பொருளாதார ஆதிக்கப்போட்டியில் குதித்துள்ள இந்தியாவும் சீனாவும்


இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய விடயமானது, அடுத்து வரும் காலங்களில் இந்தியாவின் பொருண்மிய, தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வாறு அமையப் போகிறது என்பதனைச் சுட்டிக் காட்டியுள்ளது.


அறிவியற் துறையில் இந்தியாவை விட சீன தேசமானது அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக ஒப்புக் கொள்கிறார். ஆகவே, ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் உயர்ந்து வரும் இந்தியாவானது உயர்தொழில் நுட்ப வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மன்மோகன்சிங் எதிர்பார்க்கின்றார்.
தற்போது ஆய்வு மற்றும் அபிவிருத்தி (R&D) துறையில், தேசிய மொத்த உற்பத்தி வருமானத்தில் 0.9 சதவீதத்தையே இந்திய அரசு ஒதுக்குகிறது.
இதனை 2 சதவீதமாக உயர்த்த வேண்டுமெனவும் அதற்கு உறுதுணையாக தொழில் நிறுவனங்கள் தத்தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டுமெனவும் இந்தியப் பிரதமர் இம்மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு தேனீ மாவட்டத்திலுள்ள போடிபுரம் கிராமத்தில் 1350 கோடி ரூபாய் செலவில், ஒரு அறிவியல் ஆய்வு மையத்தை (Neutrino Observatory) உருவாக்க இந்தியா முயல்வதைக் காணலாம்.
இந்திய அணுசக்தி திணைக்களமும் (DAE), அறிவியல் தொழில் நுட்ப திணைக்களமும் (DST) இணைந்து இதற்கான நிதிப் பங்களிப்பினை வழங்கப் போகிறது.
அத்தோடு மும்பையிலுள்ள டாட்டா ஆய்வு மையத்தின் அனுசரணையோடு, ஏறத்தாழ 25 நிறுவனங்களும் 90 விஞ்ஞானிகளும் இத் திட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் தமது அரசு 2010லிருந்து 2020 வரையான காலப் பகுதியை புதிய கண்டுபிடிப்புகளின் தசாப்தமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதாக மன்மோகன்சிங் மேலும் தெரிவித்தார்.
இவை தவிர, இந்திய அறிவியல் நிறுவனமானது 5000 கோடி ரூபாய் செலவில் தேசிய அளவிலான உயர் வலுமிக்க கணனி மையத்தை பெங்களூரில் உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருப்பதை நோக்கலாம்.
ஆகவே, தேக்க நிலையில் இருக்கும் ஆய்வு மற்றும் அபிவிருத்தித் துறையை மேம்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துள் இந்தியா தள்ளப்பட்டிருப்பதற்கு சீனாவின் பொருண்மிய வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணியாக அமைவதைக் காணக்கூடிதாகவிருக்கிறது.
தற்போதைய வளர்ச்சியை 2017 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டுமென்பதே இந்தியாவின் குறிக்கோளாக இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் பொருண்மிய வளர்ச்சி வீதம் குறைவடைவதை நோக்க வேண்டும்.
உலக வர்த்தக சந்தையில் கனிமங்கள், உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் பண வீக்கம் இந்தியாவைப் பாதிக்கிறது. பண வீக்கத்தை குறைப்பதற்காக, அரச வட்டி வீதத்தை தொடர்ச்சியாக அதிகரித்தது இந்தியா.
ஆனால், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற வளர்ச்சியுறும் ஆசிய நாடுகள், வட்டி வீதத்தை அதிகரிக்காமல் பொருண்மிய வளர்ச்சியை உயர்த்த மாற்று வழி முறைகளைக் கையாண்டன.
இதனை தற்போது தான் இந்தியா உணர்ந்து கொண்டுள்ளது.
ஆகவே, தேசிய மொத்த உற்பத்தியில் 60 சதவீதத்தை சேவைத் துறையூடாகப் பெறும் இந்தியா போன்ற நாடுகளின் கைத்தொழில் வளர்ச்சிக்கு, உயர் தொழில் நுட்பம் அத்தியாவசியமானதென்பதை சீனாவின் பொருண்மிய ஆதிக்க நகர்வுகள் உணர்த்துகின்றன.
ஐரோப்பிய சந்தையை எடுத்துக் கொண்டால், அங்கு நுகர்வோர் சந்தையை கூடியளவு ஆக்கிரமித்திருப்பது சீனாவே. இங்கு இந்தியப் பொருட்களின் ஆதிக்கம் சிறிதளவு மட்டுமே காணப்படுகிறது. அதேவேளை, அதியுயர் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டுத் திறனை அதிகம் பயன்படுத்தும் தைவான், தென் கொரியா போன்ற நாடுகளின் கைத்தொழில் துறையில் சீனாவின் நேரடி முதலீடு அதிகமாகக் காணப்படுகிறது.
இப்போதுதான் கிழக்காசிய நாடுகளில் தமது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foreign Direct Investment) இந்தியா கொண்டு செல்ல ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். மேற்குலகில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி (Credit Crunch) பிரச்சினையால், முதலீடு செய்ய எவரும் முன்வராத நிலையில், அதிக வட்டி வீதத்திற்கு தமது திறைசேரி முறிகளை ஐரோப்பிய நாடுகள் விற்பதாலும் தனது முதலீடுகளை ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குவிக்க ஆரம்பித்துள்ளது சீனா.
இது ஒரு வகையான தற்காப்பு நிலையென்று கருதப்படலாம். இதன் ஒரு பகுதியாகவே இலங்கையில் சீனா நகர்த்தும் முதலீடுகளைப் பார்க்கலாம். இலங்கையின் மிகப் பெரிய கடன் வழங்குநர் தற்போது சீனாதான்.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த 2009 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா வழங்கிய கடன் 1.2 பில்லியன் டொலர்கள். 2010இல் மட்டும் 821 மில்லியன் அமெரிக்க டொலர்கள். வெளிநாட்டுக் கடனின் மொத்தத் தொகையில் 54 சதவீதத்தை 2009 இல் சீனா வழங்கியிருந்தது.
சீன சுங்கத் திணைக்கள புள்ளி விபரத் தகவலின்படி, 2011 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் 1.28 பில்லியன் டொலர்ககளாகும்.
அது 2010 ஆம் ஆண்டு அதே காலப் பகுதியை விட 39.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால், 2011 முதல் அரையாண்டில், இலங்கையிலிருந்து சீனாவிற்கு செய்த ஏற்றுமதியின் மதிப்பு வெறும் 68 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
இலங்கையைப் பொறுத்தளவில் குறிப்பாக பல்வேறு நாடுகளிடமிருந்து நகர்த்தப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) 2010 ஆம் ஆண்டளவில் 516 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்தத் தொகையை இன்னும் அதிகரிக்கும் வகையில் பல திட்டங்களை சர்வதேச அளவில் முன்னெடுக்கும் இலங்கை அரசு, இதற்காக உல்லாசப் பயணத் துறையை மேம்படுத்தும் வழிவகையை ஆராய்கிறது.
சீனாவின் எக்ஷிம் (EXIM) வங்கியின் உதவியுடன் கொழும்பின் மத்திய பகுதியிலுள்ள 3 ஹெக்டர் நிலப்பரப்பில், ஏறத்தாள 104 மில்லியன் டொலர் முதலீட்டில், 350 மீற்றர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரத்தை இலங்கை அரசு நிறுவ முயல்வதை நோக்க வேண்டும்.
தென் கிழக்கு ஆசியாவின் மிக உயரமான இந்த தாமரைக் கோபுரத்தை (Lotus Tower) இந்தியா, பங்களாதேஷிலிருந்து பார்க்கலாமென்று கூறப்படுகிறது.
இதன் அடிவாரத்தில் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்படப் போகின்றன.
தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவை, வானொலி போன்றவற்றோடு முக்கியமாக, பாதுகாப்புத் துறை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் இக் கோபுரம் பயன்படப் போகிறது.
உலகின் 19 ஆவது உயரமான கோபுரமாகவும், பாரிஸ் ஈவிள் (EIFFEL) கோபுரத்தை விட 26 மீற்றர் உயரமாகவுள்ள இத்தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணி, 30 மாதங்களில் பூர்த்தியாகுமென கணிப்பிடப்பட்டுள்ளது.
80 களின் ஆரம்பத்தில் புத்தளத்தில் அமைந்துள்ள வொய்ஸ் ஒஃவ் அமெரிக்காவினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகுவதாக ஈழப் போராட்ட அமைப்புகளின் மத்தியில் பரப்புரையொன்று மேற்கொள்ளப்பட்ட விடயம் தற்போது நினைவிற்கு வருகிறது.
ஆகவே, சீனாவின் பேருதவியுடன் கட்டப்படும் இக்கோபுரத்தின் பயன்பாட்டில் இலங்கை பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் எந்தளவில் இருக்கப் போகிறது என்பதையிட்டு இந்தியா கவலை கொள்ளுமென்று எதிர்பார்க்கலாம்.
இவை தவிர, இலங்கைக்கான சீன உதவியில் அதன் மிகப் பெரிய சர்வதேசத் தொடர்பாடல் வங்கியான “எக்ஷிம்’ எவ்வகையான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.
நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலைய நிர்மாணிப்பின் முதற்கட்டப் பணிக்கு 455 மில்லியன் டொலர்களை வழங்கிய எக்ஷிம் வங்கி, 600 மெகாவட் மின் உற்பத்திக்கான இரண்டாம் கட்டப் பணிக்கு மேலதிகமாக 891 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்நிலையம் முழு அளவில் இயங்க ஆரம்பித்துள்ளதாவென்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளதை அவதானிக்கலாம்.
துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்தியைப் பொறுத்தவரை, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பின் முதற்கட்டப் பணிக்கு 400 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியது. அதில் எக்ஷிம் வங்கியானது எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு 77 மில்லியன்களை கடனாகக் கொடுத்துதவியது. அதேவேளை, சீன தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தை ஒப்பந்ததாரராகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்டப் பணிக்காக 810 மில்லியன்களை அவ்வங்கி வழங்குகிறது.
இவற்றோடு அம்பாந்தோட்டையில் நிறுவப்படும் இரண்டாவது சர்வதேச விமான நிலைய நிர்மாணிப்பிற்காக 190 மில்லியன் டொலர்களை சீன அரசு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர நெடுஞ்சாலை நிர்மாணிப்பிற்கு சீனா வழங்கும் 760 மில்லியன் டொலர்களில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக விரைவுச் சாலையை அமைப்பதற்கு 310 மில்லியன்களை எக்ஷிம் வங்கி கடனாக கொடுக்கிறது.
இந்த 760 மில்லியனில் 302 மில்லியன் டொலர்களை வட பகுதி வீதிப் புனரமைப்பிற்கு ஒதுக்குவதாகக் கூறப்பட்டாலும் அந்நிதி எங்கே பயன்படுத்தப்படுகின்றது? என்கிற கேள்விக்கு பதில் தேட முடியாமலுள்ளது. அத்தோடு 13 புதிய புகையிரத டீசல் இயந்திரங்களை, சீன நிறுவனமிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக 102.5 மில்லியன்களை கடனாகக் கொடுக்க எக்ஷிம் வங்கி இணங்கியுள்ளது.
வழங்கும் நிதி வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கஜானாவை நிரப்பிவிடக் கூடாதென்கிற கவலை சீனாவை ஆக்கிரமித்திருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். புதிய ஒப்பந்தமாக, கொழும்பு துறைமுகத்தின் பண்டங்களைப் பரிமாறும் திறனை (Cargo Handling) அதிகரிப்பதற்கு, உள்ளூர் அயிட்கின் ஸ்பென்ஸும், சீன வாணிப நிறுவனமும் இணைந்து 450 மில்லியன் டொலர்களை முதலிட முன் வந்திருப்பதைக் காணலாம்.
அடுத்த மூன்று வருடங்களில் பாதை, பாலம், சக்தி உற்பத்தி மையங்கள் மற்றும் நீர்ப்பாசனம், பயிர் செய்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனம், இலங்கை அரசுடன் உடன்பாடொன்றினை எட்டியுள்ளது.
இருப்பினும் சனத் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சீனாவில் பண வீக்கமும் உயர்ந்து செல்வதை அவதானிக்க வேண்டும். 2010 இல் 183 பில்லியன் டொலர்களாகவிருந்த சீனாவின் வர்த்தக உபரியானது 2011 இல் 160 பில்லியனாக சரிவடைந்து விட்டது. இதனை சீன வர்த்தக அமைச்சர் சென். அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கெதிராக காய்களை மிக வேகமாக நகர்த்தும் இந்தியாவின் முதலீடுகள் என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
இலங்கையில் இந்திய நேரடி முதலீடு நான்காவது இடத்தில் இருந்தாலும், 2003 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை அதன் மொத்த முதலீடு 650 மில்லியன் டொலர்களெனக் கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டளவில் இலங்கைக்குள் வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு, 3 பில்லியன் டொலர்களாக அமைய வேண்டுமென திட்டமிடப்பட்டாலும் அதில் 15 இலிருந்து 20 சதவீத பங்களிப்பே இந்தியாவிலிருந்து வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இரு நாடுகளுக்கிடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 2015 இல் 900 மில்லியனைத் தொட்டு விடுமென சென்னையில் இருக்கும் இலங்கைத் தூதுவர் சாம் விஜேசெகா எதிர்வு கூறுகின்றார்.
கடந்த வருடம் ஜனவரியிலிருந்து ஒக்டோபர் வரையான காலப் பகுதியில், 168 மில்லியன் பெறுமதியான ஒன்பது இந்திய திட்டங்களுக்கு மட்டுமே இலங்கை முதலீட்டுச்சபை (BOI) அங்கீகாரம் வழங்கியிருப்பதை நோக்க வேண்டும்.
இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நிலுவையிலிருக்கும் ஏனைய இந்திய நிறுவனங்களின் வேண்டுதலிற்கான அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பாரெனத் திடமாக நம்பலாம்.
2005 இல் இலங்கைக்கான இந்தியாவின் நேரடி முதலீடு 18 மில்லியன்களாக இருந்தது. 2008 இல் அம்மதிப்பு 126 மில்லியன்களாக உயர்வடைந்தது குறிப்பிடத்தக்கது. 2009 இல் 77 மில்லியனாகவும் ஆகவும் 2010இல் 110 மில்லியனாகவுமிருந்த இந்திய நேரடி முதலீடு, 2011 இன் முதல் அரையாண்டில் 47 மில்லியன் ஆக இருக்கிறது. இது மிகக் குறைவு. இவை தவிர, இந்தியாவின் பெரிய வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), ஐ.சி.ஐ.சி.ஐ. இந்தியன் வங்கி, இந்திய அரச வங்கி என்பனவற்றின் கிளைகள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கையில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்களின் வரிசையில், கெயின்ஸ் (CAIRNS), பார்தி எயார்டெல், இந்தியன் ஒயில், பிரமல் கிளாஸ் (PIRAMAL GLASS), டாட்டா குழுமம், தாஜ் ஹோட்டல், அசோக் லேலண்ட், அல்ரா சிமென்ட், சீட் (CEAT) போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதேபோன்று இலங்கையில் இயங்கும் கார்சன்ஸ் பிரான்டிக்ஸ் (CARSONS BRANDIX) என்கிற பன்னாட்டு நிறுவனம், ஒரு பில்லியன் டொலர் செலவில் ஆடை உற்பத்தி நகரமொன்றினை விசாக பட்டினத்தில் நிர்மாணிக்கப் போகிறது.
இவற்றோடு மாஸ் கோல்டிங், ஜோன் கீல்ஸ், அயிற்கின் ஸ்பென்ஸ் போன்றவையும் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. ஆகவே, இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் முதலீட்டளவினை, சீனாவோடு ஒப்பீடு செய்தால், இன்னமும் பல படிக்கட்டுகளை இந்தியா தாண்டிச் செல்ல வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதுபோன்று அறிவியல் துறையில் மட்டுமல்ல, முதலீட்டுத் துறையிலும் சீனாவை மேவிச் செல்ல இந்தியாவால்முடியுமாவென்கிற கேள்வி எழுகிறது.
ஆதலால், இந்த பொருண்மிய ஆதிக்கப் போட்டி இவ்விரு ஆசிய வல்லரசுகளுக்கிடையே பகை முரண்பாட்டுத் தளத்தினை உருவாக்குமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நாட்டின் வளங்கள் மக்களிடையே பகிரப்படாமல், அதிகார மையத்தில் மட்டுமே குவிக்கப்பட்டு, தேசிய மொத்த உற்பத்தி (GDP) அதிகரிக்கிறதென்று சீனாவும் இந்தியாவும் பெருமையடையலாம்.
ஆனால், மக்கள் சக்தி ஒடுக்கப்படும் போது வெடிப்பு உருவாகுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும்.
ithayachandran@hotmail.co.uk
இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment