இலங்கையின் அரசியற் பிரச்சினைகளில் முக்கியமானது, குடியேற்றத்திட்டங்கள் தொடர்பானவை. பிரச்சினைகளின் உருவாக்கத்திலும் குடியேற்றங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்துப் பேசும்போதும் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக இருக்கின்றன.
ஆகவே, குடியேற்றங்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைதான் என்ற மனப்பதிவே எல்லோரிடமும் உள்ளது.
ஆனால், மேற்சொன்ன குடியேற்றத் திட்டங்கள் திட்டமிடப்பட்ட அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாகும்.
இதைவிட இன்னொரு வகையான குடியேற்றங்கள் வடக்கிலே நடந்துள்ளன.
அந்தக் குடியேற்றங்களின் கதையும் நிலையும் வேறானதாகும்.
வடக்கிலே கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றத்திட்டங்களுக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்வார்கள்.
1. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காணியில்லாப் பிரச்சினைக்கும் தொழில் வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வன்னிப்பகுதியில் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக முன்னேற்பாடாக இந்தக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
3. விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக விவசாய செய்கையை வழங்குவதற்காகவும் காணியற்றோருக்கான காணிகளை வழங்குவதற்காகவும் என்ற மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த மூன்று காரணங்களும் ஏதோவகைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோ அல்லது இந்த மூன்றுக்கும் அப்பால் இன்னும் பல காரணங்களோ ஏற்புடையனவாக இருக்கலாம்.
ஆனால், வன்னிப் பகுதிக் குடியேற்றங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது விவசாய செய்கையாகும். இந்த விவசாய செய்கையை மையப்படுத்தியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அதற்கமையவே குளங்களும் நீர்ப்பாசன வசதிகளும் செய்யப்பட்டன.
காணிப்பங்கீடுகள் கூட விவசாய செய்கையை மையப்படுத்தியே வழங்கப்பட்டன. விவசாய செய்கையை மையப்படுத்தியே பிரதானமாக, மேட்டு நீர்ப்பாசன வசதிகள்கூட செய்யப்பட்டன.
நீர்ப்பாசன வசதியில்லாத காணிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டது. அதற்கேற்பவே காணியின் அளவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. அதாவது, தாம் மேற்கொள்கின்ற பயிர்ச்செய்கையின் தன்மைக்கு ஏற்றமாதிரியே அவரவர்களுக்கான காணிகளின் தொகை அமைந்தது.
அதேவேளை, காணிகள் அமைந்த இடமும் இந்த அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.
இவற்றை சரியாகச் சொன்னால், அந்தந்தப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறே காணிகள் தெரிவு செய்யப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவை பகிர்ந்தளிக்கப்பட்ட தோடு பங்கீடும் செய்யப்பட்டன.
அதாவது, அப்போது இந்தப் பயிர்ச்செய்கையை செய்வதன்மூலமாக இவர்கள் தங்களின் வீட்டுக்கும் வருவாயைத் தேடிக் கொண்டனர். அதேவேளை, நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தியை வழங்கி, நாட்டுக்கான உற்பத்திப் பங்களிப்பையும் பொருளாதாரப் பங்களிப்பையும் செய்தனர்.
இவ்வாறான ஒரு பொருளாதாரப் பங்களிப்புக்கும் ஏற்பாட்டுக்குமாகவே இவர்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன. அதற்கமைவாக திட்டமிடப்பட்ட வகையில் காயங்களும் நடந்தன.
இதன்படி சுமார் பத்து, இருபது ஆண்டுகாலம் இந்தக் காணிகளில் ஏற்றவாறான பயிர்ச்செய்கைகளும் செய்யப்பட்டன. அப்போது உழுந்து, பயறு, நிலக்கடலை என்பன தாராளமாகவே வன்னியில் விளைந்தன .
பயிரிடப்படும் போகத்தை ஒட்டி வன்னியில் உழுந்தும் பயறும் எள்ளும் நிலக்கடலையும் எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் தாராளமாகவே கிடைக்கும்.
முன்னர் துணுக்காய், மல்லாவி, முத்தையன்கட்டு, செட்டிக்குளம், வவுனியா, நெடுங்கேணி போன்ற இடங்களில் மலிவு விலையில் உழுந்தையும் பயற்றையும் நிலக்கடலையையும் எள்ளையும் சோளத்தையும் வாங்கலாம்.
கொழும்பிலிருந்தும் நாட்டின் பிற இடங்களில் இருந்தும் இந்த இடங்களுக்கு வந்து இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு செல்வர்.
ஆனால், பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஒன்று போரின்காரணமான மாற்றங்கள். இதனால், விளைச்சல்களை செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் உருவாகின.
அதையும் கடந்து விளைச்சலை மேற்கொண்டவர்கள் இருந்தாலும் அதன் வீதம் குறைவடைந்தது.
அடுத்தது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்கள். இந்த மாற்றங்களால், விலைநிர்ணயம் பெரும் பிரச்சினையாகியது. உற்பத்தியையும் விட விளைச்சலின் மூலமான வருவாய் குறைவாக இருந்தது. இதனால், உற்பத்தியின் வீதம் உற்பத்தியாளர்களின் வீதம் குறைந்தது. அதையும் விட முக்கியமானது, பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைக் குடியிருப்புக் காணிகளாக மாற்றிவருவதே.
குடியிருப்புக் காணிகளாக மாற்றிவரும் இந்த நிலைமை மிகப் பயங்கரமானது.
இதன்மூலம் முன்னர் இந்தக் காணிகளை வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட நோக்கங்கள் முற்றாகவே சிதைக்கப்படுகின்றன.
உழுந்து விளைந்த இடத்தில் இப்போது வீடுகளும் கடைத்தொகுதிகளும் ஆலைகளும் இயந்திரம் திருத்தும் இடங்களும் என்று முற்றாகவே அந்தப் பிராந்தியங்கள் மாறிவிட்டன.
சேனை என்றும் புலவு என்றும் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் ஊர்மனைகளாகவும் சிறு பட்டினங்களாகவும் மாறிவிட்டன. காலமாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று யாரும் சொல்லக்கூடும்.
ஆனால், பிரச்சினை அதுவல்ல. உண்மையும் அதுவல்ல.
மக்களின் பொருளாதார அடிப்படைகளும் தெரிவுகளும் மாறிவிட்டதே இதற்குப் பிரதான காரணம். அடுத்தது, கடந்த முப்பது ஆண்டுகளாக காணியற்றோருக்கான காணிப்பங்கீடுகள் வழங்கப்படாத காரணத்தினால், இருக்கின்ற காணிகளைப் பங்கீடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர்.
இதனால், விளைநிலங்கள் தொழில் மையங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.
இந்த நிலைமை முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்பட்டது. அங்கே இருந்த “செம்பாட்டுத் தரை” என்று சொல்லப்படும் செம்மண் விளை நிலங்கள் குடியிருப்புக்காக மாற்றப்பட்டு விட்டன.
இந்த நிலையைத் தடுப்பதற்காகவே யாழ்ப்பாண மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனாலும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தின் தோட்ட வெளிகள் விளைநிலங்கள், பனந்தோப்புகள் எல்லாமே குடியிருப்புகளாகவும் தொழிற்பிரதேசங்களாகவும் கடை வளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேலும், அவை அவ்வாறே மாற்றப்பட்டும் வருகின்றன.
இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால், அந்தப் பிரதேசத்தின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் மாற்றி சிதைத்து விடுகிறது.
ஊதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, குரக்கன் போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்த மண்ணின் மணத்தைப் போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும்.
அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் பெறுமதியையும் கொண்டிருந்தன.
இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில்துறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன.
ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன.
இதைப் போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாகவும் நீர்நிலைகளாகவும் ஆற்றுப்படுக்கைகளாகவும் இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன.
இதனமூ;லம் வன்னிப் பகுதி ஒரு விவசாயப் பிரதேசம் என்றிருந்த அடையாளம் குலைந்து குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.
“முன்;னர் ஒரு காலம் வவுனியாவில் உழுந்து விதைப்பார்கள்” என்று சொன்னால், அதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது என்றால், இந்த அடையாளச் சிதைவு எந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.
எனவே, இதைப்போல பல்வேறு பிரச்சினைகள் இன்று காணிப்பகிர்வின்மை தொடர்பாகவும் காணியற்ற நிலையினாலும் மாறியுள்ள பொருளாதாரப் போக்கினாலும் மக்களின் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் ஏற்பட்டுள்ளன.
ஆனால், சிலவற்றுக்கு சில அடிப்படைகள் உண்டு. விவசாயத்துக்குப் பொருத்தமான இடங்களில்தான் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம். ஆனால், கடையை எங்கே வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். வீட்டை எங்கே வேண்டு மானாலும் அமைத்துக்கொள்ளலாம்.
இங்கே, இப்படி இந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினையாகிறது. விவசாயத்தை மையப்படுத்தி வழங்கப்பட்ட காணிகள், அந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினை.
இதன் விளைவாக இப்போது அரிசி தொடக்கம், உழுந்து, பயறு, நிலக்கடலை, எள்ளு என எல்லாமே வேறு இடங்களில் இருந்து வரவேண்டியுள்ளது.
குறிப்பாக பங்களாதேஷில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் வரவேண்டியுள்ளது.
அதாவது, நாட்டிற்குத் தேவையான உற்பத்தியையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் காலம் போய், எல்லாற்றுக்கும் வெளியே எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது.
அரசியற் தீர்வை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப் போல இன்று தமிழர்கள் தங்களின் பொருளாதாரத்தை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப்போல, தங்களுக்கான உற்பத்திகளையும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் காலம் வந்துள்ளது.
அதாவது, இது வேர் இழப்பு என்ற நிலையே! இந்த வேர் இழப்பு நிச்சயமாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
அதுவே ஆபத்தானது.
காணிப்பிரச்சினைகள் பல வடிவமானவை. அதில் இதுவும் ஒன்று.
மூலம்: வீரகேசரி - தை 8, 2012
0 கருத்துரைகள் :
Post a Comment