தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர்ந்த தமிழர்களினால் வழிநடத்திச் செல்லப்படுவதாக தோன்றுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு தான் விரும்புகின்ற போதிலும் தமிழ்க் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் வைத்து டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகையின் பகவான் சிங்கிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் விரும்புகிறார்களில்லை என்று கூறியுள்ளார். இந்தியா, சீனாவுடனான உறவுகள் தமிழர் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட நெருக்கடிகள் தொடர்பாக டெக்கான் குரோனிக்கிளுக்கு விரிவான பேட்டியொன்றை ஜனாதிபதி வழங்கியிருக்கிறார். பேட்டி வருமாறு;
கேள்வி: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த விடயத்தை எவ்வாறு நீங்கள் கையாளப் போகின்றீர்கள்?
ஜனாதிபதி: இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற விடயங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் மீது இந்த மேற்கு நாடுகளிலுள்ள மீதமாக இருக்கும் புலி உறுப்பினர்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். தமது பாராளுமன்றங்களில் மேற்கு நாடுகள் காஷ்மீர் பற்றியும் இலங்கை பற்றியும் பேசுகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக்கில் தாங்கள் என்ன செய்தனர் என்பது பற்றி அமைதியாக இருக்கின்றனர். இலங்கையில் ஊவாவில் 1880இல் கிளர்ச்சி ஏற்பட்டபோது 14 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களையும் பிரிட்டிஷார் கொன்றனர். சகல நீர்த் தேக்கங்களையும் அழித்து நாசமாக்கினர். மக்களை பட்டினி கிடக்க நிர்பந்திக்க அதனை செய்திருந்தனர். நிலத்தை எடுத்துக் கொண்டனர். இதனை அவர்கள் இந்தியாவிலும் செய்தனர். இப்போது மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர். என்னை தங்களின் கையாளாக வைத்திருக்க மேற்குலகு விரும்புகிறது. அவ்வாறிருக்க நான் மறுக்கிறேன்.
கேள்வி: சீனாவின் பக்கம் நீங்கள் சாய்ந்து செல்வதாகவும் அது இந்து சமுத்திரத்தின் இந்த பகுதியிலுள்ள இந்தியாவின் பூகோள அரசியல் நிலைமையை பாதிக்கும் என்ற உணர்வு இந்தியாவில் உள்ளதே?
ஜனாதிபதி: எனக்கு இந்தியாவே முதலாவதாகும். இந்தியாவுக்குப் பின்னரே ஏனையவர்கள் நான் அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அவர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் ஐ.நா. பிரிட்டன், அமெரிக்கா போன்றவை பற்றி நான் கவலைப்பட்டிருக்கவில்லை. உண்மையில் நாங்கள் புலிகளின் கப்பல்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை அமெக்காவின் உதவி மூலம் பெற்றோம். இதன் மூலம் கடலில் அவற்றை அழிப்பது எமக்கு சாத்தியமானதாக இருந்தது. சீனா பாரிய உள்சார் கட்டமைப்பு திட்டங்களுடன் இங்கு வருகிறது. சீனாவுக்கு கொடுத்த ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவுக்கு வழங்க நாம் முன்வந்திருந்தோம் என்பதை உங்களுக்கு கூறுவது அவசியமானதாகும். அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய திட்டம் உட்பட ஒவ்வொன்றையும் இந்தியாவுக்கு வழங்க நாம் முன் வந்திருந்தோம். ஆனால் அங்கிருந்து பதில் இல்லை. கொழும்பு துறைமுக விஸ்தரிப்புக்குக் கூட விளம்பரப்படுத்தப்பட்ட போது சீனர்கள் மட்டுமே வந்தனர்.
கேள்வி: யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களுக்கும் மேலாகி விட்டது. புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஆனால் தமிழர்களின் சுயாட்சிக்கான கோரிக்கை இப்போதும் வலுவானதாக இருப்பதாகவே தென்படுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி இதனை வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பது பற்றி எத்தகைய நோக்கத்தை கொண்டுள்ளீர்கள்? அரசியல் தீர்வு காணப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாட்டின் முதலீடுகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்று யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளதே?
ஜனாதிபதி: இந்தத் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இடம்பெற்றவையாகும். தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக கணிசமான அளவு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. வட, கிழக்குக் வெளியே 54 சதவீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். தனது அபிப்பிராயத்தை தெரிவிக்கும் சுதந்திரம் யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்துக்கு உள்ளது. ஆனால் வட பகுதியில் முதலீடு செய்ய ஆர்வத்தை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழர்களும் வெளிநாடுகளில் உள்ளனர். எட்டப்படக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் அது பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இருக்க வேண்டும். விசேடமாக மோதலுக்கு பின்னலான சூழ்நிலையின் அடிப்படையில் பரந்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். பிராந்திய சுயாட்சி என்பது பயங்கரவாதிகளும் அவர்களை நியாயப்படுத்துவோரும் பயன்படுத்திய சுலோகமாக இருந்தது. வேற்றுமையில் ஒற்றுமையே வலுவான தேவைப்பாடாகும். இதற்கு பிராந்திய சுயாட்சி மட்டுமே ஒருவழியாக அமையாது. சம வாய்ப்பே சிறப்பான அணுகுமுறையாகும். அத்துடன் ஜனநாயக சுதந்திரம், உரிமைகள் என்பனவற்றின் விரிவாக்கத்துடன் வடக்கிற்கான துரித பொருளாதார அபிவிருத்தி அதாவது நாட்டில் ஏனைய பிராந்தியங்களுடன் முன்னுக்குப் பின்னதான பொருளாதார அபிவிருத்தியே சிறந்த அணுகுமுறையாகும்.
கேள்வி: அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண எத்தகைய யோசனையை நீங்கள் முன்மொழிகின்றீர்கள்?
ஜனாதிபதி: அதிகாரப் பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கைத் தவிர்ந்த சகல மாகாணங்களிலும் மாகாண சபைகளை தெரிவு செய்துள்ளோம். வடக்கிலும் மாகாண சபை நிறுவப்பட்டுள்ளது. மாகாண சபை நிறுவாகங்களை எவ்விதம் வலுப்படுத்தப்பட்டு முன்னேற்றமடைய வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்வது அவசியமானதாகும். அதிகளவுக்கு பொருளாதார அபிவிருத்திகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டியது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்வது தேவையானதாகும். ஜனநாயக விரிவாக்கலில் உள்ள நடவடிக்கை இதுவாகும். சகல சமூகங்களும் அரசியல் குழுக்களும் முக்கியமான பொருளாதார பங்காளிகளும் இதில் பங்கேற்க வேண்டும்.
கேள்வி: நீங்கள் பிரேரித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு பயனுள்ளதாக அமையாது என்று பலர் கூறுகின்றனர். ஏனெனில் இதனைப் போன்று பல குழுக்கள் முன்னரும் இருந்தன. ஆனால் அரசியல் பிரச்சினையானது தொடர்ந்தும் ஒரே விதமாக இருந்து வருகின்தே?
ஜனாதிபதி: பாராளுமன்ற தெரிவுக் குழுவானது நல்லதொரு அணுகுமுறையாகும். எந்தவொரு தொந்தரவான பிரச்சினைக்கும் ஜனநாயகத்திலுள்ள சிறப்பான அணுகுமுறையாக இது உள்ளது. பாராளுமன்றமே இறுதியாக எந்த ஒரு தீர்வுக்கும் இணங்க வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தனது பிரதிநிதிகளை தமிழ்க் கூட்டமைப்பு நியமிக்கவில்லை. அவர்கள் (தமிழ்க் கூட்டமைப்பு) புலிகளின் மனப்போக்கையே கொண்டிருக்கின்றனர் சாத்தியமற்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்துகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பு, காணிக் கொள்கை பொலிஸ் தொடர்பாக சாத்தியமற்ற விடயங்களை இவர்கள் வலியுறுத்துகின்றனர். ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட போது உங்கள் நாட்டில் என்ன நடந்தது என்பதை பாருங்கள். முதலமைச்சர் மாயாவதி அவரை கைது செய்ய முயற்சித்தார். இந்த ஆட்களால் கைது செய்யப்படுவதற்கு நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு பொலிஸ் படையை கொடுப்பதால்) புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ்க் கூட்டமைப்பு வழிநடத்தப்படுவதாக தோன்றுகிறது. சமாதானம் அரசியல் இணக்கப்பாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் விரும்பவில்லை. தம்மை வைத்திருக்கும் நாடுகள் பின்னர் தங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகின்றனர். புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை ஒத்த நிகழ்ச்சி நிரலை தமிழ்க் கூட்டமைப்பு கொண்டிருக்க முடியாது. அதனை பெரும்பான்மை மக்கள் ஏற்க மாட்டார்கள். தீர்வொன்றை நோக்கி செயற்பட நான் விரும்புகிறேன். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு ஒத்துழைப்பதில்லை.
கேள்வி: யுத்தத்தின் போதும் கூட உள்ளூராட்சி சபை, பாராளுமன்றத் தேர்தல்கள் வடக்கில் இடம்பெற்றன. இப்போது வடக்கில் ஏன் மாகாண சபை தேர்தலை அரசு நடத்தவில்லை?
ஜனாதிபதி: அண்மித்த எதிர்காலத்தில் தேர்தல் நிச்சயம் நடைபெறும். ஆனால் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பாக ஒருவர் விளங்கிக் கொள்வது அவசியமானதாகும். மக்கள் பங்கேற்பதற்கான உண்மையான வாய்ப்பை மாகாண சபை தேர்தலே வழங்குகிறது. மோதல் காலத்தில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற போது தமது வாக்குரிமையை வடக்கு மக்கள் பயன்படுத்த இடமளிக்கப்படவில்லை என்பதில் இரகசியம் எதுவுமில்லை. ஜனநாயக ரீதியான அந்த வெளிப்பாட்டுக்கு எதிராக புலிகள் செயற்பட்டனர். பழையதும் காலாவதியானதுமான வாக்காளர் இடாப்புக்கு அமையவே வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது என்பது மற்றொரு உண்மையாகும். தமிழ்க் கூட்டமைப்புக்கு இது வெற்றியை ஏற்படுத்தியது. ஆனால், பெரியதாக இருக்கவில்லை என்று தோன்றுகிறது. வடக்கில் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ள புலிகள் தடுத்திருந்தனர். சரியான முறையில் தேர்தல் இடாப்பு தயாரிக்கப்பட்டதும் வட மாகாண சபைக்கான தேர்தலை எம்மால் நடத்த முடியும்.
கேள்வி: இப்போதும் கூட வட பகுதி அதிகளவுக்கு இராணுவமயப் படுத்தப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். சுமார் மூன்று இலட்சம் மக்களை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாக்கின்றனர். நூலக சங்க கூட்டத்தை நடத்துவதாயினும் அல்லது பாடசாலை நிகழ்ச்சியை நடத்துவதாயினும் இராணுவத்தின் அனுமதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் சம்பந்தத்தை குறைப்பதற்கு எப்போது நீங்கள் யோசனை தெரிவிப்பீர்கள்?
ஜனாதிபதி: வடக்கில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அங்கு மக்கள் தொகையின் விகிதாசாரத்திற்கு அமைய இராணுவப் பிரசன்னம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், பிராந்தியத்துக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக கொடூரமான ஆயுத மோதல் இடம்பெற்ற பகுதியிலுள்ள இராணுவப் பிரசன்னமானது இராணுவ மயமாக்கலின் தன்மையை கொண்டதல்ல. உள்ளூர் தேர்ச்சி குறைவினால் உள்சார் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இராணுவம் முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. அத்துடன், வடக்கில் பெரும் பகுதியில் இன்னரும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கிறது. பாடசாலை வைபவங்கள் அல்லது நூலகக் கூட்டங்கள் போன்றவற்றுக்கு இராணுவத்தின் அனுமதி தேவைப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆனால், அங்கு எச்சரிக்கையான கண்காணிப்பு இருக்க வேண்டியுள்ளது. தோல்வி கண்ட எதிரியின் தன்மையை அறிந்து கொள்வதற்கு கண்காணிப்பு இருக்க முடியும். புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை இப்போதும் நாம் மீட்டு வருகிறோம். பாதுகாப்புத் தேவைகளை பேணும் விதத்தில் இராணுவ பிரசன்னத்தில் கட்டம் கட்டமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
கேள்வி: இராணுவ முகாம்களை அமைக்க அல்லது சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்குவதற்கு தமது நிலங்கள் எடுக்கப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே?
ஜனாதிபதி: இந்த வதந்திகளை புலிகளின் மிச்சங்கள் பரப்புகின்றன. எமது நாடு பூராவும் ஆயுதப் படையினரும் அவர்களது முகாம்களும் உள்ளன. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் அத்துடன், இறைமையை பாதுகாக்கவும் இது தேவையான விடயமாகும். புலிகள் துரத்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல முஸ்லிம்களும் சிங்களவர்களும் இருந்தனர். முதலாவதாக இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிங்களவரோ முஸ்லிம்களோ தமிழரோ எவராக இருந்தாலும் தமது பாரம்பரிய இருப்பிடங்களில் இருந்து துரத்தப்பட்டிருந்தால் அவர்களின் காணியை திரும்பக் கொடுப்பது அவசியமானதாகும். அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைகள் மூலமும் வட மாகாணத்தில் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும்பான்மை அந்தஷ்து மாற்றப்படமாட்டாது.
0 கருத்துரைகள் :
Post a Comment