வட, கிழக்கில் இன்று இராஜதந்திர யுத்தம்

காணி அதிகாரம் கொடுக்கமாட்டோம், பொலிஸ் அதிகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூக்குரலிட்டவர்கள் இன்று அதனைப்பற்றி பேசவும் தயார் என்று கூறுகின்றனர். இன்று நடப்பது ஜனநாயக போர் என்பதற்கு அடுத்தபடியாக ஆயுதப் போராட்டம் அல்ல இராஜதந்திரபோர்.இது எங்கள் மண்ணிலே நடைபெற்றுக்கொண்டிருப்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனது விளைவுகள்தான் அரங்கத்தை இன்று அச்சுறுத்தி எங்களுடன் பேசச் செய்கின்றது என தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;


கடந்த 12 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 60 ஆண்டுகாலமாக தந்தை செல்வாவின் இலட்சியத்தின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இலட்சியத்தில் இருந்து தங்கள் மண்ணை தாங்களே ஆள வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடும் திடசங்கற்பத்தோடும் மீண்டும் நாங்கள் இருக்கின்றோம் என்பதை இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் நிரூபித்துள்ளனர்.  இந்த இறுதித் தேர்தல் பற்றி கூறவேண்டுமானால் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் போர்க்குற்றங்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி வடக்குக்கு வந்து முகாமிட்டு ஏற்கனவே வடக்கில் நிலை கொண்டிருந்த முப்படை, பொலிஸ் படைகளின் கட்டமைப்புகள் இந்தத் தேர்தல் காலத்தில் வேட்பாளர்களை அரசுக்காக தேடியிருந்தன. எங்களது வேட்பாளர்கள் புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலை. தேர்தல் தினமான ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்தினமான 22 ஆம் திகதி இரவு முதல் அதிகாலை வரைக்கும் வீடுவீடாகச் சென்று படையினர் எங்களது மக்களை அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதை நீங்கள் அறிவீர்கள். 



ஜனாதிபதி அமைச்சர் பட்டாளத்துடன் வந்து பலகோடி பணம் செலவு செய்து இந்த தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்றிட வேண்டும் என்று சர்வதேசத்துக்கு வடக்கு தமிழ் மக்கள் என்னை ஆதரிக்கின்றார்கள் என்று காட்டுவதற்கான அவசியம் காரணமாக வெற்றிபெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் தேர்தல் சட்ட விதிகளை மீறி ஜனநாயக விழுமியங்களை மீறி ஒரு ஜனாதிபதியே நேரடியாக வந்து வெற்றியை பெறமுனைந்ததை யாவரும் அறிவர்.

அமைச்சின் செயலாளர்களில் இருந்து கிராம சேவகர் உட்பட பொதுமக்கள் அரசாங்கத்தின் தேர்தல் கூட்டங்களுக்கு ஒருவர் 10 பேரைக் கூட்டிவரவேண்டும் என கட்டளையிட்டிருந்தனர்.  இவையெல்லாம் நடந்த பிறகு தமிழ் மக்கள் மிகத்தெளிவாக பருத்தித்துறை தொடக்கம் அம்பாறை வரைக்கும் இடம்பெற்ற அத்தனை தேர்தல் களத்திலும் ஒரே தீர்வாக அரசாங்க ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னத்துக்கு அதன் தேர்தல் அறிக்கைக்கு திடசங்கற்பம் பூண்டு வாக்களித்தனர். உலகம் அதனை மெச்சியது. பல நாட்டுத் தலைவர்கள் எங்களுக்கு புகழாரம் சூட்டினர்.  தந்தை செல்வா கூறினார் கிழக்கு மக்களுக்கு வடக்கு மக்களின் பலத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னரும் தமிழ் அமைச்சர் என்று ஒருவரை முன்னிலைப்படுத்திய பின்னரும் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் அடுத்த தளபதியாக இருந்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேச பக்தனாக மாறி அமைச்சராக இருந்தபொழுதிலும் கிழக்கு மக்கள் வடக்கு மக்களுக்கு ஈடாகவும் அதற்கு மேலாகவும் மிகத்தெளிவாகவே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.

கிழக்கு மக்கள் அவ்வளவு நம்பிக்கையோடு அவ்வளவு திட சங்கற்பமாக வடக்கு மக்களோடு நாங்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். நாங்கள் ஒன்றாகத்தான் ஆளுவோம், ஒன்றாகத்தான் வாழுவோம் என்று மிக தெளிவாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். இது கிழக்கு மக்களுக்கு நன்றி சொல்வதற்காக மட்டுமல்ல வடக்கு மக்களுக்கு ஒன்றை உதாரணமாக எடுத்துச் சொன்னேன். கிழக்கு மக்கள் பல்லின மக்களுடன் வாழும் வேளையில் அவர்களுக்கு வடக்கு மக்களின் பலம் குறைந்து சென்றால் அதனால் வடக்கு மக்களுக்கு சொன்னேன் இன்றைக்கு கிழக்கு மக்களின் எழுச்சி அவர்களுடைய திடசங்கற்பம் வடக்கு மக்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது என்று அன்றே நான் குறிப்பிட்டுச் சொ ன் னேன்.
அந்தளவு படித்தவர் பட்டம் பெற்றவர்களே எமது மக்களை குழப்பிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். தேர்தலிலே நூற்றுக்கணக்காக படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் குவிந்துநின்று போட்டியிட்டுக்காட்டினார்கள். ஆனால், மக்கள் எந்த இடத்திலும் நிலைகுலையாமல் திடசங்கற்பமாக வாக்களித்து வந்துள்ளனர். இந்தியாவின் பிரதமர் எங்களைச் சந்தித்தபோது இத்தனை பேரவலங்களுக்குப் பிறகும் உங்களுடைய மக்கள் உங்களுடன் தான் நிற்கிறார்கள் அதை நான் கருத்திலே கொண்டிருக்கிறேன் எனச் சொன்னார்.

இறுதி உள்ளூராட்சித் தேர்தலிலே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலே முகாமிட்டிருந்த போது நாங்கள் ஒரு கருத்தை முன்வைத்தோம். முள்ளிவாய்க்காலிலே போரிலே வெற்றிபெற்றுவிட்டோம் என்ற சிங்கள மக்கள் மத்தியிலே எக்காளமிட்டிருக்கின்ற ஜனாதிபதி தமிழ் மக்களை ஒரு தோல்வி மனப்பான்மைக்குள் சித்தாந்த ரீதியாக உள்ளாக்கிவிட்டு இவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்று பிரசாரம் செய்து கொண்டு சிங்கள மக்களை உசுப்பேற்றிக்கொண்டு அந்தத்தொனியோடு தேர்தலிலே வெற்றி பெறுகின்றளவுக்கு இருந்ததை நாங்கள் நினைவுபடுத்தினோம். அமைச்சரவைப் பட்டாளத்தோடு இங்கு வந்து தேர்தலில் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். எங்களுடைய மக்கள் அவருக்கு சரியான பதிலை வழங்க வேண்டும் அவரைத் தோற்கடிக்க வேண்டும். தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அரசாங்க ஊழியர்களைப் பற்றி பலர் எங்களுக்கு தவறான அபிப்பிராயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்டிருந்த கண்ணீர் எங்களுக்குத் தெரியும். வடக்கிலிருந்து கிழக்கு வரை 95 வீதத்திற்கும் மேலான அரசாங்க ஊழியர்கள் எங்களுடைய கட்சிக்காக வாக்களித்திருக்கின்றார்கள். 

எமது மக்களில் அவர்கள் முக்கியமான அங்கம். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லியிருந்தோம். நன்றி சொல்வோம். அரசு உங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் என்ன விலை கொடுத்து எங்கள் மக்களை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் எங்கள் மக்கள் ஒரே தாயின் வயிற்றுப்பிள்ளைகளாக இருப்பவர்கள். திடசங்கற்பமாக எங்கள் மண்ணில் நாங்கள் எங்களை ஆள வேண்டும் என்று ஜனநாயக ரீதியாக தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதை தெளிவாக மக்களுக்கும் உலகிற்கும் நாங்கள் சொல்லி வந்திருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற பேரழிவுக்குப் பின் அங்கிருந்து வந்த மக்கள் இராணுவம் சூழ்ந்திருக்க உளவாளிகள் அவர்கள் மத்தியில் நிற்க அந்த முகாம்களுக்கே வந்த மூன்று இலட்சத்து 17 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டிருக்க, மனிதாபிமானமற்ற முறையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் தேர்தல் காலத்தில் கூட அனுமதிக்காத நிலையில்  அரசாங்கம் ஜனாதிபதியும் அவர்கள் மத்தியில் பிரசாரம் செய்தபோதிலும் தனது கணவனை மனைவியை பிள்ளைகளை இழந்தவர்கள் குடும்பம் குடும்பமாக புதையுண்டு போனதை கண்ணால் கண்டவர்கள், அங்கவீனமானவர்கள் அவர்கள் எல்லோரும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தார்கள். 

அதுவும் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் மீது நாங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும். அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அந்த மக்கள் தங்கள் பிரதேசத்திலே வாழவும்ஆளவும் உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாங்கள் பேச்சுவார்த்தையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முதலாவது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம். ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு எங்களுடன் பேச வேண்டும் என்ற அக்கறை இருக்கவில்லை. நாங்கள் எல்லாம் வென்றுவிட்டோம். எல்லாம் முடிந்துவிட்டது என்ற சிந்தனையைக் கொண்டிருந்தார்கள். 

எனினும் சர்வதேச ரீதியில் இருந்துவந்த அழுத்தங்களினால் அமெரிக்காவின் அழுத்தத்தினால் அதனை விட அதிகமாக இந்தியாவின் நெருக்குதல் காரணமாக அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஜனாதிபதியுடன் நாங்கள் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரண்டு குழுக்கள் நியமிக்க அவர் ஏற்றுக்கொண்டார். ஒன்று அன்றாட பிரச்சினையாக இருக்கக் கூடிய எமது மண்ணில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை எங்களது நிலங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்பதற்காக அடுத்து சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதற்காக. போர்க் காலத்தில் போர் முனையில் சரணடைந்தவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதற்காக இன்றைக்கும் சட்ட பூர்வமற்ற முறையில் ஆயுதங்களைக் கொண்டுள்ள இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென்பதற்காக மீளக்குடியேற்றம் அவர்களது மீள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்க ஒத்துக்கொண்டது. பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநாதன் மற்றும் பலர் அங்கம் வகித்திருந்தனர். அரசியல் தீர்வு என்பதற்காக இன்னுமொரு குழு அமைக்கவும் ஒப்புக்கொண்டார்கள். இதில் தலைவர் சம்பந்தன் தலைமையில் சட்ட நிபுணத்துவம் கொண்டவர்களையும் இணைத்து அமைத்தோம்.

நாங்கள் அமெரிக்கா மற்றும் கனடா, லண்டனுக்கு சென்றபோது பல்வேறு குழப்பங்களும் பல்வேறு சந்தேக நிலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவால் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட, பொய்ப்பிரசாரங்கள் தமிழ் மக்களை நிலைகுலைய வைக்கவில்லை. அவர்கள் தெளிவாகவே இருந்தனர். வெளிநாடுகளில் வாழும் மக்களும் அங்குள்ள அமைப்புகளும் வட்டுக்கோட்டை தீர்மானம் உங்களால்தானே எடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த நாட்டிலே பேசுகின்றவர்கள், குழம்பியிருப்பவர்கள் யாராகவிருந்தாலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வெற்றிபெற்றதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சென்று சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கம். அங்கு கடமையை பொறுப்பேற்ற பின்னர் அந்த அரசியல் அமைப்பை எங்கள் கையால் எரிக்கும் வழக்கம் கூட எம்மிடம் இருக்கின்றது.  இலங்கை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே மகாராணிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. அந்த வரலாறுகளை எடுத்துக்காட்டினோம். தற்போது வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றபோதே நாங்கள் தமிழீழத்தை கோரமாட்டேன் நாட்டைப் பிரிக்கமாட்டேன் அதற்கு உதவியாக இருக்கமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். இன்று இந்த விமர்சனங்களைச் செய்கின்றவர்கள் இதனை மறுக்க முடியுமா. வெளியிலே தமிழீழத்தை பேசுவதற்கு யாரும் ஆயத்தமாகயில்லை. அதனை உச்சரிப்பதற்கு யாரும் ஆயத்தமாக இல்லை. அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றது. வெளிநாட்டிலே நாங்கள் பேசுகின்ற பேச்சுகளைப் பார்த்து இங்கு தீவிரவாதிகள் குரல்கொடுத்தார்கள். இங்கு நாங்கள் வருகின்றபோது கைது செய்யப்பட வேண்டும். விசாரணை செய்யப்பட வேண்டும் என்று குரல்கொடுத்தார்கள். எங்கள் கட்சியைத் தடை செய்வதற்கு அரசாங்கம் காத்துக்கொண்டிருக்கின்றது. இந்த மக்களோடு நாங்கள் ஒன்றாக இயங்குவதை அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம். வெளிநாட்டு அரசுகள் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு என்று உதவ வந்தாலும் அதை தாங்கள் செய்தது போன்று வெளிக்காட்டி எங்களைப் புறக்கணிக்கப்பார்க்கின்றார்கள்.

அரசியல் தீர்வில் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக இந்த மக்களுக்கு நன்மை பெற்றுவிடக்கூடாது என்று எங்களை இழுத்தடித்து மக்களை வெறுப்படையச் செய்து எங்களை ஒரு பயனற்றவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கும் எங்களால் தான் செய்ய முடியும் என்று மக்களுக்கு ஏதாவது ஒரு துண்டைப் போட்டு ஏமாற்றுவதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை வகுத்து எங்களுக்கு எதிராக செயற்படுவதைத் தான் அண்மைய செய்திகள் காட்டி நிற்கின்றன. 

சில தினங்களுக்கு முன்னர் காணி அதிகாரம் கொடுக்கமாட்டோம், பொலிஸ் அதிகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூக்குரலிட்டவர்கள். இன்று வெளிவரும் செய்திகளைப் பார்த்தால் தெரியும் அதனைப் பற்றி பேசவும் தயார் என்று கூறுகின்றனர்.

இன்று நடப்பது ஜனநாயக போர் என்பதற்கு அடுத்தபடியாக ஆயுதப்போராட்டம் அல்ல இராஜதந்திர போர் எங்கள் மண்ணிலே டைபெற்றுக்கொண்டிருப்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனது விளைவுகள்தான் அரசாங்கத்தை இன்று அச்சுறுத்தி நிற்கின்றன. ஐ.நா. செயலாளரும் ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி போர் முடிவடைந்ததாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள். 

ஜனநாயக விழுமியங்கள் ஜனநாயக அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முதலாவது சாராம்சம். மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் காக்கப்பட வேண்டும். அதன் மீறல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

இன்று சர்வதேச அரங்கிலே நிபுணத்துவம் மிக்கவர்கள். இராஜதந்திரிகள் போர்க்குற்றம் என்ற குற்றச் சுமத்தலோடு அரசாங்கம் பதில் சொல்லும் கடப்பாடு உடையது என்பதை நிரூபித்து அன்றும் இதேபோன்ற கடப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்று ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அதன் குழுவினால் இந்த அரசுக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள போர்க்குற்றம் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலே மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுநடத்த முன்வந்துள்ளது. அந்த போர்க்குற்றத்தில் இருந்துதப்பிப்பதற்குத் தான் இந்த இனப்பிரச்சினை தொடர்பில் ஏதாவது நடவடிக்கையெடுக்காவிட்டால் தனது நிலைமை மோசமாகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அரசாங்கம் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.

நாங்களும் சர்வதேச இராஜதந்திரிகளும் போர்க்குற்றம் சுமத்துவது மட்டுமல்ல அதற்கு ஈடாக இந்த நாட்டிலே இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும் இருக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் மிக கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளோம்.

இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அமெரிக்கா, கனடா, லண்டன் ஆகிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த போர்க்குற்றம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்பதை அறிய ஆவலுடன் இருந்தனர். இனப்பிரச்சினையின் தீர்வு எந்தளவுக்கு செல்கின்றது என்பதை அறிய அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

இங்கே கற்றுக்குட்டிகளாக ஒரு இலட்சியத்துக்காக போரிட்டவர்கள். துப்பாக்கிகளை அரசின் காலடியில் வைத்துவிட்டு ஏதோ முதலமைச்சராக வந்துவிட்டோம் என்று கொடி கட்டி பறப்பவர்கள் சம்பந்தனை விமர்சிக்கின்றனர். அவரின் அறிவு, ஆற்றல் அவர்களுக்கு புரியவில்லை. அமெரிக்க இராஜாங்க அமைச்சிலே கொள்கை வகுப்பாளர்களுக்கு மத்தியிலே நாங்களே ஆச்சரியப்படும் வகையில் ஆணித்தரமாக அவர் கருத்துக்களை தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை வெளியானதும் இந்த நாட்டிலே ஒரேயொரு அரசியல் கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் அந்த அறிக்கையினை வரவேற்றது என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
விரைவிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர், செயலாளர்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கிடையில் தான் அரசாங்கம் தாங்கள் பேசுவதற்கு ஆயத்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போரிலே நாங்கள் தோற்றுவிட்டோம் தமிழ் மக்களே தோற்றுவிட்டார்கள் அவர்களுடைய குரல் எழக்கூடாது என்று ஒவ்வொரு வீட்டிற்கும் இராணுவம் இருப்பதைப் போல எங்கள் மண் முழுவதும் இராணுவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என்று தென்னிலங்கைக்கு சொல்லிகொண்டு அங்கிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை காட்சிப்பொருட்களை பார்ப்பதற்கு அனுப்பு வதைப் போல எங்கள் பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தை நாங்கள் திருப்பிப்பெறமாட்டோம் முகாம்களை வைத்திருப்போம் என்று அரசாங்கம் சொல்கிறது. எங்கள் மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கைப்பற்றியிருக்கின்றது. இந்த இராணுவத்திற்கு யார் அமைச்சுப் பொறுப்பு கொடுத்தது. எங்கள் தீர்மானங்களில் முதன்மையானது எங்கள் மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதாகும்.

எதிர்காலத்தில் நாங்கள் ஒரு இயக்கத்தை வைத்திருப்பதாக இருந்தால் இதுவே அடிப்படையாகும். எமது வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நாங்கள் அரசுடன் பேச வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோமோ அதனடிப்படையில் தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த ஆணையை ஒவ்வொரு தேர்தல் சந்தர்ப்பத்திலும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதற்காக நாங்கள் அரசுக்கு அடிபணிந்துகொண்டு எங்கள் அடிப்படைகளை விட்டுக்கொடுத்து எந்த ஒரு தீர்வுக்கும் செல்ல மாட்டோம்.

நாங்கள் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாகாணத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் மத்திய அரசுக்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பவற்றை மிகத்தெளிவாக சொல்லியிருக்கின்றோம். மத்தியினுடைய அரசு மாகாணத்தினுடைய அரசு தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களில் தலையிடுவதற்கு இடமிருக்கக்கூடாது. சட்ட ஆக்கத்தில் நிறைவேற்று அதிகாரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவரவர் பிரிக்கப்பட்ட விடயங்களிலே நிறைவேற்றுவது சட்டத்தை ஆக்குவதில் அதிகாரம் சமமாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலத்தில் தான் இந்த  அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

நாங்கள் தனியான ஒரு இனம். எங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று சர்வதேச சட்டங்கள் சொல்கின்றன. வரலாற்று ரீதியாக ஒரு மொழியை கலாசாரத்தைக் கொண்ட இனம் தொடர்ச்சியாக நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்ற இனம் சுயநிர்ணய  உரிமையைக் கொண்டிருக்கிறது என்று சோவியத் தீர்மானித்தது. எங்களுக்கு இரண்டு அங்கங்கள் பொருத்தமாக இருந்தன. ஒன்று நாங்கள் முன்பு எங்கள் தேசத்தை ஆண்டவர்கள். மீண்டும் ஒருமுறை ஆள விரும்புகிறோம். இறைமை எங்களிடம் திரும்பியிருக்கிறது. அந்த இறைமையைப் பாவித்து எங்கள் மண்ணை ஆள்வதற்கு உரித்து உண்டு என்று சொல்கின்ற தத்துவம். இரண்டாவது சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் அடிப்படையில் மனிதனுக்கு மக்கள் கூட்டத்திற்கு இனத்திற்கு தேசிய இனம் என்று வர்ணிக்கக்கூடிய அந்த இனத்திற்கு இருக்கக்கூடிய சுயநிர்ணய உரிமை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினாலே ஏழு ஆண்டுகள் பரிசீலிக்கப்பட்டு புதிய ஒரு தீர்மானம் உருவாகியிருக்கிறது. சுதந்திரமடைந்த நாட்டிற்குள் ஒரு குடிமகனோ குடிமக்களோ இனமோ பிராந்தியக் குழுவோ அந்த நாட்டின் அரசியல் அமைப்புக்குள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை தங்கள் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காணவில்லை என்று சொல்வார்களானால் உள்நாட்டிலே அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அப்படிப் பெறாவிட்டால் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அரசுக்கும் எங்களுக்குமிடையில் நடக்கின்ற பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிதாக எங்கள் அடிப்படைகளை விட்டுக்கொடுக்காததாக இருக்கவேணடும்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு நாங்கள் அரசுக்கு முன்னால் தீர்மானங்களை வைத்தபோது அவர்கள் இன்று திணறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை ஜனாதிபதி சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்கு நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது. எங்களால் எதுவும் செய்ய இடமிருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் எங்களை செயலிழக்கச் செய்வதற்காக மக்கள் மத்தியிலே எங்கள் நல்லெண்ணத்தையும் மதிப்பபையும் உடைப்பதற்காக ராஜபக்ஷ எங்களை பிளவுபடுத்த நினைப்பதற்கு முன்னோடியாக எங்களிடம் இருப்பவர்களும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
51 விடயங்களை மிகத் தெளிவாக தமிழ் மக்களுடைய மாநிலத்திற்கு வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம். 12 விடயங்கள் மத்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். எங்களுடைய ஆழமான கருத்து இன்றைய அரசியல் ஒற்றையாட்சி அமைப்பில் நாங்கள் கொடுத்த விடயங்களுக்கு தீர்வுகாண முடியாது என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரியும்.

இவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் எப்படியாவது அரசியல் அமைப்புக்கு அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய பலம் எமது மக்கள் புலம்பெயர்ந்த மக்கள் சர்வதேசத்திலே எங்களுக்கு இன்று கிடைத்திருக்கின்ற அனுதாபம் ஆதரவு என்பவையாகும். இவற்றை இழக்காமல் எங்களுடைய மக்களின் விடிவுக்காக மிகக்கவனமாக இன்னுமொரு பேரழிவு எங்கள் மக்கள் மத்தியிலே ஏற்படாதவாறு ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்பி அதைப் பாதுகாத்து வழிநடத்துவதற்கும் போராடுவதற்கும் எமது இளம் சமுதாயத்தை நம்பி அவர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம்.

வடக்கிலிருந்து கிழக்கு வரை 95 வீதத்திற்குமேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. உள்ளூரிலே அவர்கள்தான் இருக்கிறார்கள்.ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இல்லாத அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் கவனமாக பேணிக்காக்க வேண்டும். அதனூடாக எங்கள்மக்களுடைய எதிர்கால நல்வாழ்க்கை எதிர்கால அபிவிருத்தி விடுதலைக்காக உழைப்பதற்கு அவர்களும் கட்சிக்கு ஈடாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாவார்கள். அந்தக் கடமைக்கு கட்டுப்பட்டவர்களாக மிகக் கவனமாக அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் இந்த அத்திவாரத்தை ஆட்சிபீடத்தை கவனமாகக் காப்பற்ற வேண்டும்.

நன்றி - தினக்குரல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment