இந்திய விசுவாசம், விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம், சுற்றி வளைக்கப்படும் சீனா


சீனாவுக்குத் தேவையான மூல வளங்கள் எடுத்துச் செல்லப்படும் பாதைகளில் தனது இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிறது அமெரிக்கா. லிபியாவை மறு கொலனியாக்கி புதிய உத்தியுடன் ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கொலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே  அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு  அவுஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளும் என்றும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க வரிவாக்கமாகும். 

மேற்குலக நாடுகளுடனான  சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா  மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம்  கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய  பாதை  கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு அவுஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.

மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கைத்  தவிர்க்கும் நோக்கத்துடனும் மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல்  தரை வழியே எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியன்மாரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறை முகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரை வழியாக சீனாவின்  யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரை வழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013  இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப் பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மாரை தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.    கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில்  அமெரிக்க அரசுச் செயளாலரான ஹிலாரி, மியான்மாருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி யையும் அந்நாட்டின் அதிபர் தியன் சியன் ஐ யும் சந்தித்தார்.  50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியன்மாருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.  

மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் சீனாவில் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மாரின் அணு சக்தி திட்டத்தை சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ்ப் பகுதி நாடுகளுடன் அதாவது  வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட 2009 இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கீழ் மேகாங் முன்முயற்சி என்ற கூட்டமைப்பில் மியன்மாரையும் சேருமாறு நிர்ப்பந்திக்கிறது.
 
ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர் இப்போது மியான்மார் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி  இந்தியக்  கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியன்மாரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கி பூரிக்கிறது.  

இவை  ஒரு புறமிருக்க கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்ஸுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை  அடுத்துள்ள தாய்வானுக்கு மிகப் பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும் அண்மையில் சீனாவின்  நட்பு நாடான வடகொரிய அதிபரின்  மறைவையடுத்து எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக்  பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. 

அமெரிக்காவின் போர்த் தந்திரத் திட்டத்தின்படி அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7 ஆம் திகதியன்று  இந்தியாவுக்கு வருகை தந்த அவுஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள  தடைகளை அவுஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு  சீனாவுக்கு ஒப்பானதாக வரவேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும் அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்  என்று பாரசீக வளைகுடாவில்  உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின்  ஏழாம் கடற்படையுடன் இந்திய, அவுஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை  மேற்கொள்ளும் என்றும்  அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தான் இம் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித் தான் உள்ளன.
 
இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்படிருப்பதையும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும்  மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று  அமெரிக்கா கூறுவதன் பொருள்  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயற்பட வேண்டும் என்பது தான். 

ஏற்கனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும் கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும்  அமைதிப்படை என்ற பெயரில் பல ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்து வரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும். தற்போது வியட்நாமில் உரிமை கோரப்பட்டுள்ள  தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய்  தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக்காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும்  வர்க்கங்கள்  தெற்கு தென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய  அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணு சக்தித் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று  ஊடகங்களால்  வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு  அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில் ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைச்சாற்றுவதாகக் காட்டிக் கொண்டு சீன எதிர்ப்பை  உசுப்பி விடுகின்றன.

இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க அமெரிக்காவின்  விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே  அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும் பாக்.கின்  பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜிரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும் ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்களின் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால்  மக்களின் பொதுக் கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு  ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான  உணவு மற்றும் ஆயுத  விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன் விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக்.  அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு,  ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி பாக். மீது  அமெரிக்கா அல்லது நேட்டோ  படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்  அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம்  பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான  அதிகாரப்  போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால் அந்த நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது. 

அமெரிக்காவுக்கு நீண்ட காலம் விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான்  மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது ,  இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக நாட்டையும்  மக்களையும் பேரழிவில் தள்ளி விட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி தெற்காசியாவில்  வல்லரசாக விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது. 

நன்றி தினக்குரல் 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment