தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் என்று வரும் போது தற்போதைய சூழ்நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய அல்லது தொடர வேண்டிய அவசியத்தைக் கொண்டவையாக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே அதிகாரப் பரவலாக்கத்துடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்களில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளே அமைந்திருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வில் பங்கும் ஈடுபாடும் கொண்ட வேறு தரப்புகள் இருக்கின்ற போதிலும், அவை தற்போதைய சர்ச்சையில் சம்பந்தப்படாமல் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வருடம் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் குறித்து அக்கறையுடன் ஆராய வேண்டிய நிலை வந்தபோது அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது. கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் எட்டப்படக்கூடிய எந்தவொரு இணக்கப்பாட்டையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைத்து ஏனைய தரப்பினரும் ஆராயக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் இணங்கியிருந்தது என்பதில் எந்தவிதமான இரகசியமுமேயில்லை. தாங்கள் அவ்வாறு இணங்கிக் கொள்ளவில்லையென்று அரசாங்கத் தரப்பினர் ஒருபோதுமே மறுதலிக்கவில்லை.
ஆனால், இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டுமானால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு அதன் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை அரசாங்கம் விதிக்கத் தொடங்கியதையடுத்தே முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சர்வதேச சக்திகளும் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கின்ற போதிலும் கூட, அரசாங்கம் அதன் நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்குத் தயாராயில்லை. தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பு முன்வராத பட்சத்தில் அதனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்று அரசாங்கம் அடித்துக் கூறிக்கொண்டிருக்கிறது.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் பொறுப்புடைமை குறித்து கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக சர்ச்சைகளைக் கிளப்பிவந்திருக்கும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக, அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நிலைப்பாடுகளில் கணிசமான அளவுக்குத் தளர்வுகளைச் செய்து, இலங்கையில் சமூகங்கள் மத்தியில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைப்புத் தன்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டிய வண்ணமிருக்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகளிலும் கண்டுபிடிப்புகளிலும் இருக்கக்கூடிய பெருவாரியான குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டுமென்றும் இந்த நாடுகள் வேண்டுகோள் விடுத்தவண்ணமிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசாங்கம் மசிவதாக இல்லை. அது முன்னைய நிலைப்பாடுகளில் ஆழக்காலூன்றி நிற்கின்றதே தவிர, விட்டுக் கொடுப்புகளை சிறிதளவேனும் செய்து சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத் தயாராயில்லை.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயன்முறைகளில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுக்கவில்லை. அரசாங்கம் தங்களுக்கு அளித்த உறுதிமொழியின் பிரகாரம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய எந்தவொரு இணக்கப்பாட்டையும் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கும் கட்டத்தில் அதில் பங்கேற்கத் தயாராயிருப்பதாக கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். மறுபுறத்திலே இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான சகல வழிவகைகள் குறித்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் மாத்திரமே ஆராய முடியும் என்று கூறுகின்ற அரசாங்கம் எந்தெந்த விவகாரங்களில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்யவோ பகிர்ந்தளிக்கவோ முடியாது என்று முக்கிய அமைச்சர்களும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் எழுந்தமானமாகப் பிரகடனங்களைச் செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களுக்கு எதைக் கொடுக்கக்கூடாது என்று கூரைமுகட்டில் ஏறி நின்று எவர் வேண்டுமானாலும் கூச்சலிடலாம் அது பிரச்சினையில்லை. ஆனால், அதேமக்களுக்கு அவசியமானவை எவையென்று ஜனநாயக வழியில் கோரிக்கையை முன்வைப்பது மாத்திரம் தான் நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தலானதாக அரசாங்கத் தலைவர்களின் கண்களுக்குத் தெரிகிறது.
இத்தகையதொரு பின்புலத்திலே முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு வழியென்ன என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்துடனான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணிக்கு சர்வதேச உதவி கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள் . அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்க அமைச்சர் அலிசா அய்ரெலைச் சந்தித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனுசரணையாளராகச் செயற்படுமாறு அமெரிக்காவைக் கேட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஐக்கியநாடுகள், பொதுநலவாய அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் அனுசரணையை கூட்டமைப்பு வரவேற்பதாகவும் இதுவிடயத்தில் தங்களது விருப்புக்குரிய தெரிவு என்று எதுவும் இல்லை என்றும் அதன் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
ஆனால், கூட்டமைப்பின் தற்போதைய உள்நிலைவரங்களை நோக்கும் போது இத்தகைய அனுசரணை நாடும் நிலைப்பாடு அங்கத்துவக் கட்சிகளின் ஏகோபித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. அது வேறு விடயம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் கூட்டமைப்பு காட்டுகின்ற தயக்கத்துக்கு அடிப்படைக் காரணம் இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றில் இதுகாலவரையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக் கொண்டு கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடுகளுக்கும் வட்டமேசை மகாநாடுகளுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் நேர்ந்த கதி பற்றிய தமிழ் மக்களின் கசப்பானதும் கனதியானதுமான அனுபவங்களேயாகும். போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தோன்றியிருப்பதாக அரசாங்கத் தலைவர்கள் கூறுகின்ற புதிய அரசியல் சூழ்நிலையில் அந்த பழைய விடயங்களை மறந்து புதிதாக சிந்திக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தும் அரசாங்கம் பழைய ஆழக்காலூன்றிய நிலைப்பாடுகளில் இருந்து கிஞ்சித்தும் விலக மறுப்பதில் எந்த அசௌகரியத்தையும் காண்பதாக இல்லையே!
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment