கிருஸ்ணா வந்தாச்சு - “மேலதிகமாக ஒன்று“ பொருள்தேடும் அரசியல்வாதிகள்


கிருஷ்ணா வந்தாச்சு அதிர்ஷ்டம் பிறந்தாச்சு என்றெண்ணுவது போன்று தூரதிருஷ்டி, அர்த்த புஷ்டி போன்றவற்றுக்கும் வழி பிறந்தாச்சு எனக்கருதுமளவுக்கு அரசியல் அரங்கும் அதிர்ஷ்டம் கண்டது போன்ற கருத்துகளை பல முனைகளிலும் பேசக்காணக் கூடியதாக இருந்தது. அந்த வகையில் கிருஷ்ணாவின் வருகையும் செல்வாக்கையும் ஒருவகை குளிரான தலைப்பு போன்று தென்பட்டது. ஆனால் நாட்கள் நகர நகர பலரதும் விமர்சனத்துக்குள் அகப்பட்டுக் கொண்டு பந்தாடப்படுகின்ற கடும் சூடான தலைப்பாக மாறிப் போயுள்ளது. 


நல்லது நடக்க வேண்டும் என நினைக்கின்ற மிதவாதச் சிந்தனையாளர்களுக்கு கவலைப்பட்டுக் கொள்ள இன்னுமொரு  குறிப்பிட்ட காலம் வந்து உதித்துள்ளது என்று கூறுவோரும் உளர். ஜனாதிபதியின் பேச்சாளர் போன்று கிருஷ்ணாவும் "கூறியது கூறல்' போன்று வடக்கிலும் தெற்கிலும் 13+ அணுகு முறை என்ற வார்த்தைப் பிரயோகத்தை அமுதம் போன்று அள்ளி வீசிவிட்டு சென்று விட்டார். இங்கு நம்மவர்கள் துள்ளிவிளையாடுவதைக் காண்கின்றபோது 13+ என்கின்ற தலைப்பு மாத்திரமன்றி ஆட்களும் சூடாகியுள்ளனர் என்பது புலனாகிக் கொண்டிருக்கின்றது. 

13+ என்ற தலைப்பு முன்னரும் ஒரு தடவை அரசியல் அரங்கில் பலராலும் பலவிதமாக பேசப்பட்டு ஓய்ந்ததையும் பத்திரிகைகளில் எழுத்துக்களானதையும் துறைசார்ந்தோரும் அக்கறையுள்ளோரும் மறந்திருக்கமாட்டார்கள்.  அதனையே கிருஷ்ணாவின் வருகை புதுப்பித்துக் கொண்டுள்ளது. ஒருவர் மனம் திறந்துபேசுவதைக் கொண்டே அடுத்தடுத்த கருத்துகளையும் தீர்மானங்களையும் அபிப்பிராயங்களையும் முன்வைக்கலாம். ஆனால் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை எவருமே அறியார். 

இந்த மனதுக்குள் மறைந்திருக்கும் தாரகமந்திரமே பேச்சுக்களை மழுங்கடிக்கச் செய்கின்றன. ஒரு நல்ல ஆரம்பத்தின் தர்மத்தை முடிவுவரை கொண்டு செல்ல முடியாமல் பண்ணுகின்றன. உள்ளக முரண்பட்ட கருத்துகளை சரிபண்ணிக்க முடியாத தன்மையைக் கூட மேடைகளில் இருந்து வெளிவரும் வாய்வீச்சுக்களூடாகவும் ஒரே முகாமுக்குள் சமநிலையற்ற கருத்துகள் நிலவுவதன் ஊடாகவும் காணமுடிகிறது.  64 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்ற தேசத்தில் பேச்சுகளுக்காக செலவிட்ட காலமும் அதிகமாகவே காணப்படுகிறது. பெருந்தலைப்பு, உபதலைப்பு, குறுந்தலைப்பு என பல தலைப்புகளையும் தாங்கி உச்சத்துக்கே போனதை எவரும் ஏற்காதிருக்கமுடியாது. 

