பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்


31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் .

பிரியா என் அன்பு நண்பனே உனக்கு என் வீர வணக்கங்கள்..ஈழப்பிரியன்… ஆரம்பத்தில் இருந்தே.. அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன்.

மெய்ப்பாதுகாவலனாக….
தனிப்பட்ட உதவியாளனாக..
கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக…
அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக,
பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக..
வினியோக அணி பொறுப்பாளனாக..
முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக…
இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக…..
எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்…
கிளினொச்சி உருத்திர புரம்தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர்.. அவனது தம்பி திருமணம் முடித்துவிட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது மிகம்.. பழுத்த மிழகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்றுவிடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்..
நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை.
உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல்கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது.
எந்தப்பணி ஆனாலும் தெரியாது, ஆல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான்.
ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான்..
அதனைவிட அரசியல் துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும்.. அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார்.
குறிபிட்ட ஒருவரை தமிழ்செல்வண்ணர் கூட்டிவரச்சொன்னால்.. அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டுவந்து சேர்த்திடுவான்.
கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான்.
தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை.
ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்..
இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி.
எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான்.
உண்மையில் ஈழப்பிரியன் என்ற போராளி.. இயக்கத்திற்கு ஒரு கொடை.. ஏனென்றால் அவனிற்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.. தன் பாட்டில் யோசித்து செய்து கொண்டே இருப்பான்..
நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம்.
சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவைக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே.
அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூனகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான்… அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு.. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை.. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி.. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன்.
முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான்.. என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)…
ஆனால் அவன் தளபதி ஆனதும்… நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று.. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி… என்று அங்கால தூசணத்தால்.. ஒன்று விடுவான்.
பெண்போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும்.. அவ்வளவு வெட்கம்.. பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப்.
இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும் , பூனகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான்.. அப்போது எம்முடன் பேசினான்.
யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன்.. கடலால இறங்க விடமாட்டேன் என்றான்…
உண்மைதான்.. அவன் இறங்கவிடவில்லை.. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூனகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது.
இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான்.
அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான்.
ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான்.. சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்..
கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே..
எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம்….. டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள்.. எங்களை விட வலிமை உடையவர்கள்.. உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை .. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள்.. எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.. நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே..
பாசறை நண்பர்கள் உமை…வேலன்.

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment