தமிழ் தேசத்தை சிங்கள பௌத்த தேசமாக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசு செயற்படுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ.நா சபையின் 1948 ஆம் ஆண்டு பிரகடனத்தின் இரண்டாவது சரத்து பின்வருமாறு கூறுகின்றது.
ஒரு தேசம், ஒரு இனம், சாதி, மதக்குழு என்பவற்றை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செயற்படுதல் இனப்படுகொலையாகும் எனக் கூறுகின்றது.
அதாவது மேற் குறிப்பிட்ட தரப்புக்களை : கொலை செய்தல், உடலுக்கு கடுமையான தீமையை ஏற்படுத்தும் வகையில் அல்லது மனோநிலை ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல். அந்தத் தரப்புக்கள் உடல் அழிவுகளுக்கு உள்ளாகும் வகையில் அவர்களது வாழ்க்கைச் சூழலை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம், அந்த குழுவைச் சார்ந்தவர்கள் உடல் ரீதியாக முழுமையாகவோ பகுதியாகவோ அழிவைச் சந்திக்கும் நிலையை உருவாக்குதல். குறித்த தரப்புக்கள் தமது இனத்தை பெருக்கிக் கொள்வதனை தடை செய்யும் நோக்கில் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் செயற்படுதல். குறித்த ஓர் தேசம், இனம், சாதி, மதம் சார்ந்த பிள்ளைகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இன்னுமொரு அடையாள குழுவுக்கு மாற்றுதல் என்பனவும் இனப்படுகொலை என வரையறுக்கப்படுகின்றது.
இனப் படுகொலைக்கான சட்டரீதியான வரைவிலக்கணம் மேற்கண்டவாறு இருக்க, நடைமுறையில் பெரும்பாலான சட்ட வல்லுனர்கள், மனிதர்கள் உடல் மற்றும் உயிரியல் ரீதியான அழிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டால் மட்டுமே அந்தக் குற்றத்தை மேற்குறித்த இனப்படுகொலை என்ற வரையறைக்குள் உள்ளடக்க முடியுமெனக் கூறிவருகின்றனர். ஆனால் அதே சர்வதேச சட்டவல்லுனர்களில் ஒரு பகுதியினர், இக்கருத்தை மறுப்பதுடன் வெறுமனே உடல் அழிவு மற்றும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமன்றி குறித்த ஓர் தேசம், இனம், சாதி, மதக்குழு வின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளும் இனப்படுகொலையே என வாதிட்டுவருகின்றனர். இவ்வாறு வாதிடுவோரது நியாயங்கள் ஏற்கப்படும் நிலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டம் மற்றும் பெரும்பாலான சட்ட வல்லுனர்கள் கூறுவது போன்று எடுத்துக் கொண்டாலும் கூட, தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசு பெருமளவு பொது மக்களுக்கு உடல் மற்றும் உயிரியல் ரீதியான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் சிறீலங்கா அரசு இனப்படுகொலையை புரிந்துள்ளது என்பதனை எனது முன்னைய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காக சிறீலங்கா அரசு கையாண்டு வந்துள்ள வழி முறைகளில் ஒரு அங்கமே சர்வதேச சட்டம் கூறுவது போன்ற உடல் மற்றும் உயிரியல் ரீதியான அழிப்பாகும். உயிர்ப் படுகொலைகள் தவிரவும் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்காக சிறீலங்கா அரசாங்கமானது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நிலப்பறிப்பு, கடலாதிக்கத்தினை சிங்களவர்களது கைகளுக்கு மாற்றுதல், பண்பாட்டு அழிப்பு, கல்வி அழிப்பு, விவசாய துறை அழிப்பு, வர்த்தக ஆதிக்கத்தை அழித்தல், சுகாதார நிலையை தாழ்ந்த மட்டத்தில் பேணுதல் அல்லது முற்றாக மறுத்தல், நீதித்துறையை சிங்களபௌத்த பேரினமயமாக்கல் போன்ற பல வழிமுறைகளை கையாண்டு வந்தது.
2009 மே 18 இற்குப் பின்னர் உயிர் கொலைகள் கொத்துக்கொத்தாக இடம்பெறவில்லை என்றாலும், தமிழ் தேசத்தை இருப்பினை அழிப்பதற்கான ஏனைய வழிமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றதுடன், தீவிரப்படுத்தப்பட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர் இலங்கைத் தீவில் இருந்து வெளியேறிய பின்னர் இலங்கைத் தீவின் முழுமையான ஆட்சியை கைப்பற்றிய சிங்களவர்கள், தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இன அழிப்புக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தனர். குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள், நிலப்பறிப்புக்கள், பௌத்தமயமாக்கல், உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட பல வழிமுறைகளை கையாண்டனர். இவற்றை தடுப்பதற்கு அரசியல் ரீதியாக தமிழ் அரசியல்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் தான் தமிழ் தேசத்தின் இருப்பு அழிக்கப்படுவதனை தடுப்பதற்காக, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். அதன் விளைவாக தமிழ் தேசத்தை அழிப்பதற்காக சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் அந்த இன அழிப்பிற்கு தடையாக இருந்த ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்காக, சிறீலங்கா அரசு மேற்கொண்டுவந்த யுத்தம் காரணமாக இன அழிப்பின் ஒரு அங்கமான உயிர் அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. இனப்படுகொலை மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், உயிர் அழிப்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆயுதம் ஏந்துவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்த, தமிழ் தேசத்தின் இருப்பை பூண்டோடு அழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை, தமிழ்த் தேசம் தனது உறவுகளின் உதவியுடன் தனது வாழ்வை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளையும் சிங்கள தேசம் தடுத்து நிறுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே, தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு புலம்பெயர் கட்டமைப்புகள் நிறுவன ரீதியாக உதவிக்கரம் நீட்டுவதை தடுக்கும் வண்ணம் அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது. இத்தகைய மனிதாபிமான செயற்பாடுகளை விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகள்; என கூறும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாதங்களையும் முன்வைத்து வருகிறது.
இவ்வாறாக உயிரிழப்புக்கள் தவிர்ந்த ஏனைய இன அழிப்பின் அங்கங்களாக உள்ள விடயங்கள் இலங்கைத் தீவில் சிங்கள தேசத்தால் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. இச் செயற்பாடுகள் தனித்தனியே நடைபெறுவதாகவும், போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்திலும், இலங்கைத் தீவில் அது உச்ச அளவிலேயே காணப்படுகின்றது என்பதனையும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், இவ் அமைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்தின் மேற்படி இன அழிப்புச் செயற்பாடுகளை மனித உரிமை மீறல்கள் எனவும் ஜனநாயக விரோதச் செயல்கள் எனவுமே மட்டுப்படுத்தி வரைவிலக்கணப்படுத்த முற்படுகின்றன.
நடைபெறும் உயிர்க்கொலை அல்லாத ஏனைய இன அழிப்புச் செயற்பாடுகளையும் தொகுத்து, தமிழர்களுக்கு எதிராக இலங்கைத் தீவில் இன அழிப்புத்தான் நடைபெறுகின்றது என ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் தற்போதைக்குத் தயாராக இல்லை.
சர்வதேசம் இவ்வாறாக தமிழ் இனத்திற்கு எதிராக இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளாது தயக்கம் காட்டுவதற்கு காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை கடந்த பத்தியொன்றில் விளக்கியிருந்தேன். இதனை எமது மக்களின் விளக்கத்திற்காக மீண்டும் சுருக்கமாகத் தருவதாயின், சர்வதேசம் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற விடயத்தினை இனப்படுகொலை என ஏற்றுக்கொண்டால், அதன் உச்ச கட்டமாக தமிழ்த் தேசத்தினை சிங்கள தேசத்திடம் இருந்து காக்கும் முகமாக தனிநாட்டினை உருவாக்குவதாக அமையுக்கூடும்.
இது தற்போதைய சர்வதேச ஒழுங்கினை மாற்றியமைக்கும் என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. அதனாலேயே, இதன் விளைவுகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே, போர்க்குற்றங்களை வலியுறுத்துகின்ற சர்வதேச தரப்புக்கள், தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருவது ஒரு இன அழிப்பு என்ற உண்மையைத் தவிர்த்துக் கொள்கின்றன.
உலக ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்ற காரணத்திற்காக, தமிழர்கள் இன அழிப்பில் இருந்து தப்புவதற்கு முன்னெடுத்த நியாயமான போராட்டத்தை பயங்கரவாத மூலாம் பூசி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சர்தேசம், சிறீலங்கா அரசினை பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் அரசு எனக்கூறி அதற்கு ஆதரவும் வழங்கியது.
போர்க் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு இனப்படுகொலையினை மேற்கொண்ட போது அதனைத் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழர் தரப்பு தொடர்ச்சியாகக் கூறி வந்தது. அச் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகம் கூறியது என்னவென்றால், இது இனப்படுகொலை அல்ல எனவும் மாறாக அது ஒரு மனித உரிமை மீறல் என்றும், தாரளவாத வாத ஜனநாயகத்திற்கு ஓரளவுக்கு எதிரானதும் அதன் சில பண்புகளை மீறுகின்ற செயற்பாடுகள் மட்டுமே எனவும் கூறியது. அத்துடன் சிறிலங்கா அரசு “பயங்கரவாதத்திற்கு” எதிராகப் போராட வேண்டியிருப்பதால் சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்க்கப்படும் முழுமையான தாராளவாத ஜனநாயக பண்புகளை பேணமுடியாது இருப்பதாகவும் வியாக்கியானப்படுத்தி, சர்வதேசம் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியது.
மேலும் பயங்கரவாதத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் தாராளவாதத்தினை முழுமையாகப் பாதுகாக்க முடியும் எனவும் கூறி போருக்கான தமது ஆதரவினை சர்வதேசம் நியாயப்படுத்தியது. ஆனால் போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், உயிர்க்கொலைகள் என்பதைத் தவிர தமிழ்த் தேசத்தின் இருப்பினை அழிப்பதற்கான இன அழிப்பின் ஏனைய நடவடிக்கைகள் யாவும் பல வடிவங்களில் மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை சிறீலங்கா அரசாங்கமானது, சர்வதேச சமூகம் வலியுறுத்துகின்ற ஜனநாயகம், தாராளவாதம், பன்மைத்துவம் போன்ற தன்மைகளுக்கு எதிரான போக்கையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அத்துடன், சிறீலங்கா ஆட்சிபீடத்தில் என்றுமேயில்லாத அளவு தனி இனக்குழும ஆட்சியின்(நுவாழெஉசயஉல) பயங்கரத் தன்மை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா அரசானது தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேசம் விரும்புகின்ற நியமங்களுக்கு எதிராகவுமே செயற்படுகின்றது. ஆகவே தமிழ் தேசத்தின் இருப்புக்கும் சர்வதேச சமூகம் விரும்பும் பண்புகளுக்கும் எதிரான ஒருமித்த நிலைப்பாட்டினையே சிறிலங்கா அரசானது கொண்டுள்ளது. சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதற்கு மூலகாரணமாக அமைவது, சிங்கள தேசத்தின் சகல மட்டங்களிலும் புரையோடிப் போயுள்ள சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையேயாகும். அதாவது தனி இனக்குழும ஆட்சியை நிலைநாட்டி சிங்கள பௌத்த தேசமாகமாக இலங்கைத் தீவை நிரந்தரமாக்குவதே அதன் இலக்காகும்.
இலங்கைத் தீவை சிங்கள பௌத்த தேசமாக்கும் சிங்கள தேசத்தின் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும், சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா செயற்படுவதை தடுக்க முடியாது.
சிறிலங்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு, தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மற்றும் புரியப்பட்டுவரும் இன அழிப்புச் தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தி நியாயம் வழங்கப்படவேண்டும். இச்செயற்பாடுகள் மூலமே தமிழ்த் தேசத்திற்கு எதிரான இன அழிப்புச் செயற்பாட்டினைத் தொடர முடியாது என்ற நிலையை இலங்கைத் தீவில் ஏற்படுத்தி, தனியொரு இனக்குழும ஆட்சியை நோக்கிய சிங்கள தேசத்தின் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
இதுவே சர்வதேசம் விரும்பும் பண்புகளான ஜனநாயகம், பன்மைத்துவம், தாராளவாதம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களுக்கும் இலங்கைத் தீவில் இடமளிப்பதாக அமையும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
0 கருத்துரைகள் :
Post a Comment