ஆனால், எச்ச சொச்சமாக மிச்சமானதுமான மனவேதனைகளும் மரணங்களுமே இவ்வாறு சோதனைகளையும் வேதனைகளையும் உள்வாங்கி தீர்க்கமான கட்டங்களையும் அடைந்த பேச்சு வார்த்தை தலைப்புகளும் தேசத்தின் நகர்வுகளும் அடி மனதில் புதைந்து கிடக்கும் குறிக்கோள்களை வெற்றி கொள்ள முடியாமல் போயிற்று. பிரித்தே ஆகவேண்டும், என்ற அடிமனச் சிந்தனையும் கொடுக்கவே கூடாது என்ற இன்னுமொரு அடிமனச் சிந்தனையுமே சமாந்தரமாக பயணித்திருப்பதை கற்றுக்கொண்ட பாடங்களாகக் கருதலாம். விட்டுக் கொடுப்பு, பரந்த மனப்பான்மை, வெளிப்படையான பொறுப்புக் கூறல் தன்மை, எதனையுமே ஒட்டுமொத்தமாக காணமுடியாமலாயிற்று  இலங்கையின் பேச்சு வார்த்தைகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு காரணங்களைக் கொண்டே ஆரம்பமாகின. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு தேவையை  உள்மனதில் வைத்துக் கொண்டு பேச்சுக்களைத் தொடர்ந்தால் அனைத்தும் புஸ்வாணமாகிக் கொண்டே இருந்தன. 

பரஸ்பரம் நம்பிக்கையற்ற விதத்தில் தொடங்கிய பேச்சுக்கள் பரஸ்பரத்தாருக்கும் தோல்விகளையே கொடுத்தன. இந்த நிலையில் புலிகளை வென்ற தருணத்தோடு முதுகெலும்பு உடைந்தது. இனிமேலும் பேச்சுக்களுக்கோ, நிபந்தனைகளுக்கோ எத்தகைய வாய்ப்பும் கிடையாது. சர்ச்சைக்குரியதும், சமாச்சாரத்துக்கும் உரியவர்களான புலிகளே கிடையாது என்றால் பேச வேண்டிய கட்டாயமோ, கடப்பாடோ, களமோ கிடையாது என்று பெருந்தலைவர்கள் எண்ணியிருக்கக் கூடும். 

எண்ணத்தில் மண்ணள்ளி வைத்தது போன்று, இப்போது தான் புரிகிறது. புலிகளை ஒழித்துக்கட்டாமலே இருந்திருக்கலாம் என்று, ஏனெனில் புலிகளுக்குத் தேவையாக இருந்தது பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதிலும் பார்க்க களத்தை சர்ச்சைக்குரியதாகவும் அச்சம் நிறைந்ததாகவும் பேணிக்கொள்வதற்கு உதவியது. ஆனால் மிதிவாதிகளுக்கு விருப்பம் மிதமாக இல்லாவிடினும் உள்ளதையாவது பெற்றுக் கொள்வதற்கு இந்த இலட்சணத்தில் அணுகியவர் கிருஷ்ணா 13+ அணுகு முறையை பிரஷ்தாபித்தவர் ஜனாதிபதி. ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதியே பொருட்படுத்திக் கொள்ளாதிருக்கும் நிலையில் ஒரே முகாமுக்குள் இருந்தும், பிற முகாம்களுக்குள் இருந்தும் பொருள் கோடல் தேடி அலைகின்றனர் அரசியல்வாதிகள். காணி, காவல் துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்று கூறுகின்ற முக்கியஸ்தர்களிடையே துலங்குவது யாதெனில் அத்தகைய அதிகாரங்கள் முறையாக பகிரப்படவில்லை என்பதை எடுத்தியம்புகின்ற யதார்த்தமாகும். ஆனால் 13 ஆவது திருத்தத்தின் கீழ் சுமாரானளவுக்கு காவல் துறைஅதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் மாகாணங்கள் தத்தமது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை செய்யும் வகையில் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்  தலைமையில்  ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு மாகாண பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, மாகாண  முக்கியஸ்தர்களின் கூற்றுப் படி மேற்படி ஒரு கட்டமைப்பு உள்ளபோதிலும் தன்னிச்சையான மாகாண பொலிஸ் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதில்லை என்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பிலான  காவல்துறை அதிகார ஆற்றுப்படுத்துகைக்கு வாய்ப்பே இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அதேவேளையில் காணி தொடர்பிலான அதிகாரங்கள் தாராளமானதாக இல்லை என்றும் மத்திய அரசாங்கம் அது சரியென கருதும் பட்சத்தில் மாத்திரமே காணி எல்லைகள் வரையறுத்துக் கூறும் அதிகாரம் மத்திக்கே இருந்தது. 

எதிர்பார்க்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் இது இருந்தது என்றாலும் குறித்த காணி தொடர்பான சீர்திருத்தம் வெளிச்சம் காணவில்லை. நாட்டின் தென்பகுதியிலுள்ள மாகாணங்களின் முதலமைச்சர்கள் தத்தமது பிராந்தியங்களுக்கு கூடுதலான அதிகாரம் தேவை என்று கூக்குரலிட்ட சந்தர்ப்பங்களும் இருந்திருக்காமலில்லை. என்றாலும் சமகால முதலமைச்சர்கள் அப்படி அதிகாரம் ஒன்று தேவையற்றது என்ற கோதாவிலேயே கருத்துக் கூறியுள்ளதைக் காண முடிகிறது.  

அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் அமைந்ததாக இருக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் ஒரு தனிச் சமூகத்தை சாந்தப்படுத்தும் வகையில் அதிகாரப் பகிர்வு இடம்பெறாமல் சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அது செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய அந்த முதலைமைச்சர் தற்போதுள்ள அதிகாரங்களை வைத்துக்கொண்டே மக்களுக்கு சிறந்த சேவையாற்றலாம் என்று கூறத்தவறவில்லை. காணி, காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் கூட மாகாண சபைகள் சிறந்த சேவைகளை ஆற்ற முடிந்துள்ளதாகவும் தேவைப்படுவதெல்லாம் போதியளவு பணமே என்று தெரிவித்த அவர் ஜனாதிபதியினதும் கட்சியினதும் கொள்கைகளுக்கு இணங்கி செயற்பட தயாராக இருப்பதையும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடையே 13+ என்றால் என்னவென்று பொருள் கோடல் தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே “கடூதண்“ (மேலும் ஒன்று) என்கின்றபோது 13 ஆவது திருத்தத்துடன் அல்லது 13 ஆவது திருத்தத்தையும் விட கூடுதலாக அல்லது மிகையாக எனக் கூறிக் கொள்ளக் கூடியதாக இருப்பினும் 13 க்கே ஒப்பிடுகின்றனர் நோக்கர்கள். தகவலளிக்கும் உரித்துடையோர் குறித்த விடயம் பற்றி குறிப்பிடுகையில் அது செனட் சபை என்று சிலாகிக்கின்றனர். 

வேறு சிலர் செனட் சபைக்கு மறுதலையாக வியாக்கியானம் அளிக்கின்றனர். கட்சிகள் சார்ந்தோர் 13+ என்றால் என்ன என்று அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் விளக்கம் கோருகின்றனர். தமிழ்க் கூட்டமைப்பினரோ ஜனாதிபதி உறுதிமொழியிலிருந்து விலகிவிட்டதாக பகிரங்கமாக் கூறிவிட்டு 13+ அணுகு முறை தொடர்பில் கேட்டு உரைத்த இந்திய வெளியுறவு அமைச்சரும் உள்ளிட்ட அந்த நாட்டு அரசங்கத்திடமே விளக்கமும் பொருள் கோடலும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கத்தை நாடிச் செல்வதைப் பற்றி யோசிப்பதாக அறியக்கிடக்கிறது.  செனட் சபை நியமனத்தையும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பெயர் குறிப்பிடுவதையும் எதிர்க்கும் கூட்டமைப்பு இவ்விரண்டையும் செய்து பாருங்களேன் என்று இந்தியாவின் கோரிக்கைக்குள்ளாக்கமாட்டாது என்றும் கூறுவதற்கில்லை. அதேநேரம் இவற்றை நிராகரிக்கும் கூட்டமைப்பு இது தொடர்பான தங்களது கருத்துகளை அரசாங்கத்துக்கு அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது இவ்வாறிருக்க அரசியலமைப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது  திருத்தம் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை அடியொற்றியது. மாகாண சபை களைத் தோற்றுவிக்கும். சட்ட ரீதியான அந்தஸ்தை வழங்கியது. இரு மாகாணங்களான  வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை தோற்றுவித்தது. 2006 இல் வடக்கு , கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானதும் வெற்று வெறிதானதுமாகும் என்று உயர்  நீதிமன்றம் பிரகடனப்படுத்தும் வரை தற்காலிகமாகவே இணைந்திருந்தது.  மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விடயங்கள் "மாகாண சபை நிரலிலும்' மத்திய அரசாங்கத்துக்கு என ஒதுக்கப்பட்ட அதிகார தலைப்புக்கள் "ஒதுக்கிய நிரலிலும்' பாராளுமன்றத்தின் அனுமதிபெறப்பட்டு கையாள வேண்டிய அதிகார விடயங்கள் புறம்பான ஒரு ஒருங்கியை நிரலிலும் காண்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இவரது கருத்தோடு உடன்பட முடியாதிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தின் படியான மாகாண சபைகள் அமைப்பு வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் வழங்கப்படவில்லை. இது போன்று சமகால காணி,பொலிஸ் அதிகாரப் பகிர்வுக்கோரிக்கை நிறைவேறுமானால் அது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ற போர்வைக்குள் அகப்படாது அவ்வாறு செய்யவும் முடியாது. அதிகாரச் சமநிலைக்கு குந்தகம் உண்டுபண்ணி அடிப்படை உரிமை மீறலுக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில்  தனியொரு  சமூகத்தை சாந்தப்படுத்தும் என்ற வாதத்தை நியாயப்படுத்த முடியாது. 

இதே மாதிரியான கருத்தையே கூறியுள்ள இன்னுமொரு முதலமைச்சரிடையே மற்றுமொரு முதலமைச்சர் எத்தகைய உடன்பாடுகள் கண்டடையப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரியாத நிலையில் அது தொடர்பான  விடயங்களை வாசித்தறியாமல் கருத்துக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளதையும் அறியமுடிகிறது. 

இவைகள் இவ்வாறுள்ள போதிலும் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி தொடராக வழங்கிய இந்தியப் பத்திரிகைகளுடனான பேட்டியில் மறை பொருளின்றிய கூற்றுக்களில் குறிப்பிட்டதாவது உத்தரப் பிரதேச மாநிலத்தில் வைத்து முதலைமைச்சர் மாயாவதியின் பணிப்புரையின் பேரில் ஆளும் கட்சி அரசியல்வாதியான ராகுல் காந்தி மாநிலப் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டதை ஏன் காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்பதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டினார். குறித்த அதிகாரங்களை வழங்குவதில் அச்சமும் குடிகொண்டுள்ள நிலையில் 13+ க்கு தற்போது ஜனாதிபதி இணங்கியதாக கதை தொடர்கிறது. நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு இருக்கக் கூடிய  ஒரே ஒரு  பக்கவாத்தியம் 13+ அமுலாக்கத்துக்கோ, இணக்கப்பாடுகளை எட்டுவதற்கோ கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்பதாகும். 

எவ்வாறாயிலும் 13+ உள்ளடக்குவது என்ன என்பதில் சரியான தெளிவு இல்லை. தற்போதுள்ள 13 ஆவது  திருத்தம் தொட்டுக்காட்டுமளவுக்கு  காவல்துறை அதிகாரங்கள்  வழங்கியுள்ளதாக கூறப்படுகின்ற அதேநேரம் காணி அதிகாரங்கள் சற்றேனும் வழங்கப்படவில்லை என்றாலும் எவ்வாறு அரசாங்கம் 13+ ஐ கையாளப்போகிறது என்பது ஒரு கேள்வி மாத்திரமன்றி பொருள் கோடல் தேடலுக்கான சந்தர்ப்பத்தையும் தோற்றுவித்துள்ளது எனலாம். 

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment