விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதான செய்திகள் சிறீலங்காவில் மீண்டும் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேசத்தினதும், தென்னிலங்கை மக்களினதும் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கும் கடந்த காலங்களில் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க சிங்களத் தலைமைகள் முயன்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறிய சிறீலங்கா, மீண்டும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என கதை விடுவதுதான் இங்கு கவனத்திற்கு உரியது. ஜே.வி.பியில் இருந்து அண்மையில் பிரிந்து சென்று புதிய அமைப்பை உருவாக்கியிருக்கும் பிரமுகர்கள் ஆயுதப் போராட்டத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதும், கடந்த காலங்களில் சிங்கள இராணுவ முகாம் தாக்குதல்களில் பங்கேற்றவர்கள் என்பது மகிந்த அரசிற்கு நன்கு தெரியும்.
பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, தொடரும் மகிந்தவின் குடும்ப ஆட்சியின் கெடுபிடிகள் போன்றவற்றால், தற்போது தென்னிலங்கையில் மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி அதிகரித்துவருகின்றது. தென்னிலங்கையில் அடிக்கடி இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்களும், அதனைக் காவல்துறையினர் அடக்க முயல்வதும் இதன் எதிரொலிதான். எனினும், மகிந்தவின் ஆட்சியை அகற்றும் பலமான எதிர்க்கட்சியோ அல்லது விரைவில் இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலையோ இலங்கையில் இல்லை என்பதும் இங்கு கவனத்திற்கு உரியது. இந்நிலையில், மக்களின் இந்த மனநிலையை, பிரிந்து சென்றுள்ள ஜே.வி.பியினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சம் சிறீலங்கா ஆட்சியாளர்களைச் சூழ்ந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக மகிழும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, தென்னிலங்கையில் அவ்வாறான ஒன்று மீண்டும் தோற்றம் பெற்றுவிட்டால் ஏற்படப்போகும் பாதகங்கள் புரியாமலில்லை.
மக்கள் புரட்சி, மக்கள் புரட்சி என்ற ஜே.வி.பியினரின் புதிய கோசம் லிபியா, துனீசியா, எகிப்து... போன்ற நிலைமையை இலங்கையில் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் மகிந்தவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்களும் கிளப்பிக்கொண்டிருக்கும் புதிய புரளிதான் ‘ஜே.வி.பியின் கிளர்ச்சியும், போருக்கு தயாராகும் புலிகளும்’ என்ற கதை. ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ள புரட்சிக் குழுவினரும், விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதான கதையை சிங்களம் அவிழ்த்துவிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர் என்றும் இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ள கோத்தபாய ராஜபக்ச, அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமது தூதுவர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச தகவல்களும் தெரிவிக்கின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய ஆதாரவாளர்களை ஒடுக்குவதற்கு சிறீலங்கா எடுத்த பல முயற்சிகள் எதிர்ப்பார்த்தளவிற்கு வெற்றியைக் கொடுக்காத நிலையில், தற்போது ஜே.வி.பியுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீண்டும் ஒரு பயங்கரவாதக் கதையை தோற்றுவிக்க முயல்கின்றது.
இதன்மூலம், ஜே.வி.பியின் கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதுடன், சர்வதேச ரீதியாக தமிழீழ தேசியத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களை அந்நாடுகளைக் கொண்டு ஒடுக்குவதுடன், தாயக்கத்தில் விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது மீண்டும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தக் கதை வழிவகுக்கும் என்பது மகிந்த ஆட்சியாளர்களின் திட்டம். இதனாலேயே, முன்னாள் போராளிகளை அடைத்துவைத்துள்ள முகாம்களில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டாலும், நான்கு முகாம்களை இன்னும் சில காலங்களுக்கு வைத்திருக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதென்று அறிவித்துள்ளமையைக் கொள்ளமுடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment