மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சியொன்று போட்டியிடாது நிராகரிப்பதால் ஏற்படப் போகும் பாதிப்பினைக் காட்டிலும் மாகாண சபையில் பங்கெடுப்பதனால் ஏற்படப்போகும் ஆபத்து பயங்கரமானதாகும். 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மோசமான நிலைமைகள் பற்றி இதற்கு முன்பாக எழுதப்பட்ட பத்தி ஒன்றில் விமர்சித்திருந்தேன்.
அதில் மாகாண சபைகள் ஒற்றையாட்சியின் கீழ் அமைந்துள்ள முறை என்றும் இவ் ஒற்றையாட்சி முறையானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை அரசியலமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மக்காளால் மாகாண சபைகளுக்கு எனத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கோ, அமைச்சரவைக்கோ ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் கிடையாது எனவும், மாகாணங்களுக்கு என கையளிக்கப்படுகின்ற அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதியின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குகின்ற ஆளுநரின் கைகளிலும், மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற மாகாண கட்டமைப்புக்களின் கீழுமே இயங்குகின்றன என்பதையும் அப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அந்தவகையில் சிங்கள அரசு கொழும்பில் எடுக்கும் முடிவுகளை மாகாண மட்டத்தில் அமுல்ப்படுத்தும் ஆட்சியே நடைபெறுகின்றது. இந்த அமுல்ப்படுத்தும் செயற்பாடானது ஐனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனர் ஊடகவும், மத்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள மாகாணக் கட்டமைப்புளுடாகவும் நடைபெறுகின்றது. உதாரணமாக கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தினால் எடுக்கப்படும் முடிவுகளை, யாழ்ப்பணத்திலுள்ள கிளைக் காரியாலயத்தில் கொழும்பினால் நியமிக்கப்பட்டவர்கள் அமுல்ப்படுத்துவதுபோல. அதாவது மேற்கூறிய சூழ்நிலையில் குறித்த மாகாணத்தில் வாழும் மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மாகாணசபையே மேல்விபரித்த ஏற்பாட்டுகளை நடைமுறைப்படுத்துவது போன்ற ஓர் பொய்யான தோற்றப்பாட்டை வழங்குகின்றது.
பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழான மகாணசபை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று கூறிக்கொண்டே, மேற்படி சிங்கள தேசத்தின் தீர்மானங்களை அமுல்ப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளில் போட்டியிட்டு அதற்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்கி சமாதி கட்ட முயல்கின்றனர்.
ஆளுநரின் ஆதிக்கத்தினையும், மத்தியின் கட்டுப்பாடுகளையும் முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள்;, அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீறிச் செயற்பட்டால் அது அரசியலமைப்பின் ஒற்றையாட்சியினை மீறுவதாக அமையும். எனவே மாகாண சபைகளுக்குத் தெரிவாகின்ற பிரதிநிதிகள் சுயாதீனமாக இயங்கவேண்டுமாயின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பில் மாற்றத்தினைக்கொண்டு வருவதாயின், பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினையும், அதற்கு மேலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினையும் நடத்தி அதில் வெற்றிகொள்ள வேண்டும். இவைகள் சிங்கள பௌத்த பேரினவாத மனநிலைகளுக்கு மத்தியில் நடைபெறுவது சாத்தியமில்லை என்பது சொல்லித்; தெரிய வேண்டியதில்லை.
மாகாண சபைகள் பற்றி ஒளிவுமறைவின்றிக் கூறுவதாயின், இந்தியா 1980 களில் சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, தனது பூகோள நலன்களை பாதுகாக்கும் வகையில் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் அரசியலை பயன்படுத்தியிருந்தது. அவ்வாறு தாம் கருவியாகப் பயன்படுத்திய, தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற போர்வையில் எதையாவது பெற்றுக் கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை இந்தியாவுக்கு எழுந்ததன் அடிப்படையிலேயே, இந்த மகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.இப்படியாக தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமைக்குள்ளேயே, இவ்வருடத்தில் வடமாகாண சபைக்கான தேர்தலும் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமாயின் அதில் தமிழ்த் தேசிய கட்சிகள் போட்டியிடவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் விவாதங்கள் நடக்கின்றன.
இந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது. நிராகரிப்பதால் ஏற்படத்தக்க பாதிப்புக்களை நிவர்த்திப்பதற்காக, அதாவது அரசாங்கமும், அரசாங்கம் சர்ந்த கட்சிகளும் வெற்றி பெறாது தடுப்பதற்காக, தமிழ் தேசிய கொள்கையில் தளர்வின்றி உறுதியாக பயணிக்கின்ற சமூகத் தலைவர்கள் சுயேட்சையாகக் களமிறக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வருகின்றது. அண்மையில் தமிழ்ச் சிவில் சமூகமும் இது போன்றதோர் கருத்தினையே வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலைப்பாட்டிற்கு மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா அரசுடன் வெளிப்படையாகவே இயங்குகின்ற தரப்புக்களும் கருத்துக்களை முன்வைக்கின்றன.
இவ்விடயத்தில் சிறிலங்கா அரசுடன் வெளிப்படையாக இயங்குகின்ற ஈ.பி.டி.பி, ரி.எம.;வி. பி, கருணா போன்ற தரப்புக்கள் மகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறுவதைப் பற்றி நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. காரணம் இவர்கள்; சிங்கள தேசத்தின் நலன்களைப் பேணும் வகையிலேயே செயற்படுகின்றனர்.
ஆனால் தமிழ்த் தேசியத்தின் நலன்களை மையப்படுத்திச் செயற்படுவதாகக் கூறித்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறிக்கொள்ளும் விசித்திரமான நியாயங்கள் பற்றி நாம் ஆராயவேண்டியுள்ளது.
அந்த நியாயங்களை ஆராய்வதற்கு முன்னர், 1988 ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தல், இணைந்த வடகிழக்கில் நடைபெற்றபோது, அத் தேர்தலை இரா. சம்பந்தன் அவர்களை முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தமையை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. அதேபோல, 2008 இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றபோது, அதே சம்பந்தன் அவர்களது தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
13ஆவது திருத்தமானது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை கொடுக்க முடியாத ஒன்று என்றும், மாகாண சபை என்பது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் செயய்ப்பட்டு எப்பொழுதோ சமாதி-கட்டப்பட்ட ஒன்று என்றும், அது எச்ச சொச்சங்கள் எதுவுமின்றி அழிந்துபோய்விட்ட டோ டோ பறவை போன்றது எனவும் கூறி, மாகாண சபை பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லையென்றும் 2008 இல் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அன்று அவ்வாறு கூறிவிட்டு இன்று தலைகீழாக மாறி மாகாண சபையில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அவரும் அவரது கட்சியினரும் முன்வைக்கும் காரணங்கள் விசித்திரமானவையாகவே உள்ளன.
மாகாண சபையில் போட்டியிட வேண்டும் என்பதற்குக் முன்வைக்கும் காரணங்கள்
1வது காரணம்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்தும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் விடுவதானது, தேச விரோதச் சக்திகள் மாகாண சபையை கைப்பற்றுவதற்குச் சாதகமாக அமைந்துவிடும். இவ்வாறாக தேச விரோத சக்திகள் மாகாண சபைகளைக் கைப்பற்றுவதனால் சர்வதேசத்திற்குத் தவறான செய்தியினைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.
அரசு சார்பு சக்திகள் வட மாகாணசபையை கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவே தான், நாமும் சுயேட்சைக்குழு ஒன்றை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றோம். இது தொடர்பில் நான் பெப்ரவரி 2011 இலேயே ஊடகங்க@டாகப் பிரஸ்தாபித்திருந்தேன்
தமிழ் தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடியோடு நிராகரிக்கின்ற மாகாண சபையில் போட்டியிடுவதன் ஊடாக வரக்கூடிய பாதகங்கள், அத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுடன் ஒப்பிடும்போது மிகப் பயங்கரமானதாகும்.
இன்று தமிழ்த் தேசத்திற்கும், சிங்களத் தேசத்திற்கும் இடையில் காணப்படும் இனப்பிரச்சினை என்ற விடயமானது, மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் ஊடாக, இரு தேசங்களுக்கு இடையிலான இனப்பிரச்சினை என்ற பரிமாணத்தில் இருந்து, நிரந்தரமாக திசை திருப்பப்பட்டு, மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையிலான அதிகாரப்போட்டி என்ற பரிமாணத்தினை உருவாக்கிவிடும். இது இன்றைய நிலையில் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள எமது இனப்பிரச்சினையை மீள முடியாத பாதிப்புக்குள் தள்ளி தமிழ்தேசத்தின் அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும். இவ்வாறான ஆபத்துக்களை கருத்தில் கொண்டு, தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதனைத் தவிர்த்து, தேசப்பற்றுள்ள நேர்மையான சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழு ஒன்றினை களமிறக்குவதன் மூலம், தேசவிரோத சக்திகள் மாகாண சபையை கைப்பற்றி தவறான தோற்றப்பாட்டொன்றை ஏற்படுத்தும் முயற்சியையும் தடுக்க முடியும்.
2வது காரணம்
மாகாண சபைக்குள் செல்லுமாறு சர்வதேச சமூகம் கூறுகின்றது. எமது விடயத்தில் அக்கறையாக உள்ள சர்வதேச சமூகத்திற்கு மதிப்பளித்து நாம் மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அதனை கைப்பற்றுவதனூடாக, அதில் ஒன்றுமில்லை என்பதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமாம்.
சிறீலங்கா அரசாங்கத்தின் நலன்களை மட்டும் கருத்தில்; கொண்டு செயற்படும் பிள்ளையான், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றிய பின்னர் மக்கள் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைக்கும் நோக்கில் சில செயற்பாடுகளை மேற்கொள்ள முற்பட்டபோதும், அவரால் எதனையும் செய்யமுடியவில்லை. மகாணசபை முறையில் முதலமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதனை பலதடவை வெளிப்படையாகவே கூறியுள்ளார். மேலும்; 1989 இல் ஈ.பி.ஆh.;எல்.எவ் அமைப்பினால் மாகாண சபை கைப்பற்றப்பட்டது. அந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருந்தவர் மாகாண சபைக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என்று கூறியவாறு நாட்டைவிட்டு வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, மீண்டும் மீண்டும் மாகாண சபை தேர்தலில் பங்குபற்றி அதனை கைப்பற்றுவதன் மூலமே அதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதனை நிரூபி;க்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வரலாற்று அனுபவங்கள் இதனை நிரூபிப்பதற்கு நிறையவே உள்ளன.
3வது காரணம்
மாகாண சபையைப் பெற்றுக்கொண்டு படிப்படியாக சுயநிர்ணய உரிமை நோக்கி நகர முடியுமென்கின்றனர்
கட்டுரையில் ஆரம்ப பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது போன்று, தற்போதுள்ள மாகாண சபைக்கு அதிகாரங்களை கூட்டவோ, முன்னேறவோ முடியாது. காரணம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு இடமளிக்காது. அவ்வாறு செல்வதாயின், ஒற்றையாட்சியை நீக்க வேண்டும். அதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஐன வாக்கெடுப்பினையும் நடாத்தி மக்களாணை பெற வேண்டும். இவ்வாறு ஒற்றையாட்சியை நீக்குவதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் ஒருபோதும் இடமளிக்காது. எனவே இது நடைமுறைச் சாத்தியமற்ற, அடிப்படைகள் ஏதுமற்ற வெற்றுக் கோசம் மட்டுமே.
4வது காரணம்
பகிஸ்கரிப்பரசியல் தமிழர் அரசியல் இருப்பினை அழிக்குமென கூறுகின்றனர்.
தமிழ் மக்களை முட்டாள்களென கருதுபவர்களே இவ்வாறான காரணத்தை முன்வைக்கின்றனர். கடந்த 2008 இல் தமிழ் தேசிய அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி, கிழக்கு மாகாண சபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்தது. அத்தேர்தலில் சிறீலங்கா அரசாங்கத்தின் கைப்பிள்ளையான ரி.எம.;வி.பி கட்சி கிழக்கு மாகாண சபையை கைப்பற்றியது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கத்தக்கதாகவே 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் ரி.எம்.வி.பி கட்சி கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் மக்களால் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்திருந்தனர். இதன் மூலம் தேர்தலைப் பகிஸ்கரித்தால் தமிழ் தேசிய அரசியல் இருப்பு இல்லாமல் செய்யப்படும் என்ற வாதம் அடிப்படைகள் ஏதுமற்ற கருத்தாகும்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற தரப்புக்கள் கூறும் காரணங்கள் மிகவும் பலவீனமானவை. அத்துடன் கருத்தில் கொள்ளப்பட முடியாதவை. அந்தளவுக்கு பலவீனமான கருத்துக்களை முன்வைக்குமளவுக்கு தள்ளப்பட்டுள்ளமையானது, அவர்களது அரசியல் நேர்மையின்மையையும், அரசியல் வங்குரோத்துத் தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது.
பிற சக்திகளது நலன்களுக்காக செயற்படுபவர்களே, இவ்வாறான மிகவும் பலவீனமான காரணங்களை முன்வைத்தேனும் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றனர் என்பதனை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment