சிங்கள மக்களின் உளவியல் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்காது - குமார் டேவிட்


எந்தவொரு சிங்கள குடிமகனும் தமிழ் மக்களிற்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஏனெனில் இது தொடர்பில் இவர்கள் மத்தியில் ஆழமான உளவியல் காரணங்கள் உண்டு. 

இவ்வாறு  lakbimanews ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் குமார்டேவிட்  எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். 

1948ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், சிறிலங்காவில் காணப்படும் தேசிய இனப்பிரச்சினை 36 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்பட முடியாதவாறு காணப்படுகின்றது. 

மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் சேனநாயக்கா – பண்டாரநாயக்கா அரசாங்கத்தால் இந்த மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து பார்த்தால், 64 ஆண்டுகளாக இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் நன்கு தெரியவரும். 

ஆனால் நான் இங்கு முக்கிய மைற்கற்கள் தொடர்பாக மட்டுமே ஆராயவுள்ளேன். 1948-49 இல் தோட்டத் தொழிலாளர் உரிமை பறிக்கப்பட்டமை, சிங்கள மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, பண்டா-செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பன முறிவடைந்தமை, 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஜெயவர்த்தனாவின் 1978 அரசியல் யாப்பு, 1983ல் அரங்கேற்றப்பட்ட கலவரமும் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றமை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சி, உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி, 2009ல் இது முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டமை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயவுள்ளேன். 
 
சிறிலங்காவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களால் கொலணித்துவத்திற்குப் பின்னரான post-colonial தாராளவாத ஜனநாயக ஆட்சி முறைமை பகுதி சர்வாதிகார சிங்கள ஆட்சியாக மாறியமை தொடர்பாக நான் எனது சொந்த நோக்கத்திற்காகத் தொகுத்து வழங்கவில்லை.

எந்த சமூகம் செய்தது சரி மற்றும் எந்தச் சமூகம் செய்தது பிழை என்பது தொடர்பாகவும், எந்த அரசியல்வாதி மீது பழிசுமத்த வேண்டியுள்ளது போன்றவை தொடர்பாக விடாப்பிடியாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் மீது கவனத்தைக் குவிக்க வைப்பதற்கும், வித்தியாசமான கேள்வியை உருவாக்குவதை நோக்காகக் கொண்டே நான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன். 

இந்தப் பிரச்சினை எப்போதாவது தீர்க்கப்படுமா? இது தொடர்பில் சிறிலங்காவின் மரபணுவில் DNA ஏதோவொன்று ஆழமாகப் பதியப்பட்டுள்ளது என்ற தீர்விற்கு நாங்கள் வரலாமா? இச்சிக்கலான விடயத்திலிருந்து விலகி வேறு பாதையில் பயணிப்பதற்கான வழி எதுவும் இல்லை என்ற முடிவிற்கு வரலாமா? 

இது விடயத்தில் தெரிவு செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட ஒரு பதிலை உங்கள் முன்வைப்பதில் நான் உடன்பாடுகொள்ளவில்லை. அல்லது நீங்கள் ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் கூறவேண்டும் என உந்துவது எனது நோக்கல்ல. எனது மனம் சாத்தியப்பாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த விடயத்தில் என்னுடன் கூடப் பயணிக்க வேண்டும் என நான் இன்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

வெளித்தோற்றத்தில் பார்க்கும் போது இனப்பிரச்சினைக்குக் காரணம் ஏதோவொன்றாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்டவர்கள் இது தொடர்பாகப் பழிசுமத்துவது மட்டும் போதாது என்பது நிச்சயமாகும். இதற்கு உள்உணர்வு சார்ந்த ஒரு பக்கத்தை மட்டும் கருத்திற்கொண்டு விளக்கமளிப்பதென்பது போதுமனதல்ல. இது பொதுவான கண்னோட்டத்தில் பார்வையிட வேண்டியிருக்கலாம். 

அதாவது பண்டா ஒரு பேரினவாதி, ஜேஆர் முற்றுமுழுதான இனவெறி பிடித்த ஒருவர், பிரபாகரன் எளிதில் உணர்ச்சிவசப்படுகின்ற வன்முறைவாதி ஆவார். இது பெருமளவில் சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்காத் தீவில் கடந்த அறுபதாண்டுகளாகத் தொடரும் இனப்போரானது தீர்வு காணப்படாமைக்கு சேறுபூசும் மனப்போக்குடையவர்களே அடிப்படைக் காரணம் எனக் கூறப்பட்டாலும்,  இதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் மரங்கள், ஆம் உண்மையில் இவர்கள் காட்டிலுள்ள மரங்கள், ஆனால் இவர்கள் தாங்களாக வளர்த்துக் கொண்ட காடுகள் எங்கே? 

பூகோள முதலாளித்துவப் பொருளாதாரம் அண்மையில் வீழ்ச்சியடைவற்கு அலன் கிறீன்ஸ்பானின் அல்லது பேராசை பிடித்த வங்கியாளர்களின் அல்லது கடனாளி அரசாங்களின் தவறே காரணமாகும் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இவ்வாறான வியாக்கியானங்கள் இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமாக இருக்குமா? இவ்வாறான விளக்கங்களை முதலாளித்துவ முறைமையை எதிர்த்து வாதிடுபவர்களால் வழங்கப்படுகின்றன.
 
எனது வழமையான முதலாளித்துவ எதிர்ப்புக் கருத்தாக்கத்தைக் கையாள்வதற்காக இதனை நான் உபயோகித்துள்ளேன் என என்னைத் தவறாக விளங்கிக் கொள்ளவேண்டாம். பெரியளவிலான திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக எழுந்தமானமான விளக்கங்களை வழங்குவது போதுமனதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக நான் இதனை எடுத்துக் காட்டியுள்ளேன். 

கிறீன்ஸ்பானிற்குப் பதிலாக புளுஸ்பான் அமெரிக்க மத்திய வங்கி முறைமையின் தலைவராக இருந்திருப்பார் எனக் கருதினால், வங்கியாளர்கள் prim ladies ஆக இருந்திருந்தால் அல்லது அரசாங்கங்கள் தமது வேட்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பட்டினி போட்டிருந்தால், இவை எல்லாம் பாதிப்பைத் தந்திருக்கும். ஆகவே இவை எல்லாம் முட்டாள்தனமானவை! இவை ஒருவரின் மேல் ஒருவர் நிதி மற்றும் அரசியல் அழுத்தங்களை விளைவிப்பதாகவும், போட்டியைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளன. 
 
பண்டா [S.W.R.D.பண்டாரநாயக்கா] 'சமஅந்தஸ்து' தொடர்பாகவும் NM [என். எம். பெரெரா]  'சிங்களம் மட்டும்' தொடர்பாகவும் கூறியிருந்தால், இறுதியில் கூறப்பட்டுள்ளவர் பிரதமராகியிருப்பார். அத்துடன் கொள்கை தற்போது உள்ளது போன்று ஒரேவிதமாகவே இருந்திருக்கும். அதாவது இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதில், தேசிய மற்றும் இன ரீதியான உணர்வுநிலை, வர்க்க சக்திகள், வளங்களிற்கான இனங்களிற்கிடையான சுயநலப் போராட்டங்கள் போன்றன பெரியளவில் பங்களிப்பை வழங்குகின்றன. 
 
இதனுடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட தலைவர்களின் பங்களிப்பு என்பது குறைவானதாகும். பிரபாகரனும் அவரது இளைஞர்களும் வல்வெட்டித்துறை துறைமுகத்தில் மூழ்கியிருந்தால், அவரது இடத்தை வேறு யாராவது நிரப்பியிருப்பார்கள். ஜேஆரின் 1983 கலவரத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் பாணியிலான ஆயுதக் கலவரங்களும், தமிழ்ப் பிரதேசங்களில் பல ஆண்டு கால இராணுவ அராஜகங்களும் தற்போது போன்று தொடரப்பட்டிருக்கும். 

'இதன் பிறகு என்ன?' என்ற கேள்வியை இது எம்முன் கொண்டுவருகிறது. இவ்வினா இரு பகுதிகளைக் கொண்டுள்ளது: 

01. லெனினின் 'என்ன செய்யப்பட வேண்டியுள்ளது?; அல்லது 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' 

02. நான் மேலே எதைச் சுட்டிக்காட்டி வருகிறேன் - இது எதுவெனில், தனிப்பட்ட ஒருவரால் அல்லது அரசியல் தலையீட்டால் எதனைச் செய்ய முடியும் என்பது பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். 

எமது அரசியலில் இனவாத உணர்வு மற்றும் பேரினவாதப் படைகளின் செல்வாக்கு மற்றும் உறுதிப்போக்கு போன்றவற்றை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. மக்கள் சமூகத்தில் இவர்கள் இலகுவாக அல்லது விரைவாகத் தோற்கடிக்க முடியும் என நான் நம்பவில்லை: இந்தப் பிரச்சினை மக்களையே சாரும். 

நான் இங்கு 'நல்ல மக்கள் கெட்ட அரசியல்வாதி' என்ற மாயைக் கருத்தைக் கூறி சமாதானம் செய்ய விரும்பவில்லை. அதாவது இக்கருத்தின் படி, மக்கள் எப்போதும் நல்லவர்களே, ஆனால் கெட்ட, ஊழல்மிக்க அரசியல்வாதிகளே இந்த அப்பாவி மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள். 

இல்லை, இங்கே சிக்கல் நிறைந்த இரட்சகர்-காப்பாளர் உறவு உள்ளது, ஆகவே நாம் எமது துணியை வெட்ட முயற்சிக்கும் முன்னர், சரியான அளவீட்டை எடுப்பது போல், மக்கள் தமக்கான வழிகளை, தலைவர்களைத் தெரிவு செய்யும் போதும் எமக்கு ஏற்றவர்களாகத் தெரிவு செய்ய வேண்டும். 

அதிபர் ராஜபக்ச தனது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுடன் இணைந்து வேலை செய்ய தமிழர்கள் மறுத்துவிட்டதாகப் பழிசுமத்தியுள்ளார். "நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது நல்லதொரு அணுகுமுறையாகும். இதன் உறுப்பினர்கள் சட்ட ரீதியானவர்கள். அவர்களுடைய பரிந்துரைகள் பரந்த ஏற்றுக்கொள்ளளிற்கு விடப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நேர்மையுடன் அரசியற் தீர்வை எட்டுவதற்காகப் பங்களிக்க வேண்டியது முக்கியமாகும், ஆனால் இது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான தனது கட்சி சார் உறுப்பினர்களை இன்னமும் நியமிக்கவில்லை. சம்பந்தன் யாருக்கோ பயப்படுகின்றார். முறைப்பாடு செய்வதற்காக கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் செல்கின்றது. பிரபாகரன் காலத்தில் கூட்டமைப்பு புலிகளால் அதிகாரப்படுத்தப்பட்டது, தற்போது புலம் பெயர் வாழ் தமிழர் சமூகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகளால் அதிகாரப்படுத்தப்படுகின்றது. அரசியற் தீர்வொன்று இங்கு எட்டப்பட்டால், புலம்பெயர் உறவுகள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நாடுகளால் மீளவும் இங்கு திருப்பி அனுப்பப்படுவர் என்பது கவலைக்குரியதே" என அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது இங்கு இறுதியாக முன்வைக்கப்படும் விமர்சனம் முட்டாள்தனமானது, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தன் வழியே செயற்பட்டால், இரு சமூகத்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பது நியாயமானதா?

கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வு விடயத்தில் இறங்கிவந்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டார்கள், இது தோற்கடிக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு யாராவது அமர்வார்கள். (இந்த இடத்தில் எனது பண்டா – NM கருதுகோளை நினைவுமீட்டுகின்றேன்) 

தற்போது புலிகள் இல்லை. எந்தவொரு சிங்கள குடிமகனும் தமிழ் மக்களிற்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஏனெனில் இது தொடர்பில் இவர்கள் மத்தியில் ஆழமான உளவியல் காரணங்கள் உண்டு. 

வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும், இனவாத எதிர்ப்பு என்பது இரு சமூகத்தவர்கள் மத்தியிலும் ஆழவேரோடியுள்ளது, சிறுபான்மையினர் பேசமறுக்கின்றனர், பெரும்பான்மையினர் கட்டுப்படுத்துகின்றனர். 

உண்மைத்தன்மையை ஆராயும் போது குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டாலும் கூட, நீண்ட காலத்தில் மக்களின் அடிமனங்களில் நிலைத்திருக்கும் கசப்புணர்வுகள் அகற்றப்படுவதை நோக்காகக் கொண்டு செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ராஜபக்ச பதவியை விட்டுச் சென்ற பின்னர், இந்த விடயம் முன்னேற்றம் அடைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையலாம்.


நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment