சென்ற வாரம் இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக ஏற்கனவே கணிசமானளவு அறிக்கைகளும் அபிப்பிராயங்களும் வெளியாகியுள்ளன. கிருஷ்ணா கொழும்பு வந்து சேர்ந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழுவினருடன் கலந்துரையாடியபோது தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி தொடர்பில் அரசுடன் ஒருவருட காலமாக நடத்திய பேச்சு வார்த்தைகளோ அரசின் பொதுவான அணுகுமுறையோ எதுவித பயனுமற்றதென்று த.தே.கூ. பிரதிநிதிகள் தமது அதிருப்பதியை கிருஷ்ணாவிடம் தெரிவித்தனர். ஆயினும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு உண்டு என்று கிருஷ்ணா இலங்கைக்கு வரும் போது வைத்திருந்த நம்பிக்கை கலையவில்லை என்றவாறாகவே கிருஷ்ணா பின்பு தெரிவித்த கருத்துகள் அமைந்திருந்தன எனலாம். உண்மையில் இப்பிரச்சினை தொடர்பாக இலங்கைஇந்திய இரு அரசாங்கங்களுமே இதய சுத்தியாகச் செயற்படவில்லை என்பதில் ஐயம் இருக்க முடியும்.
அரசாங்கத்தின் கொடாக்கண்டன் நிலை
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரை சிங்கள கடும் போக்காளர் நிலைப்பாட்டிற்கமையவே சிங்கள பௌத்த மேலாதிக்கவாத கொடாக்கண்டன் நிலையில் மாற்றம் காணப்படவில்லை. ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டின் நீண்ட கால நன்மை பற்றி சற்றேனும் கவலையின்றி கடன்பளு தலைக்கு மேல் விரைந்து வந்து கொணிடருக்கின்றதே என்பதைப் பற்றிக் கவலையின்றி தமிழரை தமிழ்ப் பெரும்பான்மை பிராந்தியத்திலேயே மட்டற்ற படை பலத்தோடு நிரந்திரமாக அடக்கியாளும் மேலாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட முடியாமலுள்ளது. அது மட்டமல்லாமல் அண்மையில் டெக்கான் குரோனிக்கிள் நிருபர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்த போட்டி வெளியாகிய பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வரைந்த கட்டுரையொன்றில் இலங்கை ஜனாதிபதி சீனாவின் மடியிலிருந்து பேசுவதாக குறிப்பிட்டிருந்தார்.
மறுபுறத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் விடயமாக இந்திய அரசாங்கம் தனது பூகோள நலன்களை கருத்திற் கொண்டு ஒரு வகையான கையாலாகாத்தனத்தில் உள்ளதைக் காணலாம். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மட்டுமீறிச் செல்லும் நிலையில் இந்தியா கவலையடைந்திருப்பதைக் காணலாம்.
த.தே.கூ. பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கு பற்றுவதற்கு பெயர்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும் என்று கடந்த மாதங்களில் அச்சுறுத்தி வந்த போதிலும் பேச்சு வார்த்தைகள் முற்றுப்பெறாமல் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் கிருஷ்ணா இலங்கையில் இருந்த சமயம் பார்த்து இம்மாதம் 16 ஆம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு குறிக்கப்பட்டிருந்த அரசு த.தே.கூ. பேச்சுவார்த்தைகள் அரச தரப்பால் ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது சிங்கள கடும்போக்காளர்கட்கு மட்டற்ற மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சொந்தக்காரர் இந்தியாவுக்கும் இது ஒரு மறைமுகமான பாடம் புகட்டப்பட்டதாகவே இதனைக் கொள்ள வேண்டும். பாரதூரமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை ஒருதலைப் பட்சமாக கைகழுவி விடுவது இலங்கை அரசாங்கங்களின் கறைபடிந்த வரலாறாகும். இவ்வாறு தான் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் (1958), டட்லிசேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் (1956) ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.
"செனட்' தான் +
கிருஷ்ணா கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய பின் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் வெளிப்படுத்தியதானதொரு நம்பிக்கை கேலிக் கூத்தானதாகும். அதாவது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வுக்குத் தயாராயிருப்பதாக உறுதியாக கூறியதாக அறிவித்தார். இந்த + எனப்படுவதில் உள்ளது யாது? தமிழர் வேண்டி நிற்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலான சுயாட்சி கட்டமைப்பு அல்லவே அல்ல. அதனை ஜனாதிபதி ராஜபக்ஷ பின்பு தெளிவுப்படுத்திவிட்டார். இதனை அவர் ஐ.தே.க. சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவிடம் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆக இந்த + என்பது தமிழருக்கு மட்டுமல்ல யாருக்கும் பயன் ஏதுமற்ற செனட் அல்லது மூதவையாகும். இது ஒரு வகையில் புதிய மொந்தையில் பழைய கள் என்றே சொல்லலாம். நாடு 1948 இல் சுதந்திரமடைந்தபோது பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர்கள் பிரதிநிதிகள் சபையினர் அல்லது கீழ் சபையினர் என்றும் நியமிக்கப்படும் 30 மூத்த அறிஞர்கள், கல்விமான்கள், பிரபல சமூக சேவையாளர்கள் போன்றோர் கொண்ட செனட் அல்லது மூதவை என்றழைக்கப்பட்ட மேல் சபையாகும். தற்போது உத்தேசிக்கப்படும் செனட் சபையானது வடக்குதெற்கு மாகாண சபை பிரதிநிதிகள் கொண்ட அதிகாரமேது மற்ற ஆபரணமாகும்.
இதற்கிடையில் கிருஷ்ணா 18.01.2012 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் உண்மையான அதிகாரப் பகிர்வின் அவசியத்தை வலியுறுத்திக் கூறியதாகவும் அரச த.தே.கூ. பேச்சு வார்த்தைகள் தடைப்பட்டுள்ள போதும் தீர்வு வருமென இந்தியா நம்புவதாகவும் கூறியது ஒரு கொச்சையான ஏமாற்று வித்தை எனலாம். இவற்றையெல்லாம் தமிழர் நம்புவார்கள் என்று இந்திய ஆட்சியாளர் நினைத்தால் அது நிச்சயமாக முட்டாள் தனமாகும். யுத்தத்தினால் நலிவுற்ற மக்களுக்கு வீடுகள் துவிச்சக்கர வண்டிகள் அவசியம் தானாயினும் அவற்றுக்கு தமிழர் தமது பங்குடைமையான அரசியல் அதிகாரத்தையும் இறைமையையும் அடகு வைக்க மாட்டார்கள் என்பதை இந்திய ஆட்சியாளர் மனங்கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக் குழு மூலமே தீர்வு
இன்று பாராளுமன்ற தெரிவுக் குழு (பா.தெ.கு) மூலமே தேசிய இனப் பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் எட்டப்பட வேண்டும் என்பது தான் ராஜபக்ஷ அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடாயுள்ளது. இதுவும் ஓர் இழுத்தடிப்பு தந்திரோபாயமே ஒழிய வேறல்ல. சரி 1990 களில் செயற்பட்டதாகிய மங்கள முனசிங்க பா.தெ.கு. அறிக்கையையாவது புரட்டிப் பார்க்கக் கூடாதா?
சென்ற வியாழன் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல பதிலளிக்கும் போது அசாங்கமானது ஜனநாயக விழுமியங்களை பெரிதும் பேணி நடந்து வருகின்றது போன்ற விலாசத்தில் பதிலளித்தார். அதாவது அரசாங்கம் தீர்வு எதையும் தொண்டையில் திணிக்காமல் தெரிவுக் குழு யோசனைகளின் அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். + என்பதன் உள்ளடக்கத்தில் செனட் சபை அமைப்பதும் ஒன்றாகும் என ரம்புக் வெல கூறியுள்ளார். வேறு பிரதானமான எதுவும் பா.தெ.கு. ஊடாக வெளிக்கொண்டுவரப்படும் என்பதற்கில்லை. ஆக பா.தெ.கு. வின் முடிவு + செனட் காணி, பொலிஸ் அதிகாரம் என்று வெகு எஹிதாக எதிர்வு கூறிவிடலாம். ஏனென்றால் காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பாக அரசாங்கம் புதிதாக எவ்விதமான தீர்மானத்தையும் மேற்கொள்ளாது. ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது என்று அமைச்சர் ஹெகெலிய ரம்புக் வெல தெளிவாகக் கூறியுள்ளார். எதை ராஜபக்ஷ அரசாங்கம் செய்து வருகின்றதோ அதையே அரசாங்கம் செய்யாது என்று ரம்புக் வெல ஒரு மூடுதிரை போடுகின்றார். அதாவது அரசாங்கம் எதேச்சையாகத் தீர்வைத் திணிக்கவே மாட்டாது என்று அவர் சொல்வதை வேறு என்னவென்று கூறுவது?
மற்றும் வழக்கமான வாய்ப்பாடாக த.தே.கூ. மீது ரம்புக் வெல விளாசியுள்ளார். கூட்டமைப்பு அடிக்கடி தடம் புரள்கிறது. புலி ஆதரவுப் போக்கைக் கொண்டுள்ளது. அதன் செயற்பாடு பங்கரவாதப் போக்குடையதாகவுள்ளது. அதன் நிபந்தனைகளுக்கோ அழுத்தங்களுக்கோ அரசு அடிபணிய மாட்டாது என்று அவர் அடித்துக் கூறியுள்ளார். இத்தகைய அரசியல் கலாசாரம் இலங்கையின் ஆளும் வர்க்கங்களை பீடித்துள்ள தீராத வியாதியாகும். இதற்கு விடை கொடுத்து அவர்கள் நாட்டு நலனுக்கு நிபந்தனையுள்ள அந்த பீடையிலிருந்து விடுதலையடையவேண்டும்.
"தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின் என் குற்றமாகும் இறைக்கு' என்கிறார் வள்ளுவர்.
இத்தகைய உன்னதமான விழுமியங்களின் மீது தான் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்ட வேண்டுமே ஒழிய ஆள்பவர்களின் சொல்லும் செயலும் கடிவாளமற்றவையாயிருப்பது தீமை பயக்கும். நிற்க, கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தை அடுத்து த.தே.கூட்டமைப்பு இந்தியா விரைகிறது. பிரதமர் மன் மோகன் சிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. கடந்த காலத்தில் பல தடவைகள் டில்லி சென்று மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களுடன் தமிழ்த் தலைமைகள் கலந்துரையாடிவந்தனராயினும் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எதுவும் எட்டவில்லை. எனவே நம்பிக் கெட்டது போதாதா என்றே கேட்கத் தோன்றுகிறது.
திட்டமிட்ட புறக்கணிப்பு
ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கையை பொறுத்தவரையில் கூட அரசாங்கத்தின் அலட்சிய மனோபாவம் வேரூன்றி வருவதைக் காணலாம். உதாரணமாக அண்மையில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு த.தே.கூ. திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கண்டன அறிக்கையொன்றை விடுத்திருந்தனர். பாராளுமன்றம் கூடும் நாட்களில் அபிவிருத்திக் கூட்டம் கூட்டப்படுவது குளறுபடியான கடிதப் பரிவர்த்தனை போன்ற தில்லு முல்லுகள் கையாளப்படுவதன் மூலம் தாம் அபிவிருத்தி கூட்டங்களில் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பற்று போவதாகவும் சில அமைச்சர்களே அதன் சூத்திரதாரிகளெனவும் அவர்கள் தமது அறிக்கையில் கடிந்துள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பாரிய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அல்லலுறும் இலட்சக்கணக்கான மக்கள் சார்பாக உழைக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அத்தகைய நய வஞ்சகம் காட்டப்படுமானால் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை அணிதிரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் என்பார்கள். எனவே காத்திரமான கவன ஈர்ப்பு வீதிப் போராட்டங்களை நடத்துவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தலைமைகள் நழுவ விடக்கூடாது.
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment