- இந்தியாவின் ஆலோசனையை இலங்கை மதித்து நடக்குமா?நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் இந்தியா முதல் முறையாக தனது வாயைத் திறந்துள்ளது. கடந்தவாரம் புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் இந்த அறிக்கை பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா இன்னும் கவனமாக ஆராய்வதாக கூறிய அவர், முதற்கட்டமாக சில கருத்துகளை வெளியிடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்குத் தடையாக- இலங்கைக்கு ஆதரவாக- இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்து சமுத்திரத்தில் முக்கியமானதொரு நாடான இந்தியாவின் கருத்தை மீறி, அதன் ஆதரவின்றி எந்த நடவடிக்கையையும் எடுக்க சர்வதேச சமூகம் விரும்பாததால் தான், இலங்கை அரசு சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்ள முடிந்தது. இல்லையேல் ஐ.நா விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் ஒன்றைச் சந்தித்திருக்கலாம். ஜெனிவாவில் கடைசியாக நடந்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கூட, இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கொடுத்த ஆலோசனையின் பேரில் தான், கனடாவின் தீர்மானம் கைவிடப்பட்டது. இப்போது இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளது.இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை அரசுக்குச் சார்பானதாக அமையாது போனது ஆச்சரியமானது தான். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள கருத்தை இலங்கை அரசினால் அதிகம் ஜீரணித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. அதுவும் குறித்த காலவரையறைக்குள் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது .நம்பகமான விசாரணை என்று வரும்போது அதனை இலங்கை அரசினால் முன்னெடுக்க முடியுமா என்று கேள்வி எழுகிறது. ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பற்றதாக அமையவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பத் தொடங்கி விட்டது. அதுவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈபிடிபியும், ஜாதிக ஹெல உறுமயவுமே இந்த அறிக்கை நியாயமற்றது என்று கூறியுள்ளன. அதைவிட அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவரே சில விடயங்களைத் தாம் தவறவிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார். ஆக இந்த அறிக்கை முழுமையானதல்ல என்ற வாதம் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இந்தநிலையில் நம்பகமான விசாரணை ஒன்றை நடத்தும் திறன், ஆற்றல் இலங்கை அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுவதில் நியாயம் உள்ளது.உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் குற்றவாளிகளை தண்டிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், குற்றங்களே நடக்கவில்லை என்று கூறும் ஒருதரப்பிடம் இருந்து அத்தகைய நம்பகமான விசாரணையை சர்வதேச சமூகம் எந்த வகையிலும் எதிர்பார்க்காது. ஆணைக்குழுவின் அறிக்கையை கூட பக்கச்சார்பற்றதாக தயாரிக்க முடியாத நிலை உள்ள போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை மட்டும் நம்பகம் வாய்ந்ததாக அமைவதற்கு வாய்ப்புகள் இல்லையென்றே கூறலாம். நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் - ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்- நடத்தப்பட வேண்டும் என்றே இந்தியா தனது அறிக்கையில் கூறியுள்ளது.உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவில்லை. இது முக்கியமான விடயம். இந்த விவகாரத்துக்குள் சர்வதேச தலையீடுகள் ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் அதற்காக இந்தியா சர்வதேச விசாரணைப் பொறிமுறையை எதிர்க்கவோ, உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தவோ இல்லை. நம்பகமான விசாரணை என்று- இதற்கு முன்னர் மேற்குலகம் கூறிவந்த சொற்களிலேயே இந்தியாவும் கூறியிருக்கிறது. இது இலங்கை அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதொரு விடயமாகும்.அடுத்து,குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளது. இது சிக்கலானதொரு விவகாரம். இதுவரையில் போர்க்குற்ற விசாரணையை- பொறுப்புக் கூறும் பொறிமுறையை வலியுறுத்தி வந்த சர்வதேச சமூகம் எந்தவொரு கட்டத்திலும் அதற்கான காலவரம்பை நிர்ணயிக்கவில்லை. இந்தியாவின் அறிக்கையோ, விசாரணைகளைக் குறிப்பிட்டதொரு காலவரையறைக்குள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இது பொறுப்புக்கூறுதலுக்கு காலவரையறை கொடுத்து அழுத்தம் கொடுக்கும் தொனியிலானது. இந்தியாவின் இந்த முன்மாதிரியை இனிமேல் மேற்குலகம் கவ்விப் பிடித்துக் கொள்ளப் போகிறது. இது இலங்கை அரசுக்கு அதிகமான அழுத்தங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றங்கள் என்று எதையும் சுட்டிக்காட்டாது போனாலும், சில சம்பவங்கள் பற்றி விசாரிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில் எந்தெந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் அரசுக்கே இருக்கிறது. அரசாங்கம் எதை வேண்டுமானாலும் விசாரிக்கலாம், எதை வேண்டுமானாலும் தவிர்த்துக் கொள்ளலாம்.வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பற்றி ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவுமே சொல்லப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில், உள்நாட்டு விசாரணைகளின் போது சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இலகுவாக மறைக்கப்பட்டு விடும் வாய்ப்புகளே அதிகம். இப்படியான நிலையில், இந்தியா எதிர்பார்க்கும் நம்பகமான விசாரணைகளுக்கு வழி கிடைக்காது. அதைவிட இந்தியா கூறியுள்ளது போன்று குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணைகளை நடத்த அரசாங்கம் இணங்குமா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால் இப்படியான காலவரையறைகளுக்குக் கட்டுப்படும் வழக்கம் இலங்கை அரசுக்கு இல்லை. பேச்சுக்களின் போது காலவரையறைகளை நிராகரித்துப் பழகிப்போன அரசாங்கம், பொறுப்புக்கூறும் காலவரையறைக்கு இணங்கும் என்று கற்பனை செய்ய முடியாது.இதைவிட இந்தியா அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளது.இதுவும் இலங்கை அரசுக்கு வெறுப்பைத் தரக்கூடிய தொன்றாகவே அமைந்துள்ளது. உறுதியான அதிகாரப்பகிர்வின் மூலம் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இந்தியா உதவத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. இலங்கை அரசோ உறுதியான அதிகாரப் பகிர்வு பற்றிய தெளிவேயில்லாமல் இருக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் எட்டப்பட வேண்டிய அடைவுகளை கோடிட்டுக் காட்டிவிட்டது. இந்தியாவின் இந்தக் கருத்துகளை இலங்கை அரசு ஏற்கிறதா, மறுக்கிறதா என்று யாருமே இன்னமும் வாய் திறந்து கூறவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் கூறலாம், இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மௌனத்தை இந்தியாவின் அறிக்கையுடன் ஒத்துப் போவதற்கான சமிக்ஞையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment