இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருக்கக்கூடிய சர்வதேச அழுத்ததத்தை தகுந்தமுறையில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை கூறித்தான் ஆக வேண்டும். குறிப்பாக எங்கள் பிரச்சினையில் அதிக அக்கறைகாட்டிய அமெரிக்காவின் உதவியைப் பெறுவதில் தமிழ் அரசியல் தலைமைகள் கரிசனை காட்டவில்லை என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
உண்மையில் அமெரிக்காவின் தலையீடு, அதன் அழுத்தம் என்பவற்றின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கும். இந்தியாவிடம் இலங்கை அரசு பேசுவது போல அமெரிக்காவிடம் பேசமுடியாது. அதேநேரம் ஈழத்தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைப்பதில் இந்திய மத்திய அரசு நூறு வீத விருப்புடன் செயல்படும் என்றும் கூறிவிட முடி யாது.
ஈழத்தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வானது தமிழக மக்களை எந்த வகையிலும் உசார்படுத்துவதாக இருத்தலாகாது என்பதில் இந்திய மத்திய அரசு மிகவும் நிதானமாக இருக்கின்றது. எனவே, இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை ஈழத்தமிழ் மக்களின் உரிமை என்பது இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்படுகின்றது.
அதேநேரம்இ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாகாது என்பதிலும் இந்திய மத்திய அரசின் உறுதி நிலையை அதன் செயற்பாடுகளில் இருந்து உணரமுடியும். இருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவை மலையாக நம்புகின்றது. அதே நேரம், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுடன் இருந்த தொடர்பை ஜெயலலிதாவின் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதும் தெளிவு. கலைஞர் கருணாநிதி எங்கள் பிரச்சினையில் நடித்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா விரும்பியோ விரும்பாமலோ எங்கள் நிலைவரம் தொடர்பில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தனது பற்றுதலை பகிரங்கப் படுத்தினார்.
எனினும் எங்கள் தொடர்பில் தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதாவின் தற்போதைய நிலைப்பாடு தாழ்நிலையிலேயே உள்ளது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திருப்திகரமான தொடர்பாடலை கொண்டிருக்கவில்லை என்றே கூறவேண்டும். இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலிறுத்த வேண்டுமாயின் அதனை தமிழக அரசும் தமிழக மக்களுமே செய்தாக வேண்டும். எங்கள் கோரிக்கைகளை விட தமிழக மக்கள் விடும் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் இருக்கமுடியாது.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எஸ்.எம். கிருஸ்ணாவைச் சந்தித்த பின்னர் பெரிய இடத்தைப் பிடித்துவிட்டோம் இனி எதற்கு தமிழக அரசு என்று நினைக்கிறது போலும். எதுவாயினும், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை துரிதப்படுத்துமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு சதா நச்சரிப்புக் கொடுத்தால் மத்திய அரசு ஏதோ செய்தாக வேண்டும் என்ற முடிபுக்கு வரும்.
இதைவிடுத்து அங்கும் இங்குமாக அலைந்து இறுதியில் வெறுங்கையாகிக் கொள்வது புத்தி சாலித்தனமான செயல் அல்ல.
நன்றி - வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment