தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்படுகின்றமை கடத்தப்படுதல் சித்திரவதை செய்தல் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுதல் போன்றவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இவ்வாறு உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் Radio Netherlands Worldwide சிறிலங்காவுக்கான செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது.
சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இவ்வாணைக்குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் நீண்ட கால மீளிணக்கப்பாடு உருவாக்கப்பட வேண்டும் எனவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மீளிணக்கப்பாட்டிற்கான எந்தவொரு சமிக்ஞைகளும் காட்டப்படுகின்றதா என்பதே கேள்வியாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்படுகின்றமை, கடத்தப்படுதல், சித்திரவதை செய்தல், பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுதல் போன்றவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
"யாழ்ப்பாண சனத்தொகை 550000 ஆகும். ஆனால் இங்கு 40000 படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது யாழ் குடாநாட்டில் உள்ள இராணுவத்தினர் மற்றும் சனத்தொகை என்பன 1:11 என்ற விகிதாசாரத்தில் காணப்படுகின்றது" என தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண சமூகத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்விமானான றமேஸ் தெரிவித்துள்ளார்.
"இவ்வாறானதொரு சூழலின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எண்ணிப்பார்ப்பதானது வேடிக்கையாக உள்ளது" எனவும் றமேஸ் தெரிவித்துள்ளார். இவர் அச்சுறுத்தல் காரணமாகத் தனது உண்மையான பெயரை வெளியிட விரும்பவில்லை.
மே 2009 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு தமிழர் தலைமை கொல்லப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இராணுவ வீரர்களை அதிகம் நிலைகொள்ள வைத்துள்ளது. புலிகள் அமைப்பின் சில உறுப்பினர்கள் கொல்லப்பட்ட விதமானது சந்தேகத்திற்கிடமாக உள்ளதுடன் இச்சம்பவங்களை யுத்தக் குற்றங்களாக வகைப்படுத்த முடியும் என மனித உரிமை அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கப் படைகளால் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்துக் கொண்டாலும்இ இது இராணுவ வீரர்கள் சிலரின் தவறான நடவடிக்கையாக இருக்குமேயன்றி திட்டமிடப்பட்ட இராணுவக் கொள்கையாக இருக்க முடியாது என கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அச்சங் காரணமாக தனது உண்மையான பெயரைக் கூறமறுத்த தமிழரான ஆனந்தன் என்பவரும் றமேஸ் போலவே பாரபட்சமற்ற விசாரணை என்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகத் தான் சந்தேகம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "இது ஒரு நாடகம். இங்கு இயற்கையான நீதி முறைமையானது மீறப்பட்டுள்ளது. அதாவது குற்றவாளியே தனக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதானது இயற்கையான நீதிக்கு அப்பாற்பட்டது" என ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அனைத்து யுத்தக் குற்றங்களையும் புலிகள் அமைப்பின் போது போட்டு சிறிலங்கா இராணுவத்தை தப்ப வைப்பதற்கு ஏதுவாகவே கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை காணப்படுவதாக ஆனந்தன் நம்புகிறார். இவர் இவ் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவரின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு ஆனந்தன் தனது கருத்தை மேலும் வலுப்படுத்தினார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட இடங்களிற்கு அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருத்துவமனையில் தமிழ் மக்களுக்கு வைத்திய சேவை மேற்கொண்ட மூன்று அரசாங்க மருத்துவர்களில்இ மருத்துவர் துரைராஜன் வரதராஜாவும் ஒருவராவார். அந்தக் காலப்பகுதியில் இம்மருத்துவர் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக அனைத்துலக ஊடகங்கத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
இதன் பின்னர் யூலை 2009 ல் இவரும் ஏனைய மருத்துவர்களும் கைதுசெய்யப்பட்டனர். மருத்துவர் வரதராஜா காவற்துறையின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போதுஇ சிறிலங்கா இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளால் பலவந்தப்படுத்தப்பட்டே தான் பொதுமக்கள் இழப்புத் தொடர்பான அவ்வாறானதொரு நேர்காணலை வழங்கியிருந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மருத்துவ கலாநிதியான வரதராஜா பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களை மட்டுமன்றிஇ பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தால் போடப்பட்டிருந்த மருத்துவ மற்றும் உணவுத் தடை தொடர்பாகவும் கவனத்திற் கொண்டு தகவல் வெளியிட்டிருந்ததாக ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவினர் வைத்திய கலாநிதியான வரதராஜாவின் மருத்துவமனைக்கு அருகில் விடுதலைப் புலிகள் ஆட்லறித் தளத்தை அமைத்திருந்தார்களா என மட்டுமே கேள்வி கேட்டிருந்தனர். இவர்கள் இதன் மூலம் இவ்வைத்தியசாலைக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை மற்றும் குண்டுத்தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளனர். அத்துடன் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கற்றுக் கொள்ள இவ் ஆணைக்குழு தவறியுள்ளது.
"இவர்கள் விடுதலைப் புலிகள் மீது எவ்வாறு பழி சுமத்தாலாம் என்பதில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். மாறாக பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள இவர்கள் முற்படவில்லை" என ஆனந்தன் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் வன்முறையைக் குறைப்பதற்காக துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்சியின் ஆயுதக் குழுவானது கொலை, கடத்தல், ஊடக செயற்பாடுகளில் தலையிட்டு அவற்றை அச்சுறுத்தியமை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக
UNHCR போன்ற பல அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"சட்ட ரீதியற்றுச் செயற்படும் துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவேண்டியது அவசியமாகும். இது இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு உதவி புரியும். ஆனால் இவ் ஆயுதக் குழுக்கள் இன்று பாரிய பிரச்சினையாக இருக்கவில்லை. சிறிலங்கா இராணுவமே பாரிய பிரச்சினையாக உள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையை இவர்கள் குறைப்பார்களா?" என ஆனந்தன் மற்றும் றமேஸ் ஆகிய இருவரும் வினவியுள்ளனர்.
ஆனந்தன் மற்றும் றமேஸ் போன்ற தமிழர்கள்இ சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கமான நேர்மையான விசாரணை ஒன்றை மேற்கொள்ள முன்வராது என நம்புகின்றனர். இதனைச் செய்யத் தவறினால் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களுக்கு ஊறுவிளைவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"யுத்தக் குற்றங்கள் மற்றும் படுகொலைகளைப் புரிந்த குற்றவாளிகள் பெருமளவில் இருக்கும் போது எவ்வாறு மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும்? இது மேலும் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுப்பதுடன்இ படுகொலைகளைப் புரிய வழிவகுக்கும்" என ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னாசியப் பிராந்தியத் தீவில் பெரும் வன்முறைகள் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் மீளிணக்கப்பாடானது வெகு தொலைவில் உள்ளதாகவே தற்போதும் உணர்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் குற்றங்களை இழைத்து வருவதைக் கொண்டே தமிழர்கள் இவ்வாறு கற்பிதம் செய்துகொண்டுள்ளனர்.
நன்றி புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment