நாட்டில் தினமும் 35 பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நாளாந்தம் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை சராசரி மூன்று என்று பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கிறார். பொலிஸ் பதிவுகளுக்கு உட்படாத பாலியல் துஷ்பிரயோகங்களும் அதிகளவில் இருப்பதாக பிள்ளைகள், பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அதிகளவுக்கு வெளிவரவில்லை. அதேசமயம் ஊடகங்களும் இந்தச் சமூகச்சீர்கேடு குறித்து அதிகளவுக்கு முன்னுரிமை காட்டியதும் இல்லை. ஆனால் இப்போது சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், வல்லுறவுகள் குறித்து உடனுக்குடன் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கு தமக்குரிய பங்களிப்பை செய்து வருகின்ற போதிலும் இந்த படுபாதகமானதும் வக்கிரமானதுமான நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்தவும் இதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து பரிகாரம் காணவும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தவில்லையே என்று தோன்றுகிறது.
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருப்பதே பெண்கள், பிள்ளைகள் மீதான வல்லுறவுகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று பெண்கள், ஊடகங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சே பாலி கொட்டேகொட சாடியுள்ளதை சம்பந்தப்பட்ட அரச முகவரமைப்புக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகள் , பெண்கள் மீதான வல்லுறவுகள், பாலியல் துஷ்பிரயோகங்ளுக்கு போதைவஸ்து பாவனை மதுபாவனை, அதிகரிப்பு என்பனவும் காரணங்களாக இருக்கின்ற போதிலும் இந்த தார்மீக நெறிப்பிறழ்வுக்கும் வக்கிர உணர்வு அதிகரிப்பிற்கும் மூல காரணமாக இருப்பது சமூக நீதி, சமூக நியதி என்பன பற்றிய போதிய அறிவில்லாமை என்று கூறமுடியும். இந்த நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் எமது மகள்மார் எமது சகோதரிகள் என்ற உணர்வை நாட்டிலுள்ள உயர்மட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டம் வரை கொண்டிருந்தால் சிறு பிள்ளைகள், பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அறவே ஏற்படாது.
இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த போதிலும் “நல்லிணக்கம்’ என்பது வெறும் கனவாகவே தொடரும் நிலையில் போர்க்காலத்தில் பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பிவிட்டதுடன் மீண்டும் இந்த ஈனச் செயற்பாட்டை மேற்கொண்டுவிட்டு இலகுவாக தப்பிவிடும் தன்மை காணப்படுகிறது. சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், சமூக நீதி, சமூக ஒழுங்கு, கலாசாரம் கலாசார மரபுரிமை போன்றவை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இவற்றை அலட்சியத்துடன் தூக்கிவசீவிட்டு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற சிந்தனையில் வாழும் சமூக உறுப்பினர்களின் தொகை அதிகரித்து வருவதும் இந்த பாரதூரமான பிரச்சினைக்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. இங்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தும் விடயமாக காணப்படுவது பாதுகாவலர்களாக கருதப்படும் பாட்டன்மார், மாமன்மார் மற்றும் நெருங்கிய உறவினர்களால் சிறு பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் விடயமாகும். இப்போது ஆசிரியர்களும் இந்த வரிசையில் இடம்பிடித்துக்கொண்டிருப்பது அதிகரித்து வருவதாக சேவ் த சில்ரன் அமைப்பின் ஆலோசனைப் பணிப்பாளர் மேனகா கல்யாணரட்ண கூறியுள்ளார். வெளியார்கள் பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எப்போதும் பிள்ளைகளுக்கு நாம் அறிவுரைகூறி வருகின்றோம். ஆனால் இப்போது சமூகத்திற்குள்ளேயே ஆசிரியர்கள், தகப்பன்மார், பேரன்மார் இந்தக் குற்றங்களை செய்வோராக இருக்கின்றனர் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை போன்ற அரச முகவரமைப்புகளும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவும் சிறுவர், பெண்கள் உரிமைகள் குறித்தும் பாதிப்புகள் இடம்பெறும் போது கொள்ளவேண்டிய சட்ட ரீதியான வழி முறைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இத்தகைய தீய செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கருத்தரங்குகளை நடத்தியும் கையேட்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் கூட்டங்களை நடத்தியும் விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதேசமயம் அரசும் பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தக் குற்றச் செயல்களை தடுத்துநிறுத்த முயற்சிக்கின்றதென்னவோ உண்மைதான். ஆனால் சட்டத்தின் துவாரங்களினூடாக குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதும் சட்டத்தில் சிக்கிடாமல் இருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம் தற்போது அதிகரித்திருப்பதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணம் என்று மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாட்டாளர் சிறில்ராஜ் கூறுகிறார். பாலியல் விடயங்களை வெளியிடும் இணையத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அந்தத் தளங்களை சென்றடைவதற்கான இதரவழிகள் இருந்து வருகின்றன. அவற்றை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வீட்டிலும் வீதியிலும் சமூகத்திலும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாவிடின் இதற்கான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தினுடையதேயாகும். எந்தவித தயவுதாட்சண்யமுமின்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்குரிய போதிய சட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த சமூக நெறிப்பிறழ்வுக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவேண்டும். யுத்த காலத்தில் எந்தவொரு பாரிய குற்றத்தையும் இழைத்துவிட்டு அதற்கான பொறுப்பையும் வேறு தரப்பினர் மீது சுமத்தி விட்டு சிறப்பு விடுபாட்டு உரிமை பெற்றவர்களாக இருப்போர் பலர் இத்தகைய சமூக சீர்கேடுகளுக்கு முன்னுதாரணங்களாக இருப்பதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கக்கூடாது. பணபலம், அரசியல் அதிகார பலத்தின் போஷிப்பு என்பனவும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பலவற்றுக்கு பின்னணியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் தொடர்பான சந்தேகநபர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தினமும் 5 பிள்ளைகள் வரை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது இங்கு சாதாரண செய்தி அல்ல. சாக்கடைக்குள் சமூகத்தை ஓட்டுமொத்தமாக தள்ளிவிடும் பஞ்சமா பாதகங்களிலும் பாரிய பாதகம்.
நன்றி தினக்குரல்
அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகம்
ReplyDeleteஊடகங்களுக்கு நல்ல தீனியாகவும் அமைகிறது.