல் அடிகளாரும் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் கலந்து கொள்கின்றார்கள்.ஏற்கனவே  அங்கு வருகை தந்த பல தரப்பினரோடு, இந்த இரண்டு அமைப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை மற்றும் போர்க் குற்ற விசாரணை தொடர்பாக அங்கு பிரசன்னமாகியிருக்கும் தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தமிழர் தரப்பினர் தெளிவுபடுத்துவார்களென்கிற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது.

அதேவேளை, 14 ஆபிரிக்க  நாடுகளின் பிரதிநிதிகளை  கூட்டமைப்பினர்  சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் செய்தி வந்தது.ஆயினும் மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றும் 13 ஆபிரிக்க  நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளை இவர்கள் நிச்சயம் சந்தித்திருப்பார்களென்று நம்பலாம்.


அத்தோடு,  இலங்கை அரசின் உத்தியோகபூர்வ உயர்மட்டக் குழுவினர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லையென்கிற செய்தியும் வருகிறது. இமானுவல் அடிகளாரை தலைவராகக் கொண்டியங்கும் உலக தமிழர் பேரவைக்கு இம்மாநாட்டில் சிறப்புப் பார்வையாளர் அந்தஸ்தினை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்  வழங்கி விட்டதால் இப்புறக்கணிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுவதில் உண்மை உண்டு.


ஏனெனில் சுயாதீன சர்வதேசவிசாரணை  ஒன்றிற்கான பரப்புரையில் உலகத் தமிழர் பேரவை ஈடுபடும் என்பதனை இலங்கை அரசு நிச்சயம் புரிந்து கொள்ளும். ஆகவே சர்வதேச புலிகள், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்களென்று அடிக்கடி அறிக்கை விடும் அரசு, பேரவை கலந்து கொள்ளும் களத்தில் இணைந்து கொள்ளாதென்பதை இலகுவாக ஊகிக்க முடியும்.


ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, சுய நிர்ணய உரிமை, இனஒழிப்பு, போர்க்குற்ற விசாரணை என்கிற ஒவ்வாத விவகாரங்களை தூக்கிப் பிடிப்பவர்களும் இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதிகளே.

காணி, காவல்துறை உரிமைகளைக் கேட்கும் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டுமென, அண்மைக் காலமாக எழும் குரல்களும், நாளை கூட்டமைப்பை பயங்கரவாதிகளென்று சொன்னால் ஆச்சரியப்பட முடியாது. ஒருபடி மேலே சென்று, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள்  இணையாவிட்டால் தடை செய்வோம் என்றும் கூறுவார்கள்.


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று கூட்டமைப்பினர் அமெரிக்க சென்ற வேளையிலும் தென்னிலங்கையில் பேரினவாத அதிர்வேட்டுகள் ஒலித்தன. தென்னாபிரிக்க பயணத்தின் பின்னர், இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புமுண்டு.


அதேவேளை,  இந்த மாநாட்டின் முக்கிய மையப் புள்ளியாகக் கருதப்படும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வரலாறு குறித்து சுருக்கமாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்திற்கும் தென்னாபிரிக்க மக்களின் நிறவெறிக்கெதிரான  விடுதலைப் போராட்டத்திற்குமிடையேயான அடிப்படைக் காரணிகள் குறித்த விடயங்களில் ஒற்றுமை காணப்படுகிறது.


ஒல்லாந்திலிருந்து வெள்ளையின குடியேற்றவாசிகள் 1652  இல் தென்னாபிரிக்காவிற்குள் நுழைந்ததிலிருந்து ஆரம்பமாகிறது இந்த கொலனியாதிக்கம்.

1860  ஆம் ஆண்டு அங்கு பிரித்தானியர் வரும் வரை, ஒல்லாந்தர்களுக்கும் தென்னாபிரிக்க பூர்வீக குடிகளுக்குமிடையே நிலம் மற்றும் கால்நடை  தொடர்பாக கசப்பான யுத்தங்கள் நடைபெற்றன.

நவீன துப்பாக்கிகள், பீரங்கிகள், குதிரைகள் சகிதம் வந்திறங்கிய பிரித்தானியர், 1878  ஆம் ஆண்டளவில் முழு தென்னாபிரிக்காவையும் பெரும் யுத்தம் ஊடாகக் கைப்பற்றினார்கள்.

இருப்பினும் 1860 இல் வருகை தந்த பிரித்தானியர், 1867  இல் வைரத்தையும் 1886  இல் தங்கத்தையும் கண்டு பிடித்தார்கள்.மூலவளச் சுரண்டலில் ஈடுபட்ட சுரங்க முதலாளிகளுக்கு அதில் பணிபுரிய ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள்.

அந்த மண்ணின் மைந்தர்கள் கூலிகளாக்கப்பட்டதோடு,  ஒடுக்குமுறைக்கெதிரான  போராட்டமும் அங்கிருந்து ஆரம்பமானது. இந்நிலையில் 1911  ஆம் ஆண்டு  பிக்ஸ்லி கா இசாகா செமி (Pixley Ka Isaka Seme) என்கிற  விடுதலைப் போராளி, பழைய வேறுபாடுகளை மறந்து, ஒரு தேசிய இயக்கமொன்றின் கீழ் அனைவரும்  ஓரணியில் திரள வேண்டுமென தென்னாபிரிக்க  மக்களை நோக்கி அறை கூவல் விடுக்கின்றார்.


""நாமனைவரும் ஒரு  தேசமக்கள்.   எமக்கிடையே நிலவும், பிளவுகளும் பொறாமைக் குணமுமே  எமது இன்றைய துன்பகரமான நிலைக்குக் காரணம்'' என்று "இசாகா செமி' மக்களிடம்  உரத்துக் கூறினார்.


அவரின் பிரகடனம், மக்களைச் சென்றடைந்தது. இனக் குழுமங்களின் தலைவர்கள் மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள், கத்தோலிக்க திருச்சபைகள் மற்றும் தனி நபர்கள் ஒன்றுகூடி 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியன்று ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் இயக்கமான ஆபிரிக்க  தேசிய காங்கிரஸை நிறுவினார்கள்.

1913 இல் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட  மிக மோசமான காணிச் சட்டமானது, காங்கிரஸின் போராட்ட முனைப்பினை மேலும் வலுவடையச் செய்தது. இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து ஏனைய  இடங்களை ஆபிரிக்கரால்  வாங்கவோ அல்லது வாடகைக்கு  விடவோ முடியாத சரத்தினை அக்கொடூரச் சட்டம்கொண்டிருந்தது.


நீண்ட காலத்தின் பின்னர் 1961 இல் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்று, இறுதியில்  1994 மே மாதம் தென்னாபிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றது வரையான நிகழ்வுகள், அண்மைக் கால வரலாறாகப் பதிவாகியுள்ளது.


அங்கு நில ஆக்கிரமிப்பும், மூலவளச் சுரண்டலுமே ஒடுக்குமுறையின் பிரதான வடிவங்களாக இருப்பதைக் காண்கிறோம்.அதுபோன்று இலங்கை 1948  இல் சுதந்திரமடைந்த காலம் முதல் நிலத்திற்கும் மக்களுக்குமிடையிலான பிரதான முரண்பாடே இன முரண் நிலையை உருவாக்கிய அடிப்படைக் காரணியாகவிருப்பதை கல்லோயாவிலிருந்து மன்னார் மாவட்ட நரிக்காட்டு பிரதேசம் வரை காணலாம்.

இருப்பினும் தரப்படுத்தல், மொழி மறுப்பு போன்ற ஒடுக்குமுறைகள், பேரினவாதத்தால் தமிழினத்தின் மீது மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட   கலாச்சார பண்பாட்டு  வாழ்நிலை இனவழிப்பின் பக்கங்களே.


தென்னாபிரிக்கா போன்று, இலங்கையை ஆண்ட பிரித்தானியர், 1840  ஆம் ஆண்டு இலக்கம் 12 மற்றும் 1841  ஆம் ஆண்டு இலக்கம் 9, ஆகிய காணி சட்டங்கள் ஊடாக பெருந்தோட்டப் பயிர் செய்கை முதலீட்டாளர்களுக்கு சட்டபூர்வ உரித்துடைய  காணி உரிமையை வழங்கியிருந்தார்கள்.


ஆகவே, கொலனியாதிக்க காலத்தில் மட்டுமல்லாது, சுதந்திரமடைந்த  காலத்திலும் ஏகாதிபத்தியங்களும் பேரினவாத ஆட்சியாளர்களும் நிலத்தைப் பறிக்கும் வேலையில் தான் முதலில் இறங்குகின்றார்கள் என்பது தான் உண்மை.

குறிப்பாக காலங்சென்ற காமினி திசாநாயக்கவின் நில ஆக்கிரமிப்பு கருத்தியலின்  உச்ச வடிவமான  மகாவலி அபிவிருத்தித் திட்டம், கிழக்கின் நல்ல நில வளங்களையும் நீர் வளங்களையும் விழுங்கி  அங்கு பெரும்பான்மையாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நிலம் சார்ந்த பகை முரண்பாடுகளை உருவாக்கியிருந்ததைப் பார்க்கலாம்.


உதாரணமாக 24 சதவீத முஸ்லிம்கள் வாழும் கிழக்கில் 2 வீத நிலங்களே அவர்கள் வசமிருப்பதாக புள்ளி விபரங்களோடு கவலைப்படுபவர்கள், அந்த தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான  நிலம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால்  அபகரிக்கப்பட்ட விடயத்தை குறிப்பிட மறந்து விடுகிறார்கள்.


ஆகவே, விடுதலையடைந்து நூற்றாண்டு விழா காணும் தென்னாபிரிக்க மக்கள்  சந்தித்த  சவால்கள், நில ஆக்கிரமிப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளை அவர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு எதிர்கொண்டார்கள் என்பவற்றை தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்களும் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே சமுதாய நலன் விரும்பிகளின் பேரவாவாக இருக்கிறது.

ஒடுக்கப்படும் இனங்களிடையே பிளவினை ஏற்படுத்தி, அந்த பிளவுபட்ட இயங்கு தளத்தை தொடர்ந்தும்  தக்க வைப்பதற்கே ஒடுக்குமுறையாளர்  முயற்சிப்பார்கள்.

சலுகைகள் ஒரு சிலரின் பணப் பையை பெருக்க வைக்கும். ஆனால் சலுகை செய்வோன், மக்களின் நிலங்களையே விழுங்கி விடுவான்.ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் வெறுமனே தலிபான்களுக்கு எதிரான போரென்று தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது. ஒரு ரில்லியன்  அமெரிக்க டொலர் (1000   பில்லியன் டொலர்)  பெறுமதியான கனிமங்கள் அம் மண்ணில் புதைந்திருக்கின்றன.

ஈராக்கில் அழிவாயுதங்களைத் தேடிப் போனவர்கள், கிட்டத்தட்ட 142,000 மக்களை அழித்து இப்போது எண்ணெயோடு வருகிறார்கள்.பலஸ்தீனத்திலும் சியோனிச யூதர்களின்  நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன தேசம் சிறுத்துவிட்டது. குடியேற்றங்களை அகற்றாமல்  பேச்சுவார்த்தை இல்லை என்றாகிவிட்டது.

இவை தவிர உலக மயமாதல், தாராண்மைவாத சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளித்துவ கருத்துருவங்கள் உதிர்ந்து போகும் நிலையை எட்டுவதனால், அதன் இருப்பினைத் தக்க வைக்க  முதலீட்டுக்கான களங்கள் இடம்மாறுவதைப் பார்க்கலாம்.நவகாலனித்துவத்தின் புதிய பரிமாணமாக பன்னாட்டுக் கம்பனிகள் நிலங்களை  ஆக்கிரமிக்க வருகின்றன.


சிறுபான்மைத் தேசிய இனங்களின் நிலங்களை பெருந்தேசியவாத ஆட்சியாளர்கள் அபகரிப்பது போன்று, முழு தேசத்தின் நிலங்களையும் மூல வளங்களையும் பங்கு போட  ஏகாதிபத்தியங்கள் முனைகின்றன.ஆகவே, தென்னாபிரிக்க மக்களின்  போராட்ட அனுபவங்களை,  நில ஆக்கிரமிப்பிற்கெதிராக  அவர்கள் முன்னெடுத்த ஐக்கியப்பட்ட வழிமுறைகளை, ஒடுக்கப்படும் மக்கள் சமூகம் கவனித்தல் வேண்டும்.ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் எமக்குப்பொருத்தமான, கருத்திற் கொள்ள வேண்டிய  பல வரலாற்றுப் பதிவுகள் உண்டு .

இதயச்சந்திரன்


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment