1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும்.
இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே! நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
நாதன் கூறியசெய்தியோ மீண்டும்ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்;தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்னநபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்;த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரண மாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன.
1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால் ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன் இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை. இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது. இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார்.
இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக நாதன் சொன்னதும் ஏன்? என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார்.
இரண்டுவருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்;கு எதிராக தாக்;குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார்.
1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாதபோராட்ட உணர் வுடன் செயற்பட்டவர் பிர பாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில் விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார். (காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்)
1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும் சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார்.
1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ்மாணவர்பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.
1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார்.
1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும் தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது. இக்காலத்திலேயே வல்வெட்டித்துறைக்கு வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார். செட்டி ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர் அவர்களுடன் இணைந்து தாக்குதல் முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது உட்பட வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார்.
1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர்பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச்இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார்.
இவர்களுடன் ஏறத்தாள இரண்டுவருடங்கள் வேதாரணியம் திருச்சி சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின்; ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.
தொடரும்……!
‘வருணகுலத்தான் பார்வையில்’
0 கருத்துரைகள் :
Post a Comment