தமிழர் விவகாரத்திற்கு உரிய தீர்வினை காணத் தவறியதன் விளைவே அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. இந்த உண்மை ஒன்றும் பரமரகசியம் அல்ல! ஆனால் ஆட்சி பீடமேறிய எந்த அரசாங்கமும் இதை உணர்ந்ததாகவோ அல்லது வரலாற்று ரீதியான இந்தப் பாடத்தை எவரும் கற்றுக் கொண்டதாகவோ தெரியவில்லை.
தமிழர் வரலாற்றில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தின் முப்பது வருடங்கள் அஹிம்சை வழியிலான பயணமாகவும் மிகுதி முப்பது வருடகால ஆயுதப் போராட்டமாகவும் இருந்து வந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் போருடன் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதேயொழிய தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
அண்மையில் கூட யாழ். மறை மாவட்ட ஆயர் உட்பட தமிழ் மக்களின் பல்வேறு தரப்பினர் அரசியல் அபிலாஷை குறித்தே பேசியுள்ளனர். ஆனால் அரசியல் உரிமை குறித்து அரசாங்கம் திட்டவட்டமாக பேச மறுக்கின்றது.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து பாடம் கற்ற அரசாங்கம் பிரச்சினைக்கான தீர்வினை ன்வைத்து ஒரு ன்மாதி யாக நடக்க தயார் இன்றி இருக்கிறது.
ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்த வேளையில் கூட தீர்வினை முன்வைத்து விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட முடியும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை நடைமுறைப் படுத்தியிருந்தால் போருக்கென செலவிட்ட பல பில்லியன் ரூபாய்களை நாட்டின் நலன்நோக்கி திருப்பி விட்டிருக்கலாம்.
ஆனால் தமிழர் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து அதனை சர்வதேச நாடுகளின் உதவியுடன் அழித்து ஒழித்து விடுவதிலேயே தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
இன்றும் கூட தீர்வினை முன்வைத்து புரையோடிப் போயுள்ள இன விவகாரத்திற்கு தீர்வு காணுமாறுதான் தமிழர் தரப்பும் சர்வதேச தரப்பும் கோரி நிற்கின்றன. ஆனால் அரசாங்கம் அதற்கு செவி சாய்த்ததாக இல்லை.
முள்ளிவாய்க்கால் போருடன் “தமிழர் பயங்கரவாதத்தை'' முற்றாக துடைத்தெறிந்து விட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இன்று தமிழர்களின் அரசியல் அபிலாஷை குறித்து உக்கிரமாக குரல் எழுப்பும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர் அபிலாஷை குறித்து பேசுகின்ற தரப்புக்கெதிராகவும் பிரசாரப் போரினையும் உளவியல் போரினையும் இலங்கைத் தரப்பு முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கென பல மில்லியன் ரூபாய்கள் கொட்டப்படுகின்றன. மீண்டும் இவ்வாறு செலவழிக்கப்படும் பணத்தைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான உருப்படியான காரியங்களை நிறைவேற்றலாம் அல்லவா?
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசியல் அபிலாஷை குறித்து குரல்கள் எழும்புவதைத் தடுக்க முடியும். ஆனால், முள்ளிவாய்க்கால் போருடன் துடைத்தெறியப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் பயமுறுத்தாளர்களாக உருவெடுத்து வருவதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை கடந்த 13 ஆம் திகதி “டெய்லி மிரர்'' பத்திரிகையில் வெளியாகி இருந்த கார்ட்டூன் வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஒரு புறம் விடுதலைப் புலிகள் மீண்டும் பிறப்பெடுத்து விட்டதாக பிரசாரங்கள் நடைபெறும் அதேவேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையையும் குழப்பும் வகையில் அரச தரப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இறுதியாக கிடைத்துள்ள தகவல்களின்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு தமது சார்பில் பெயர்களை வழங்கவில்லையாயின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அரசாங்கத் தரப்பு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளையில் கிடைக்கும் தகவல்களின்படி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்து பேச முற்படும் எந்த சக்தியும் தமிழ் மக்களிடம் இருந்து எழும்பிவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கை மிக கவனமாக செயற்படுவதாகவும் தெரியவருகின்றது.
மொத்தத்தில் தமிழ் மக்களிடமிருந்து அவர்களின் அரசியல் அபிலாஷை குறித்து பேசுவதற்கு எந்தச் சக்தியும் மேல் எழுந்து வந்தவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கையின் முக்கிய சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தென்னிலங்கையின் இந்த நிலைப்பாடு தமிழர் தரப்பால் சரிவர உணரப்பட்டதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் அரசியல் அபிலாஷைகளற்ற வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் “நலமடிக்கும்'' கைங்கரியத்தில் இறங்கியுள்ளன என்று கூறுவதே பொருந்தும்.
தென்னிலங்கை சக்திகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடுகின்ற ஒரு சில தமிழர் தரப்பினரால் தமிழ் மக்களுக்கான உரிமையையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
அரசியல் அபிலாஷை குறித்து பேசுகின்ற தமிழர் தரப்பினரை செயற்படாமல் இருப்பதற்கான முட்டுக்கட்டைகளையும் இந்தத் தரப்பினர் இடுகின்றனர்.
இன்னுமொரு தமிழ்த் தரப்பினர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தால் போதுமென்ற போதனைகளில் இறங்கியுள்ளனர்.
அது மாத்திரமல்ல சர்வதேச மத்தியஸ்த்தையும் பேரினவாதச் சகிகள் போன்று நிராகரித்து தமிழர் தரப்பில் இருந்தே வருவது வியப்பாக இருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் முயற்சியால் தமிழர் விவகாரம் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாக உள்ளக சுயநிர்ணய உரிமைக்கும் சமஷ்டி முறைமைக்கும் அரச தரப்பு இறங்கி வந்தது.
இன்றைய நிலைமை என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு எத்தகையது என்பது குறித்து கூறத் தேவையில்லை. தமிழினம் வீழ்ந்துகிடக்கும் நிலையிலும் அதற்கான பாடத்தை கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பிரிவினைக்குள்ளும் பிளவுகளுக்குள்ளும் மூழ்கி தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது.
மறுபுறம் தென்னிலங்கை சக்திகள் அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் கற்றுக் கொண்ட பாடத்தை கவனத்தில் எடுக்க மறுக்கும் அதேவேளையில் தமிழர் தரப்புக்கு எதிராக மென்மேலும் ஒன்றிணைந்து செயற்பட கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
இன்று பிறந்துவிட்ட பொங்கல் நன்னாளில் தமிழினம் ஒற்றுமையுடன் புதிய விடியலை நோக்கிச் சிந்தித்தாக வேண்டும்.
வி.தேவராஜ்
0 கருத்துரைகள் :
Post a Comment