குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட காதல் வயத்தால் நடந்த விபத்து அது.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இருந்தும் பெற்றதன் குழந்தையை வளர்ப்பேன் என்று குந்தி சபதம் செய்திருந்தால் அது ஒரு புதுமையாக இருந்திருக்கும். எனினும் பழிக்கு அஞ்சி தான்பெற்ற குழந்தையை பேழையில் வைத்து ஆற்றிலே விடுகிறாள் குந்தி என்று பாரத இதிகாசம் சொல்கிறது. கதையில் துயரம் இருந்தாலும் கர்ணன் துரியோதனனுடன் நட்புக் கொள்வதும் கர்ணனை அங்க தேசத்தின் அதிதியாக்கும் துரியோதனனின் செயலும் குந்தியுடன் ஒப்பிடும் இடத்து உயர்ந்து நிற்பதை உணரமுடியும். அதிலும் இன்னுமோர் சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை கர்ணனும் துரியோதனனின் மனைவியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் துரியோதனன் வருகின்றான். அதனைக் கண்ட அவனின் மனைவி எழுந்து நிற்க முற்பட, துரியோதனின் வரவை அறியாத கர்ணன் அவளைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவள் ஆடையைப் பற்றி இழுக்கின்றான். ஆடையை இழுக்க அதிலிருந்த முத்துமணிகள் சிதறுகின்றன. இதனைத் துரியோதனன் அவதானிக்கின்றான். அந்த அவதானிப்பை கர்ணனும் கண்ணுற்றான்.
நிலைமை இப்போது மோசமாகிறது. இந்த இடத்தில்தான், துரியோதனன் நிலைமையை சுமுகப்படுத்துகின்றான். கர்ணா! சிதறிய மணிகளை எடுக்கவா? கோர்க்கவா? என்று கேட்கின்றான். எடுத்தல் என்பதற்கும் கோர்த்தல் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஆடையில் இருந்து நிலத்தில் சிந்திய மணிகளை எடுக்கும்போது துரியோதனனின் மனதில் இருக்கக்கூடிய சலனத்தை அறிவது கடினம்.
ஆனால், எடுத்த மணிகளை ஊசியால் நூலில் கோர்ப்பதென்பது நிதானத்துடன் சம்பந்தப்பட்டது. தன் மனைவியின் ஆடையை கர்ணன் பற்றி இழுத்ததால் துரியோதனன் மனம் குழம்பி இருப்பானாயின், அவனால் மணிகளை நிதானமாகக் கோர்க்க முடியாது. ஆக, கர்ணா! நீ கலங்காதே! உன் செயலால் நான் இம்மியும் சலனப்படவில்லை என்பதை எடுத்தியம்பவே, எடுக்கவா? கோர்க்கவா? என்று கேட்டான்.
துரியோதனனின் சலனமற்ற மனத்திடத்தையும், இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டங்களுக்கான செயல் முறைகள் பற்றியும் நினைக்கும் போது, இலங்கை அரசின் சலனம் தாராளமாகத் தெரிகிறது. அதனால்தான் பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு, செனட்சபை என்ற பிதட்டல் தொடர்கிறது.
சலனத்துடன் இருக்கும் எவராலும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதும், அந்த மனநிலை பிரச்சினையை மேலும் மோசப்படுத்தும் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment