யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சமூக விரோதச் செயல்கள், படுகொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. கடந்த ஒரு வாரகாலத்திற்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் கிணறுகள், பற்றைகளுக்குள்ளிருந்து உடல்கள் மீட்கப்படுவதும் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளன. கடந்த புதன்கிழமை வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி கத்திரிக்கோலால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் மண்ணரன் ஒன்றுக்கு அருகிலிருந்து எலும்புக் கூடாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமும் குடாநாட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளதுடன் இச்சம்பவங்கள் தொடர்பிலான பின்னணிகள் குறித்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தின் ஆளணியினரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் யாழ். குடாநாட்டிலேயே குவிக்கப்பட்டுள்ளனர். சகல இடங்களிலும் பொலிஸ் நிலையங்கள், சந்திக்கு சந்தி சோதனைச் சாவடிகள், காவலரண்கள், படையினர், பொலிஸாரின் இரவு நேர ரோந்து என குடாநாடு முற்று முழுதாக இராணுவ மயமாக்கப்பட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக விரோத செயல்களும், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் எந்தவித தங்குதடையுமின்றி நடைபெறுவதும் இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திர மனிதர்களாகச் சுற்றித் திரிவதும், தப்பிச் செல்வதும்தான் குடாநாட்டின் இன்றைய கால நிலவரமாகவுள்ளது. குற்றச் செயல்கள் முன்னரெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படுவது என்பது பூஜ்ஜிய நிலையில் உள்ளதையே காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலைக்கு காரணம் தான் என்ன? குற்றச் செயல்களுடன் படையினருக்கும் தொடர்புள்ளதா அல்லது அவர்களிடம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் திறமை இல்லையா அல்லது குற்றவாளிகளை கண்டுபிடிக்க மக்களின் ஆதரவு கிடைப்பதில்லையா?
நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத சமூக விரோத செயல்கள் எல்லாம் இன்று கண்முன்னால் நடந்தேறும் குற்றம் பெருகிய மாவட்டமாக யாழ்.குடாநாடு மாறி வருவதற்கு நாமும் ஒரு காரணமாகவுள்ளோம். கட்டுப்பாடின்றிய சுதந்திரம், கைநிறையப் பணம், தென்னிலங்கையிலிருந்து படையெடுக்கும் விலைமாதர்கள், போதைப் பொருட்கள், தட்டிக் கேட்க ஆளில்லாத நிலை, பார்க்குமிடமெல்லாம் மதுபான சாலைகள், உல்லாச விடுதிகள் என கலாசார சீர்கேட்டுக்கும் சமூக விரோத செயல்களுக்கும் கட்டியம் கூறும் மாவட்டமாக இன்று யாழ்.குடாநாடு மாறிவிட்டதற்கு ஒருவரையோ அல்லது ஒரு தரப்பையோ மட்டும் குற்றம் சாட்டிவிட முடியாது. இவ்வாறானதொரு பயங்கர நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் பாத்திரவாளிகளாகவுள்ளோம், பங்களிப்பு செய்கின்றோம் என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலைக்கு எதிராக நாம் என்ன காரியங்களைச் செய்தோம் என ஒரு தடவையாவது சிந்திக்க வேண்டும்.
சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவது பாதுகாப்புத் தரப்பினருக்கு மட்டும் எழுதி வைக்கப்பட்ட பணியல்ல. அவர்களின் கடமை அதுவாக இருந்தாலும் பொது மக்கள், சமூக அமைப்புகள், மதஸ்தானங்களுக்கும் இவ்வாறான சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவ வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு. இன்றுவரை குடாநாட்டில் ஏதாவதொரு சமூக அமைப்புகளோ மதஸ்தானங்களோ சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதாவது என்று ஒன்றையாவது கூறமுடியுமா? குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புத் தரப்பினரின் பணியாகவிருந்தாலும் அவர்ளுக்கு நாம் ஒவ்வொரு வரும் எம்மால் முடிந்த உதவிகளை, ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். பக்கத்து வீட்டில் நடந்த சம்பவத்தைக் கூட மறுநாள் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்ளும் ஒரு மனநிலையிலேயே இன்று குடா நாட்டில் பெருமளவானவர் உள்ளனர். தமக்கு நாடக்கும் வரை எந்த சம்பவத்தைப் பற்றியும் அக்கறைப்பட அவர்கள் தயாரில்லை.
யாழ். குடாநாட்டைக் கலக்கிய கீறிஸ் பூதங்களையே ஒன்று திரண்டு எதிர்த்துப் போராடிய மக்களால் ஏன் இவ்வாறான சமூக விரோத சக்திகளுக்கு எதிராகப் போராடவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. கிறீஸ் பூதங்களுக்காக விழிப்புக்களை அமைத்த மக்களால் ஏன் இந்தக் குற்றவாளிகளுக்காக விழிப்புக்குழுக்களை அமைக்க முடியவில்லை. இன்று பக்கத்து வீட்டில் நடந்தது நாளை எமது வீட்டிலும் நடக்கலாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் வரை சமூக விரோத செயல்களும் கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் தொடரவே செய்யும். இதனைத் தடுப்பது குடாநாட்டில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சமூக அமைப்புகளும் மத ஸ்தானங்களும் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்க வேண்டும். இதற்கு நிச்சயம் பொது மக்களினதும் ஊடகங்களினதும் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். எனவே சமூக அமைப்புகள், மதஸ்தானங்கள், பொது மக்கள், பாதுகாப்புத் தரப்பினர் என ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே சமூக விரோத செயல்களையும் சமூக விரோத சக்திகளையும் குடாநாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment